விடுவிப்பேன்!

"அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்" (சங். 91:14).

கர்த்தரை நீங்கள் வாஞ்சையோடு தேடுவீர்களென்றால், இனி கட்டுண்டவர் களாய் இருக்கப்போவதில்லை. சிறைப்பட்டவர்களாய் தவிக்கப்போவதில்லை. பில்லிசூனியத்திலும், சாபங்களிலும் சிக்கிக் கொண்டிருக்கப்போவதில்லை. இன்றைக்கு ஜனங்கள், எத்தனையோ பிரச்சனைகளுக்குள் அடிமைகளாக விடுதலை யில்லாமல் தவிக்கிறார்கள். சம்பாதிக்கிற சம்பாத்தியத்தையெல்லாம் மாத்திரை, மருந்து, டாக்டர்களுக்கென்று செலவழிக்கிறார்கள். ஏதோ ஒன்றில் சத்துரு சிறை வைத்து, முன்னேற விடாதபடித் தடுக்கிறான்.

சிலர், தங்களுடைய பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள். ஆனால், பிள்ளை களுக்கு படிப்பில் நாட்டமில்லாமல், மதுபானத்திற்கும், கஞ்சா போன்ற போதை வஸ்துகளுக்கும் அடிமைகளாகி, வாழ்க்கையை பாழாக்கிவிடுகிறார்கள். நீங்கள் என்ன பிரச்சனையில் தவித்தாலும், உங்களுடைய பாரத்தை கர்த்தர்மேல் வைத்துவிட்டு, அவரை நேசிக்க, அவரைத் துதிக்க, அவர்மேல் வாஞ்சையாயிருக்கத் தீர்மானி யுங்கள். அப்பொழுது, கர்த்தர் நிச்சயமாகவே உங்களுடைய எல்லாப் பிரச்சனை களிலிருந்தும், போராட்டங்களிலிருந்தும் விடுதலையைத் தந்தருளுவார். "ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன்; நீ என்னை மகிமைப்படுத்துவாய்" (சங். 50:15) என்று கர்த்தர் சொல்லுகிறார்.

இஸ்ரவேல் ஜனங்கள், நானூற்று முப்பது வருடங்கள் எகிப்திலே அடிமைகளாய் இருந்தார்கள். பார்வோன் ஒருபக்கம் ஒடுக்கினான். அவர்களை, வேலை வாங்குகிற ஆளோட்டிகள் ஒடுக்கினார்கள். ஆண் குழந்தைகள் பிறந்தால், நதியில் போட்டுவிட வேண்டுமென்ற சட்டம் இருந்தது. அப்போதுதான், அவர்கள் வாஞ்சையாய் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள். கர்த்தர், இரட்சகனாக மோசேயை எழும்பப் பண்ணினார். பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை, இஸ்ரவேலர்கள் தங்கள் நிலைக்கால்களிலே பூசியபோது, எகிப்தின் எல்லா அடிமைத்தனத்திலிருந்தும் அவர்கள் விடுதலையாக்கப்பட்டார்கள்.

இன்றைக்கு மனிதர், "நான் உங்களை விடுவிப்பேன்" என்று வாக்களிக்கலாம். அரசாங்கங்கள்கூட, "உங்களுக்கு ஆபத்தா? இந்த எண்ணுக்கு டெலிபோன் செய்யுங்கள். சாலையோர விபத்தா? உங்கள் வீடு தீப்பிடித்து விட்டதா? தீயணைப்புப் படையினருக்கு இந்த எண்ணுக்கு போன் செய்யுங்கள்" என்றெல்லாம் சொல்லுவதுண்டு. பல வேளைகளில், அப்படி டெலிபோன் செய்தால், போனை எடுப்பதற்கு கூட யாரும் இருக்கமாட்டார்கள்.

வனாந்தரத்தில் குழந்தையை வைத்துக்கொண்டு, ஆகார் தவியாய் தவித்தாள். தண்ணீருமில்லை. உணவுமில்லை. அவள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, கர்த்தர் மட்டுமே, வனாந்தரத்தில் நீரூற்றை கட்டளையிட்டார். அவளையும், குழந் தையையும் காப்பாற்றினார். மாத்திரமல்ல, கர்த்தர்மேல் வாஞ்சையாயிருந்த தானி யேலை, சிங்கக்கெபியினின்றும், சிங்கத்தின் வாயினின்றும் கர்த்தர் தப்புவித்தார் அல்லவா? தேவ பிள்ளைகளே, அது போலவே, கர்த்தர்மேல் வாஞ்சையாயிருக்கிற உங்களையும், கர்த்தர் விடுவித்து, கண்மணிபோல பாதுகாத்து நடத்தூர். கர்த்தரிடத் தில் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு பெலத்தோடும் அன்பு கூருங்கள்.

நினைவிற்கு:- "தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்" (சங். 46:1).