ஸ்திரப்படுத்தும் கிருபை!

"போஜன பதார்த்தங்களினாலல்ல, கிருபையினாலே இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது" (எபி. 13:9).

கிருபையினாலே உங்களுடைய ஆத்துமாவானது புஷ்டியடையும். கிருபையினாலே உங்களுடைய இருதயம் ஸ்திரப்படும். கிருபையினாலே உங்கள் உள்ளான மனுஷன் நித்தியத்தை சுதந்தரித்துக் கொள்ளுவான்.

நீங்கள் தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய ஈவு ஒன்று உண்டென்றால், அது தேவனுடைய கிருபைதான். இயேசுகிறிஸ்து இந்த பூமிக்கு வந்த போது, தெய்வீக அன்பைக் கொண்டு வந்தார். அபிஷேகத்தைக் கொண்டு வந்தார். சத்தியத்தினால் நிறைந்தவராயிருந்தார். அவர் கொண்டு வந்த காரியங்களில் மிகப்பெரிய ஒரு காரியம், தேவனுடைய கிருபையாகும். வேதம் சொல்லுகிறது: "மாம்சமான அவர் கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசம்பண்ணினார்" (யோவா. 1:14).

பரிசுத்த ஆவியானவருடைய இன்னொரு பெயர், "கிருபையின் ஆவி" என்பதாகும் (எபி. 10:29). கர்த்தர் பரிசுத்த ஆவியானவருடைய கிருபையின் ஆவியை உங்களுடைய உள்ளத்திலே ஊற்றும்போது, கிருபை அளவில்லாமல் உங்களுடைய வாழ்க்கையில் வரும். நீங்கள் பேசும்போதும், மற்றவர்களை ஆசீர்வதிக்கும் போதும், மற்றவர்களுக்காக ஜெபிக்கும்போதும், கிருபை உங்களில் பிரகாசிக்கும்.

தேவபிள்ளைகளே, நீங்கள் கிருபையின் ஆவிக்காக கர்த்தரிடத்தில் ஊக்கமாக மன்றாடுங்கள். ஆவியானவர் உங்களுக்குள் வருவதற்கு இடம் கொடுங்கள். சிலர், ஒரு காலத்தில் தாங்கள் பெற்ற பழைய அனுபவங்களைக் குறித்து வர்ணித்துக் கொண்டேயிருப்பார்களே தவிர, ஒவ்வொருநாளும் அந்தக் கிருபையின் ஆவியை பெற்றுக்கொள்ளுவதற்கு இடம் கொடுப்பதில்லை. கிருபையை அவர்கள் பயன்படுத்திக்கொள்வதுமில்லை. இதனால், கிருபை அநேகரை விட்டு விலகிப்போய் விடுகிறது.

அப். பவுல் சொல்லுகிறார், "கிருபையை நீங்கள் விருதாவாப் பெறாதபடிக்கு, உடன் வேலையாட்களாகிய நாங்கள் உங்களுக்குப் புத்தி சொல்லுகிறோம்" (2 கொரி. 6:1). தாவீதோ, "தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள் மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்" (சங். 147:11) என்கிறார்.

பழைய ஏற்பாட்டில் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களுக்கு, தேவதூதர்களின் உணவாகிய மன்னாவைக் கிருபையாகப் பொழிந்தார். அவர்கள் அதை சாப்பிட்ட போது, அது அவர்களை உயிர்ப்பித்து பெலப்படுத்துகிறதாயிருந்தது. ஆனால், அதை உபயோகிக்காமல் பாத்திரத்திலேயே போட்டு வைத்திருந்தால், அடுத்த நாளில் அது நாற்றமெடுக்க ஆரம்பித்திருக்கும்.

அதைப் போல, கிருபையை நீங்கள் உபயோகிக்காமல் போனால், கிருபையின் ஆவியை ஒவ்வொருநாளும் நீங்கள் பெறாமல் போனால், அது உங்களுக்குப் பிரயோஜனமில்லாமல் போய்விடும். மாத்திரமல்ல, உங்களுடைய வாழ்க்கையில் பின்மாற்றம் ஏற்பட ஏதுவாகி விடும். தேவபிள்ளைகளே, நீங்கள் தேவனுடைய கிருபையை கர்த்தருடைய நாமத்தின் மகிமைக்காக உபயோகப்படுத்துங்கள். கிருபையின் வரங்களை தேசத்தின் எழுப்புதலுக்காக உபயோகப் படுத்துங்கள்.

நினைவிற்கு:- "ஆவியினால் நிறைந்து; சங்கீதங் களினாலும், கீர்த்தனைகளினாலும், ஞானப் பாட்டுகளினாலும், ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்" (எபே. 5:18,19).