ஆசீர்வாதமான மழை!

"நான் அவர்களையும் என் மேட்டின் சுற்றுப்புறங்களையும் ஆசீர்வாதமாக்கி, ஏற்ற காலத்திலே மழையைப் பெயப்பண்ணுவேன்; ஆசீர்வாதமான மழை பெயும்" (எசேக். 34:26).

கர்த்தர் உங்கள் குடும்பத்தின் மீது, தொழிலின் மீது, பிள்ளைகளின் வாழ்க்கை மீது, வியாபாரத்தின் மீது, ஊழியத்தின் மீது ஆசீர்வாதமான மழையைப் பெயப் பண்ணுவார். கர்த்தர், ஆசீர்வாதமான மழையைப் பெய்யப்பண்ணும்போது, உங்க ளுக்கு பலன் கிடைக்கும். வேதம் சொல்லுகிறது, "வெளியின் விருட்சங்கள் தங்கள் கனியைத்தரும், பூமி தன் பலனைக் கொடுக்கும், அவர்கள் தங்கள் தேசத்தில் சுக மாயிருப்பார்கள்" (எசேக். 34:27). மழை பெய்வதால், அநேக இடங்களில் செழுமையும், பசுமையும் உண்டாகிறது. சில இடங்களில் சேதமும், நஷ்டமுமுண்டாகிறது. 2015-ம் ஆண்டு, தமிழகத்தில் வரலாறு காணாத மழை பெய்து அழிவையும், நஷ்டத்தையும் விளைவித்தது. ஆனால், கர்த்தர் ஆசீர்வாதமான மழையை பெய்யப்பண்ணும்போது, பூமி தன் பலனை மிகுதியாய் கொடுக்கும்.

பலனை, உங்களுக்கு யாராலும் தர முடியாது. நீங்கள் எவ்வளவு பிரயாசப் பட்டாலும், அதை வாய்க்கச் செய்கிறவர் கர்த்தர்தான். நீங்கள் ஒரு காரியத்தை செய்யும்போது, அதற்குரிய பலனை, உங்களுடைய சுயமுயற்சியினால் எடுக்க முடியாது. கர்த்தர்தான், அதற்குரிய பலனை உங்களுக்குத் தருகிறவர். சிலர், "நான் இரவு பகலாக வேலை செய்கிறேன், இரவு பகலாக தொழில் செய்கிறேன், என் பிள்ளைகள், இரவு பகலாக படிக்கிறார்கள். ஆனாலும், ஒரு பலனுமில்லையே" என்று சொல்லுவார்கள். ஆனால், நீங்கள் கர்த்தரை முன்வைத்து எந்த காரியத்தை செய்தாலும், கர்த்தர் நிச்சயமாகவே உங்களுக்குப் பலனளிப்பார். கர்த்தர் என்னென்ன காரியங்களில், உங்களுக்குப் பலன் தருவார்? உங்கள் கண்ணீருக்கு பலன் தருவார். கிரியை களுக்குப் பலன் தருவார். கர்த்தரைத் தேடுகிறதிலும் பலன் தருவார். நீங்கள் உண்மையாய் கர்த்தரைத் தேடும்போது, கர்த்தர் எல்லாவற்றிலும் உங்களுக்கு பலனை தந்தருளுவார். இன்றைக்கு கர்த்தர் உங்களைப் பார்த்து: "கண்ணீரோடு இருக்கிற உங்களுக்கு, ஆசீர்வாதமான மழையைப் பெய்யப்பண்ணுவேன். நீங்கள் ஆசீர்வாதமான பலனைக் காண்பீர்கள்" என்று சொல்லுகிறார்.

இரண்டாவது ஆசீர்வாதம், "சுகம்" என்னும் ஆசீர்வாதம். நீங்கள் பெலவீனத் தோடும், வியாதியோடும் இருக்கிறீர்களா? "என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்" (2 கொரி. 12:9) என்று, கர்த்தர் சொல்லுகிறார். உங்கள் பெலவீனத்தின்மேல், கர்த்தர் ஆசீர்வாதமான மழையைப் பெய்யப் பண்ணுவார். அப்போது, நீங்கள் "சுகம்" என்னும் பெற்றுக் கொள்வீர்கள். ஆம்! தேவபிள்ளைகளே, ஆசீர்வாதமான மழை பெயும்போது, தேவன் சேழிப்பைக் கட்டளையிடுவார். உங்களுடைய வறுமை நீங்கிப்போகும். வறட்சி நீங்கிப்போகும். பற்றாக்குறை, எல்லாமே மாறிப்போகும். கர்த்தர் உங்களுடைய வாழ்க்கையிலே, ஆசீர்வாதமான மழையைப் பெய்யப்பண்ணுவார். நீங்கள், உங்களுக்கும் மற்றவர்களுக்கும் விளங்குவீர்கள்.

நினைவிற்கு:- "கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்" (உபா. 28:8). 4 பிப்ரவரி 2019