அருளப்பட்ட கிருபை!

"கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்" (2 தீமோ. 1:9).

ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு கிருபை அருளப்பட்டிருக்கிறது. கிறிஸ்து நமக்கு கிருபையைக் கொண்டு வந்தார். அவர் "கிருபையினாலும், சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்" (யோவா. 1:14).

நீங்கள் பல வேளைகளில் ஆண்டவரைப் பார்த்து: "ஆண்டவரே, எனக்கு கிருபை தாரும், கிருபை தாரும்" என்று கேட்கலாம். ஆனால் கர்த்தர், ஆதிகாலம் முதற்கொண்டே உங்களுக்குக் கிருபையைக் கொடுத்து விட்டார். உலகத்தோற்றத்திற்கு முன்பாகவே, உங்களைக் கிருபையினால் நிரப்பியிருக்கிறார்.

கிறிஸ்து இயேசுவின் மூலமா, கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த அந்தக் கிருபையை நீங்கள் சுதந்தரித்துக் கொள்ளுங்கள். அந்தக் கிருபையை நீங்கள் ஏற்றுக் கொண்டு, விசுவாசத்தினாலே அந்தக் கிருபைக்கு சுதந்தரவாளிகளாகிவிட வேண்டும். கர்த்தர் ஆதிமுதற்கொண்டே, அந்தக் கிருபையை உங்களுக்குக் கொடுத்திருப்பது எத்தனை ஆச்சரியமானது!

கர்த்தர் மனிதனை சிருஷ்டிப்பதற்கு முன்பாகவே, வானத்தையும் பூமியையும் அவனுக்காக சிருஷ்டித்தார். அவன் வெளிச்சத்திலே மகிழ்ந்து களிகூரட்டும் என்று சூரிய, சந்திர, நட்சத்திரங்களையும் உண்டாக்கினது மல்லாமல், அவன் சுவையான கனிவர்க்கங்களை புசிக்கட்டும் என்று, சகலவிதமான செடி, கொடி, மரங்களையும் உண்டாக்கினார். அவனுக்கு உதவியாயிருக்கும்படி, சகல பறவைகளையும், மிருகங்களையும், மீன்களையும் சிருஷ்டித்தார். அது ஆதி முதற்கொண்டு, மனுஷன் மேல் தேவன் பாராட்டின கிருபையாகும்.

"கிருபை" என்பது, தேவனுடைய திவ்ய வல்லமையை உங்களுடைய வாழ்க்கையிலே கொண்டு வருவதாகும். கிருபையை உங்கள்மேல் பொழிந்தருளுவது தேவனுடைய சுபாவம். அது அவருடைய குணாதிசயம். அந்தக் கிருபை, ஒருநாள் அப். பேதுருவை சந்தித்தது. மீன்பிடித்துக் கொண்டிருந்தவனை, மனுஷனைப் பிடிக்கிற வனாக்கிற்று. சாதாரணமான மனுஷனை மேன்மையான சீஷனாக்கிற்று. படிப்பறிவில்லாத அவனை, வல்லமையான ஊழியக்காரனாக்கிற்று. "கிருபை" என்பது, தகுதியில்லாத ஒரு மனுஷனைத் தேடி வருகிற, "கர்த்தருடைய தயவு" ஆகும். அதுவே, உளையான சேற்றிலிருந்து உங்களைத் தூக்கியெடுக்கிற வல்லமை; பாவிகளில் பிரதான பாவியையும் பரிசுத்தவானாய் மாற்றக்கூடியது வல்லமை.

நீங்கள் எந்த சூழ்நிலையிலிருந்தாலும், இக்கட்டான பிரச்சனையில் சிக்கியிருந்தாலும், கண்ணீரின் பள்ளத் தாக்கை உருவ நடந்தாலும், கவலைப்படாதிருங்கள். அந்தக் கிருபை உங்களைக் காத்து வழிநடத்தும். அப். பவுலும், சீலாவும் சிறைச்சாலையிலே ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடியபோது, அந்தக் கிருபை யினால் தான், சிறைச்சாலையின் கதவுகள் திறவுண்டன; எல்லாருடைய கட்டுகளும் கழன்று போயின. தேவபிள்ளைகளே, இன்று நீங்கள் நிலை நிற்பது, தேவனுடைய கிருபையேயாகும். கிருபையின் தேவனை நன்றியோடு ஸ்தோத்தரியுங்கள். கிருபையை உறுதியாப் பற்றிக்கொள்ளுங்கள். அந்தக் கிருபை உங்களைக் கடைசிவரை வழி நடத்தும்.

நினைவிற்கு:- "என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்" (சங். 23:6).