சந்தித்த கிருபை!

"தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக் கொடுக்கிறேன்" (அப். 20:32).

தேவனுடைய வார்த்தைக்கு, "கிருபையுள்ள வசனம்" என்பது பெயர். அவர் கிருபையின் வசனத்தை அனுப்பி உங்களைக் குணமாக்குகிறார், உயிர்ப்பிக்கிறார். கர்த்தருடைய இந்த வசனத்தின் மூலமாக, நீங்கள் இன்னும் அதிகமான கிருபைகளைப் பெற்றுக் கொள்ளுவீர்கள்.

ஒருமுறை சார்லஸ் பின்னி என்ற சுவிசேஷகர், "பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று" (ரோமர் 5:20) என்ற வசனத்தைக் குறித்துப் பிரசங்கித்தார். இதை ஒரு பயங்கரமான கொள்ளைக் காரன், தூரத்திலே நின்று கேட்டுக் கொண்டிருந்தான். அவர் பிரசங்கித்த வசனம், அவனுக்குள் ஆழமாய்க் கிரியை செய்தது. அவன் கூட்டம் முடிந்ததும் சார்லஸ் பின்னியிடம் வந்து, "நீங்கள் சொன்ன கிருபை, என்னை சந்திக்க முடியுமா? உங்கள் இயேசுவால் என்னை இரட் சிக்க முடியுமா?" என்று கேட்டான்.

மட்டுமல்ல, அவன் தன்னுடைய குதிரையின் மேல் அந்த ஊழியரை ஏற்றிக் கொண்டு, அடர்ந்த காட்டுப் பகுதியிலுள்ள ஒரு பாழடைந்த பங்களாவுக்குள் சென்று, தன்னுடைய இருப்பிடத்தைக் காண்பித்தான். அந்த இடம் முழுவதும் சாராய துர்நாற்றமடித்துக் கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான காலியான சாராய பாட்டில்கள் குவிந்து கிடந்தன. அவன், "குடிக்காமல் என்னால் அரை மணி நேரம் கூட இருக்கவே முடியாது. இவ்வளவு பெரிய குடிகாரனை இயேசு சந்திப்பாரா?" என்று வினவினான்.

பின்பு அவரை, இன்னும் அடர்ந்த காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று, அங்கே உள்ள குழியிலே, தான் ஒளித்து வைத்திருந்த பயங்கரமான ஆயுதங்களையெல்லாம் அவருக்குக் காண்பித்தான். அங்கேயிருந்த நூற்றுக்கணக்கான மண்டை ஓடுகளையும் காண்பித்து, "இவர்களெல்லாம் என்னால் கொலை செய்யப்பட்டு மரித்தவர்கள். இவ்வளவு கொடூரமான எனக்கு, இயேசு கிருபையளிப்பாரா?" என்றான்.

பின்பு, மலையின் மேலிருக்கும் அவனுடைய வீட்டிற்கு அவரை அழைத்துச் சென்றான். அங்கே போய் கதவைத் தட்டினான். ஒரு குழந்தை பயந்து போய் கதவைத் திறந்தது. உள்ளே, எலும்பும் தோலுமாக பரிதாபமாய் ஒரு பெண்மணியும் இருந்தாள். அவர்களைக் காண்பித்து, "அதுதான் என் மனைவி. இந்தக் குழந்தை என்னுடைய குழந்தை. நான் என் மனைவியை அடித்து நொறுக்கினதினால் அவள் எழுந்திருக்கக் கூட பெலனற்று, படுத்த படுக்கையாக இருக்கிறாள். இப்படிப்பட்ட பாவியாகிய என்னை இயேசு இரட்சிப்பாரா?" என்று கேட்டான்.

சார்லஸ் பின்னி, அந்த கொலைகாரனை அணைத்துக் கொண்டு, "உனக்காகவும் இயேசு இரத்தம் சிந்தினாரே; நீ அவருடைய பிள்ளை, அவருடைய கிருபைக்குள் வந்து விடு. இப்பொழுதே தன் காயப்பட்ட கரத்தினால் உன்னை அரவணைத்து ஏற்றுக்கொள்கிறார்" என்று சொன்னதும், அந்த வார்த்தைகள் அவனுடைய உள்ளத்தில் மின்சாரம் போல பாய்ந்தன. "கிறிஸ்துவே, என்னை மன்னியும்; கிருபையாய் என்னை ஏற்றுக்கொள்ளும்" என்று கெஞ்சினான். அப்போது, அந்த கிருபை அவனை சந்தித்தது. தேவபிள்ளைகளே, அதே கிருபை இன்றைக்கு உங்களையும் சந்திக்கிறது. அவருடைய கிருபை உங்களுக்குப் போதுமானது.

நினைவிற்கு:- "பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர் கள் மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது" (சங். 103:11).