போதும் கிருபை!

"என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்" (2 கொரி. 12:9).

பிரதான அப்போஸ்தலராய் இருந்த பவுலுக்கு மேன்மை பாராட்ட பல காரியங்கள் இருந்தன. அவர் ஏராளமான சபைகளை ஸ்தாபித்து, ஆவிக்குரிய வரங்களையெல்லாம் செயல்படுத்திக் காண்பித்தார். ஆனாலும், அவருடைய வாழ்க்கையிலே அவருக்கு ஒரு "முள்" இருந்தது. அதைக் குறித்து அவர் ஊக்கமாய் ஜெபித்தபோது, கர்த்தரோ, "என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்" என்று சொன்னார். இந்த வார்த்தையை பற்றிக்கொண்ட பவுல், தன்னுடைய பலவீன நேரங்களில் கர்த்தருடைய பலன் பூரணமாய் விளங்க ஒப்புக்கொடுத்ததுமல்லாமல், அதைக் குறித்து சந்தோஷமாய் மேன்மை பாராட்டுவேன் என்றார்.

ஒரு சிறுவன், தன்னுடைய நண்பனின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ளும்படி, புறப்பட்டான். அது ஒரு இரவு நேரம். பயங்கரமான பனி பெய்து கொண்டிருந்த நேரம். தகப்பனுக்கு மகனை தனியே அனுப்ப விருப்பமில்லை. மகன் வருந்தி கேட்டதினிமித்தம் அனுமதிக்கொடுத்தார். அந்த சிறுவன் குளிரிலும், இருட்டிலும் அலைந்து திரிந்து ஒருவழியாய் தன் நண்பன் வீட்டைக் கண்டுபிடித்தான்.

நண்பனின் வீட்டுக் கதவைத் தட்டும்போது, யாரோ தன்னைப் பின் தொடர்ந்து வருவதைப்போல உணர்ந்தான். திரும்பிப் பார்த்தபோது, தன் தகப்பன் அங்கே நிற்பதைக் கண்டான். "தன் மகனுக்கு ஏதும் ஆபத்து நேரிட்டுவிடுமோ" என்று எண்ணி, அவனது தகப்பன் அவனை நிழல் போலத் தொடர்ந்து வந்திருந்தார்.

தேவபிள்ளைகளே, அதைப்போலத்தான் கர்த்தர் தம்முடைய கிருபையை நிழலைப்போல உங்களை பின்தொடரும்படி அனுப்புகிறார். பலவீன நேரத்திலும், போராட்டமான நேரத்திலும், நீங்கள் சோர்ந்துபோய், அதைரியப்பட்டு விடக்கூடாது என்பதில், அவர் எவ்வளவு அக்கறையுள்ளவராயிருக்கிறார்! கர்த்தருடைய கிருபை உங்களைத் தொடர்ந்து வருகிறது. அந்தக் கிருபை, ஒருபோதும் உங்களை விட்டு விலகுவதே இல்லை.

ஒரு ஊழியர் மிக அழகாய், "என் கிருபை உனக்குப் போதும்" என்ற தலைப்பில் செய்தி கொடுத்தார். கூட்டத்தின் முடிவிலே ஒருவர் எழுந்து நின்று, "பிரசங்கியாரே, உமக்கு மனைவி, பிள்ளைகளிருக் கிறார்கள். ஆகவே நீங்கள் சந்தோஷமாய், கிருபை போதும் என்று பிரசங்கிக்கிறீர்கள். நானோ, என் மனைவி, பிள்ளைகளை இழந்து வாடுகிறேன். என் நிலைமையில் நீங்கள் இருந்தால், கிருபையைக் குறித்து இப்படி பிரசங்கிப்பீர்களா?" என்று கேட்டார்.

சில மாதங்களுக்குள் அந்த பிரசங்கியாரின் மனைவியும், பிள்ளைகளும் ஒரு ரெயில் விபத்தில் மரித்துப்போனார்கள். அந்தத் துயரம் அவருடைய இருதயத்தை உடைத்தது. எனினும், தான் முன் பிரசங்கித்த அதே ஆலயத்திற்கு திரும்பி வந்து, மீண்டும், "என் கிருபை உனக்குப் போதும்" என்ற தலைப்பில் பிரசங்கிக்கும்போது, "என் மனைவியும் பிள்ளைகளும் மரித்துவிட்டார்கள். இந்த சூழ்நிலையிலும் தேவனுடைய கிருபை எனக்குப்போதும். இந்தக் கிருபை அவர்களை நித்தியத்தில் என்னைக் காண செய்யும்" என்றார். அதைக் கேட்டதும், அந்த சகோதரன் மிகவும் உணர்த்தப்பட்டு, கர்த்தருடைய கிருபையைச் சார்ந்துகொண்டார்.

நினைவிற்கு:- "நம்முடைய கர்த்தரின் கிருபை கிறிஸ்து இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தோடும் அன்போடுங்கூட என்னிடத்தில் பரிபூரணமாப் பெருகிற்று" (1 தீமோ. 1:14).