தொடரும் கிருபை!

"என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்" (சங். 23:6).

"நன்மை" என்பதற்கு, "நல்ல பங்கு" அல்லது "உயர்ந்த ஈவுகள்" என்பது அர்த்தமாகும். நல்ல மேப்பன், உங்களுக்குத் தம்முடைய நல்ல ஈவுகளாகிய நன்மைகளைச் சம்பூரணமாக் கொடுக்க விரும்புகிறார். "சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலருக்குத் தேவன் நல்லவராகவே இருக்கிறார்" (சங். 73:1).

உங்களுடைய இருதயம் எந்த அளவுக்கு சுத்தமாயிருக்கிறதோ, அந்த அளவுக்கு, நீங்கள் தேவனை நல்லவராகக் காண்பீர்கள்; நன்மைகளைப் பெற்றுக் கொள்ளுவீர்கள். வேதம் சொல்லுகிறது: "உத்தம ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர் கொண்டுவந்து, அவர் சிரசில் பொற்கிரீடம் தரிப்பிக்கிறீர்" (சங். 21:3).

தாவீது சொன்னதைப்போலவே, ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும், கிருபையும் அவரைப் பின் தொடர்ந்ததா, என்று நீங்கள் கேட்கலாம். ஆம், உலகப்பிரகாரமாய் தீமையான பல காரியங்கள், அவரைப் பின்தொடர்ந்து வருவதைப் போல காட்சியளித்தாலும், அவை யாவும் முடிவில் நன்மையாகவே மாறின. காரணம், "அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக் கிறோம்" (ரோமர் 8:28).

சவுல் ராஜா, தாவீதின் உயிரை வேட்டையாட, பின்தொடர்ந்து கொண்டேயிருந்தார். சொந்த மகனாகிய அப்சலோம், தன் தகப்பனான தாவீதின் பிராணனை வாங்கத் தேடினார். சீமேயி, கேட்கக்கூடாத தூஷண வார்த்தைகளினால் தாவீதை தூஷித்தார். ஆனால், இவைகளெல்லாம் முடிவில் தாவீதுக்கு நன்மையும், ஆசீர்வாதமுமாகவே விளங்கின.

எது தன்னைப் பின்தொடர்ந்தாலும், அதில் கர்த்தருடைய நன்மையைக் கண்டு கர்த்தரைத் துதிக்க தாவீது கற்றுக்கொண்டார். "நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன்" (சங். 27:13). "கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது" (சங். 34:10).

தேவபிள்ளைகளே, உங்களை உள்ளன்போடு நேசிக்கிற கர்த்தர், சகலவற்றையும் உங்கள் நன்மைக்கேதுவாகவே செய்வார். அவர் தீமையை, நன்மையாய் மாற்றுகிற தேவன். வருட முழுவதும், உங்களுக்கு நன்மையாகவே கிருபையைத் தொடரப் பண்ணுவார். "வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்" என்று, தாவீது ஆனந்தக் கூத்தாடினார் (சங். 65:11). கர்த்தருடைய ஆலயத்திற்கு தாவீது சென்று, அங்கேயும் நன்மையையே எதிர்பார்த்து, "உமது ஆலயத்தின் நன்மையால் திருப்தியாவேன்" என்றார் (சங். 65:4). கர்த்தர் நன்மையானதையே தனக்குத் தருவார் என்பது, அவருடைய அசைக்க முடியாத விசுவாசமாகும் (சங். 85:12).

பாருங்கள்! சில மனிதர்களை பாவங்கள் தொடருகின்றன. முற்பிதாக்களின் சாபங்கள் தொடருகின்றன. அசுத்த ஆவிகள் தொடருகின்றன. நோகளும், வறுமையும், பில்லி சூனியங்களும், மந்திரங்களும் பின்தொடருகின்றன. ஆனால், நீங்கள் கர்த்தரை மேய்ப்பராய்க் கொள்ளும்போது, நன்மையும் கிருபையும் நிழல்போல உங்களைப் பின்தொடர்ந்து வரும். நீங்கள் எதைப் பின்தொடருகிறீர்களோ, அதின் விளைவுகளே உங்களைத் தொடரும். தேவபிள்ளைகளே, கர்த்தரையும், அவருடைய கல்வாரி நேசத்தையும் பின் தொடருங்கள்.

நினைவிற்கு:- "என்னை இழுத்துக்கொள்ளும், உமக்குப் பின்னே ஓடிவருவோம்" (உன். 1:4).