கண்களில் கிருபை!

"நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது" (ஆதி. 6:8).

இந்த உலகத்தில் பலவகையான கண்கள் உண்டு. ஒரு மனிதன் எப்படிப்பட்டவன் என்பதை, அவனுடைய கண்கள் எளிதாக வெளிப்படுத்திவிடும். குடிகாரனின் கண்கள், போதையினால் நிரம்பியிருக்கும். கோபக்காரனின் கண்களில் அனல் பறக்கும். மூர்க்கனின் கண்கள், கொலைவெறியைக் காட்டும். எரிச்சல் உள்ளவனின் கண்கள், வெறுப்பை உமிழ்ந்துகொண்டிருக்கும். இன்னும், தீய கண்களும், வன்கண்களும் ஏராளமுண்டு. ஆனால் கர்த்தரோ, கிருபையின் கண்களையுடையவர்.

வேதத்தில், பல பரிசுத்தவான்களுக்கு கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது என்பதைக் காணலாம். தாவீதுக்கு, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது (2 சாமு. 15:25). ஒருவேளை, மனுஷருடைய கண்களிலே உங்களுக்கு தயவோ, இரக்கமோ, ஒத்தாசையோ கிடைக்காமலிருக்கலாம். ஆனால் கர்த்தருடைய கண்களோ, அளவற்ற கிருபை பொருந்தினவைகளாய் இருக்கின்றன.

கர்த்தருடைய கண்கள், ஏதேன் தோட்டத்தில் ஒளிந்திருந்த ஆதாமைத் தேடி வந்தது. யோனாவும் கூட, கர்த்தருடைய கண்களுக்கு மறைவாக ஓட நினைத்தார். எனவே, அவர் நினிவேக்குப் போகாமல், தர்ஷீசுக்குப் போகும்படி கப்பல் ஏறி, கப்பலின் கீழ்த்தட்டில் போய்ப் படுத்துக்கொண்டார். கர்த்தருக்கு மறைவானது ஒன்றுமில்லை என்பதை, இவர்கள் இருவருமே உணரவில்லை. ஒரு மனிதன் கழுகைப்போல உயரப் போனாலும், நட்சத்திரங்களுக்குள்ளே கூட்டைக் கட்டினாலும், கர்த்தருடைய கண்கள் அவனைக் காணத் தவறுவதில்லை.

வேதம் சொல்லுகிறது: "மனுஷனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப் பார்க்கிறார்" (நீதி. 5:21). "கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப் பார்க்கிறது" (நீதி. 15:3).

கர்த்தருடைய கிருபை பொருந்தின கண்கள், குஷ்டரோகியை மனதுருக்கத்தோடு நோக்கிப் பார்த்து குணமாக்கியது (மத். 8:1-3). அதுமாத்திரமல்ல, மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல தொய்ந்துபோனவர்களும், சிதறப்பட்டவர்களுமாய் இருந்த திரளான ஜனங்களையும், மனதுருக்கத்தோடு நோக்கிப் பார்த்தது (மத். 9:36).

தேவபிள்ளைகளே, உங்கள் கண்கள் கர்த்தரை அன்போடு நோக்கிப் பார்க்கட்டும். "இதோ, வேலைக்காரரின் கண்கள், தங்கள் எஜமான்களின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், வேலைக்காரியின் கண்கள் தன் எஜமாட்டியின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரக்கஞ் செய்யும்வரைக்கும், எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது" (சங். 123:2).

கர்த்தருடைய கண்களிலே உங்களுக்குக் கிருபை கிடைத்திருக்கிறபடியால், உங்களுடைய வாழ்க்கையை பரிசுத்தத்தோடு பாதுகாத்துக்கொள்ளுங்கள். உங்கள் ஒவ்வொரு அவயவமும், பரிசுத்தமாய் இருக்கட்டும். உலக நேசத்தையும், உலக அன்பையும், இச்சைகளையும் உங்கள் கண்களைவிட்டு அப்புறப்படுத்துங்கள். மாயையைக் காணாதபடி, உங்கள் கண்களை பிரதிஷ்டை செய்யுங்கள். "ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவை களெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்" (1 யோவான் 2:16).

நினைவிற்கு:- "கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்" (கலா. 5:24).