இரக்கமாயிருப்பேன்!

"எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் இரக்கமாயிருப் பேன்" (யாத். 33:19).

நம் தேவன் இரக்கமுள்ளவர், மனதுருக்கமுள்ளவர் மற்றும் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர் (எபே. 2:4). கர்த்தருடைய இரக்கத்தைப் பெற, முதலாவது அவரில் அன்புகூர வேண்டும். உங்கள் முதல் அன்பையும், முழு அன்பையும் கர்த்தருக்கே செலுத்த வேண்டும். நீங்கள் அவரில் அன்புகூரும்போது, அவர் தம் இரக்கத்தை உங்களுக்கு பொழிந்தருளுவார்.

"என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறை மட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்" (யாத். 20:6) என்று கர்த்தர் சொல்லுகிறார். கர்த்தர் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றுகிறவர்; தேவன் அன்புக்காக ஏங்குகிறவர்; உங்களுடைய அன்பிலே, துதியிலே, ஆராதனையிலே மகிழ்ந்து களிகூருகிறவர். பத்துக் கட்டளைகளிலே, "நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்பு கூருவாயாக" (உபா. 6:5) என்பதே முதல் கட்டளை யாகும்.

நீங்கள் கர்த்தரிடத்தில் அன்புகூருகிறது மட்டுமல்ல, அவரது கட்டளைகளையும் கைக்கொள்ள வேண்டும். கர்த்தருடைய கட்டளைகள் பாரமானவைகளல்ல. அவரில் அன்புகூருகிறவர்களுக்கு அவை எளிதானவை. இயேசுகிறிஸ்து, "என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது" (மத். 11:30) என்றார் அல்லவா!

இயேசு, பிதாவில் அன்புகூர்ந்தது மட்டுமல்ல, பிதாவின் கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டார். ஆகவேதான், "நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக் கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்" (யோவா. 15:10) என்றார். தேவனுடைய இரக்கம் உங்களில் பெருகும்படி, அவரில் முழு இருதயத்தோடும் அன்புகூர்ந்து, அவருடைய எல்லா கற்பனைகளையும் கைக் கொள்ளுங்கள்.

பாருங்கள், தாவீது தன் தவறை உணர்ந்தவராய், "கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன்; இப்போது நாம் கர்த்தருடைய கையிலே விழுவோமாக; அவரு டைய இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கையிலே விழாதிருப்பேனாக" (2 சாமு. 24:14) என்றதோடு நின்றுவிடாமல், கர்த்தரின் கையில் தன்னை ஒப்புக்கொடுத்து, அவரையே சார்ந்து கொண்டு, கர்த்தருக்கென்று ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளை செலுத்தினார்.

கர்த்தர் அந்தக் கண்ணீரின் ஜெபத்தைக் கேட்டார். தாவீதுக்கு மனமிரங்கி இஸ்ரவேலின் மேலிருந்த வாதையை நிறுத்தினார். தேவபிள்ளைகளே, ஒருநாளும் உங்களுடைய சுயநீதியை நம்பி கர்த்தரிடத்தில் சேராமல், அவருடைய இரக்கங்களை நம்பி, அவருடைய பாதத்தில் கடந்து வாருங்கள். அவரது இரக்கங்கள் மகா பெரியது.

நீங்கள் தானியேலைப் போல, "நாங்கள் எங்கள் நீதிகளை அல்ல, உம்முடைய மிகுந்த இரக்கங்களையே நம்பி, எங்கள் விண்ணப்பங்களை உமக்கு முன்பாகச் செலுத்துகிறோம்" (தானி. 9:18) என்று கூறி ஜெபிப்பீர்களா? அப்படியே நீங்களும் ஜெபிக்கும்போது, தேவன் உங்கள்மேல் இரக்கமாயிருப்பார்.

நினைவிற்கு:- "தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான். அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்" (நீதி. 28:13).