பொய்யுரையாதவர்!

"பொயுரையாத தேவன் ஆதிகால முதல் நித்திய ஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம் பண்ணி" (தீத்து. 1:3).

நம் தேவன் உண்மையுள்ளவர்! தீத்துவிலுள்ள இந்த வேத பகுதி சொல்லுகிறது, "அவர் பொய்யுரையாத தேவன்" என்று, "அவர் எவ்வளவேனும் பொயுரையாத தேவன்" என்று எபிரெயரிலும் வாசிக்கலாம் (எபி. 6:18). இன்றைக்கு, உலகமெங்கும் பொய்யினால் நிரம்பியிருக்கிறது. மனிதர்களுடைய வாக்குறுதிகளை நம்ப முடியவில்லை. தேசங்கள், ஒன்றுக்கொன்று உடன்படிக்கை செய்யும்போது, பல தீர்மானங்களை எடுக்கிறார்கள். ஆனால், ஒன்றையும் நிறைவேற்றுவதில்லை. அரசியல் கட்சிகள், ஓட்டுக்காக அலைந்து திரியும்போது, ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள். "மணலை கயிறாக திரிப்பேன், வானத்தை வில்லாக வளைப்பேன்" என்று சொல்லுகிறவர்களை, தேர்தல் முடிந்த பின் காண முடிவதில்லை. சமுதாயமே, பொய்யினால் சீர்கெட்டு கிடக்கிறது.

அதே நேரம், நம்முடைய ஆண்டவரைப் பாருங்கள். அவர் எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன். வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவர். பொய்யுரையாத தேவனை, நீங்கள் ஆயிரம் கோடி முறை நம்பலாம். பொயுரையாத தேவன்; உண்மையுள்ளவர்; என்றெல்லாம் பெயர் பெற்றிருக்கிற கிறிஸ்துவுக்கு இன்னொரு பெயருமுண்டு. அது, "சத்தியமுள்ளவர்" என்பதாகும் (1 யோவான் 5:20). "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்" (யோவான் 14:6) என்று அவர் சொல்லி இருக்கிறார்.

இன்று, உலகத்தில் ஆயிரக்கணக்கான மதங்களிருக்கின்றன. பல மதங்கள், தத்துவ ஞானத்திலிருந்து தோன்றியவைகளாகும். பல மதங்கள், புராணங்களிலிருந்து தோன்றியவைகளாகும். ஆனால், நம் ஆண்டவரோ சத்தியமுள்ளவர். கிறிஸ்தவ மார்க்கம், சத்தியத்திலிருந்து தோன்றிய சத்திய மார்க்கமாயிருக்கிறது. வேத புத்தகம் "சத்திய வேதாகமம்" என்றும் அழைக்கப்படுகிறது. "சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்" (யோவான் 8:32) என்பது வாக்குத்தத்தம்.

இந்தியாவை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக, அசோகர் என்கிற சக்கரவர்த்தி அரசாண்டு வந்தார். சாஞ்சியில் பெரிய ஸ்தூபி ஒன்றை எழுப்பினார். அதன் உச்சியில், "சத்திய மேவ ஜெயதே" என்கிற வார்த்தைகளைப் பொறித்தார். "சத்தியம் தான் ஜெயம்பெறும்" என்பது அதனுடைய அர்த்தம். "சத்திய மேவ ஜெயதே" என்ற பதத்தை இந்திய அரசாங்கம் எடுத்து, அதை அரசாங்கத்தின் குரலாக வைத்திருக்கிறது. நாணயங்களிலும், ரூபாய் நோட்டுகளிலும் அந்த வார்த்தை அச்சிடப்பட்டிருக்கிறது, "சத்திய மேவ ஜெயதே" என்ற வார்த்தையை தமிழக அரசு மொழி பெயர்த்தபோது, "வாய்மையே வெல்லும்" என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள்.

இதனுடைய அர்த்தம் என்ன? சத்தியமுள்ளவர்தான் வெற்றி பெறுவார். உலகத்தில் ஆயிரக்கணக்கான மதங்களிருந்தாலும், சத்தியமுள்ள இயேசுகிறிஸ்துவே ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவுமாய் வீற்றிருப்பார். இந்த உலகம் முழுவதையும் அவர் உண்மையாய், நேர்மையாய், சத்தியமாய் அரசாளுவார் என்கிற நம்பிக்கையைப் பற்றி தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும், விசுவாசமும் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாகும்படி, நீங்களும் சத்தியவசனமாகிய சுவிசேஷத்தை முழங்குவீர்களா?

நினைவிற்கு:- "உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம்" (சங். 119:160).