மறுஉத்தரவு அருளுவேன்!

"அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான்; நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய் வேன்" (சங். 91:15).

நீங்கள் கர்த்தர்மேல் வாஞ்சையாயிருந்தால், நிச்சயமாகவே கர்த்தர் உங்களுடைய ஜெபத்துக்குப் பதிலளிப்பார். அவர் ஜெபத்தைக் கேட்கிறவர் மட்டுமல்ல, ஜெபத்திற்குப் பதிலளிக்கிறவரும்கூட.

அவர் பேசாத கல்லோ, மண்ணோ அல்ல. அவர் ஜீவனுள்ளவர். பாகால் தீர்க்க தரிசிகள், தங்கள் தெய்வம் அவர்களுக்கு பதில் கொடுக்கும் என்று, காலையிலிருந்து மாலைவரை, தங்கள் சரீரங்களை குத்தி கிழித்துக்கொண்டு, "பாகாலே, பாகாலே" என்று சத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த தெய்வத்திடமிருந்து, ஒரு பதிலும் கிடைக்கவில்லை. ஆனால், ஜீவனுள்ள தேவனை ஆராதித்த எலியா, கர்மேல் பர்வதத்தின் பலிபீடத்தின் மேல் வந்து நின்று, ஒரு சிறிய ஜெபம் செய்த போது, உடனேயே கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கி வந்து, பலிபீடத்தில் இருந்ததை பட்சித்துப் போட்டது.

அப்பொழுது "அக்கினியால் உத்தரவு அருளுகிற தெய்வமே தெய்வம்" என்று ஜனங்கள் ஆர்ப்பரித்தார்கள். அவர்கள், கர்த்தரை தங்கள் தெய்வமாய் ஏற்றுக் கொண்டார்கள். தேவபிள்ளைகளே, நீங்கள் எந்த நேரமானாலும் கர்த்தரை நோக்கிக் கூப்பிடலாம். அவருடைய கிருபாசனங்களும், அவருடைய இருதயமும் உங்களு டைய ஜெபத்துக்காக, எப்பொழுதும் திறந்தேயிருக்கின்றன. இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை, தூங்குவதுமில்லை.

இஸ்ரவேல் ஜனங்கள், எகிப்தின் அடிமைத்தனத்தின் வேதனையிலே, கர்த்தரை நோக்கிக் கதறினார்கள், பெருமூச்சுவிட்டார்கள். கர்த்தர் மோசேயை அனுப்பி, இஸ்ரவேலரை விடுதலையாக்கினார் (யாத். 2:23). உங்களுக்கு, "பாவப் பழக்க வழக்கத்திலிருந்து, சாபங்களிலிருந்து, மந்திரக்கட்டுகளிலிருந்து விடுதலை வேண்டுமா?" கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள்.

ஒரு தாயின் கண்கள், தன் மேலேயே பதிந்திருக்கிறது போல, கண்கள் உங்கள் மேல் கர்த்தருடைய அன்பு தாயினும் மேலான அன்பு. உங்களுடைய ஜெபத்துக்கு, மறுஉத்தரவு அருளிச் செய்யாமலிருப்பாரோ? "அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுஉத்தரவு கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்" (ஏசா. 65:24) என்று வாக்குப்பண்ணியிருக்கிறார் அல்லவா? இன்றைக்கு, இயேசுகிறிஸ்து உங்கள் கரங்களைப் பிடித்து, என் பிள்ளைகளே, "என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும், அதை நான் செய்வேன்" என்று வாக்களிக்கிறார் (யோவா. 14:14).

குழந்தையில்லாமல் மலடியாயிருந்த அன்னாள், தேவ சமுகத்துக்கு வந்து கர்த்தருடைய ஆலயத்தில் கண்ணீர் சிந்தினபோது, கர்த்தர் அந்த ஜெபத்தைக் கேட்டு தீர்க்கதரிசியாகிய சாமுவேலை மட்டுமல்ல, இன்னும் ஐந்து பிள்ளைகளைக் கட்டளையிட்டு கண்ணீரை துடைத்தார் அல்லவா? தேவபிள்ளைகளே, சோர்வடை யாமல் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள். வேதம் சொல்லுகிறது: "கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்" (ஏசா. 55:6).

நினைவிற்கு :- நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்" (யோவா. 15:7)