ஒத்தாசை வரும்!

"எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்" (சங். 121:1,2).

அநேகர் இந்த சங்கீதத்தை மனப்பாடமாக சொல்லுவார்கள். ஆனால் மனப்பாடம் செய்கிறவைகளை, நீங்கள் அனுபவத்தில் கொண்டு வரவேண்டும். வாக்குத்தத் தங்கள் அனைத்தும், உங்களுடைய அநுபவத்துக்காகவே கொடுக்கப்பட்டிருக்கின்றன. இங்கே, கர்த்தர் வாக்குத்தத்தமாக "ஒத்தாசை வரும்" என்று சொல்லுகிறார். ஆகவே தேவபிள்ளைகளே, கர்த்தருடைய பர்வதங்களுக்கு நேராக உங்களுடைய கண்களை ஏறெடுங்கள். கைகளை உயர்த்தித் துதியுங்கள். உங்களுடைய இருதயத்திலிருந்து துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுங்கள். அப்பொழுது வானத்தையும், பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து உங்களுக்கு ஒத்தாசை வரும்.

தாவீதுக்கு, கர்த்தருக்கு நேராய் தன்னுடைய கரங்களை விரிக்கிற அனுபவ மிருந்தது. "தேவரீர் சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிறவர், அதின் அலைகள் எழும்பும்போது அவைகளை அடங்கப்பண்ணுகிறீர்" (சங். 89:9). "என் கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன்; வறண்ட நிலத்தைப்போல் என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது" (சங். 143:6) என்றார். ஆலயத்துக்கு, பயபக்தியோடு வருவது ஒரு அனுபவம். முழங்கால்படியிட்டு, ஜெபிப்பது ஒரு அனுபவம். ஸ்தோத்திரபலியாகிய துதிகளை ஏறெடுப்பது, இன்னொரு அனுபவம். கைகளை ஏறெடுத்து, நேராய் உள்ளத்தை உயர்த்துவதும், கைகளை அசைத்து அசைவாடும் பலியாக ஒப்புக்கொடுப்பதும் இன்னொரு அனுபவமாகும்.

நீங்கள் ஆவிக்குரிய அனுபவங்களை அடைவதற்கு முன்பாக, பாவங்களை உங்கள் வாழ்க்கையை விட்டு அகற்றிப் போடுங்கள். அது உங்களை நோக்கி வருகிற தேவ ஒத்தாசையை தடுக்கக்கூடியது. ஏசாயா தீர்க்கதரிசி சொல்லுகிறார்: "உங்கள் அக்கிரமங்களே, உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே, அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது" (ஏசா. 59:2).

பாருங்கள்! தாவீது, பாவ அறிக்கை செய்து, முகத்தைத் தேடலானார். பாவ மன்னிப்பையும், இரட்சிப்பின் சந்தோஷத்தையும், மீண்டும் பெற்றுக் கொண்ட தாவீது: "என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று என் இருதயம் உம்மிடத்தில் சொல் லிற்று" (சங். 27:8) என்று சொல்லுகிறார்.

ஒரு குழுவினர் கிராமங்களில் சுற்றி நடந்து, சுவிசேஷத்தை அறிவித்து விட்டு, களைப்போடு, டீ குடிப்பதற்காக ஒரு சிறிய டீ கடைக்கு வந்தார்கள். சிலர், அங்கி ருந்த பொறைகளையும், பட்டர் பிஸ்கட்டையும் வாங்கி சாப்பிட்டார்கள். அப்போது, எங்கிருந்தோ வந்த ஒரு ஏழைச் சிறுமி, அவர்கள் அருகிலே வந்து நின்று, அவர்கள் கையிலிருந்த பிஸ்கட்டுகளையே பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தப் பார்வை எல்லோருடைய உள்ளத்தையும் பரிதாபப்படச் செய்தது. அவளுக்கு கொஞ்சம் பிஸ்கட்டுகளை வாங்கிக் கொடுத்ததும், அவள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி!

நம்முடைய தேவன் மனதுருக்கமும், அன்பும் தயவுமிக்கவர். அவர் பிள்ளை களாகிய நீங்கள் அவரை விசுவாசத்தோடும், எதிர்பார்ப்போடும் நோக்கிப் பார்க்கும் போது, அவர் உங்களுக்கு மனதிரங்காலும், ஒத்தாசை செய்யாமலும் இருப்பாரோ?

நினைவிற்கு:- "அவர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து உமக்கு ஒத்தாசையனுப்பி, சீயோனி லிருந்து உம்மை ஆதரிப்பாராக" (சங். 20:2).