தைரியமாயிருங்கள்!

"தைரியமாயிரு; நம்முடைய ஜனத்திற்காகவும், நம்முடைய தேவனுடைய பட்டணங்களுக்காகவும் சவுரியத்தைக் காட்டுவோம்" (2 சாமு. 10:12).

வேதத்திலே, கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு கொடுக்கும் ஒரு ஆலோசனை "தைரியமாயிருங்கள்" என்பதாகும். நீங்கள் சோர்ந்துபோகும் வேளையிலெல்லாம், அப்போஸ்தலர் நடபடிகளின் புத்தகத்தைத் திரும்பத் திரும்ப வாசித்துப் பாருங்கள். சீஷர்கள் எவ்வளவு தைரியமாயிருந்தார்கள் என்பதையும், பேதுரு எவ்வளவு தைரியமாய் பேசினார் என்பதையும், எவ்வளவு அருமையான ஆத்தும அறுவடை நடந்தது என்பதையும், எவ்வளவாய் பரிசுத்த ஆவியானவர் தம்முடைய பிள்ளைகளையெல்லாம் திடப்படுத்தினார் என்பதையெல்லாம் அதன்மூலம் அறிய முடியும்.

நீங்கள் நீதிமான்கள். "நீதிமான்களோ சிங்கத்தைப்போலே தைரியமாயிருக்கிறார்கள்" (நீதி. 28:1) என்று வேதம் சொல்லுகிறது. எனவே, நீங்கள் தேவனுக்காக வைராக்கியமாய் நிற்கும்போது, ஒருபோதும் பின்வாங்கமாட்டீர்கள். நீங்கள் தைரிய மாயிருந்தால், சாத்தானின் கோட்டைகளைத் தகர்ப்பீர்கள். எந்த மந்திரவாதியும், எந்தப் பில்லிசூனியமும் உங்களை மேற்கொள்ளுவதில்லை.

ஒரு பாம்பு படமெடுத்து சீறுகிறதென்றால், அது தைரியத்தினால் அப்படிச் செய்வதில்லை. தன்னை யாரும் அடித்துவிடுவார்களோ என்கிற பயத்தினால்தான் சீறுகிறது. நீங்கள் பாம்பைப் பார்த்து பயப்படும்படி அழைக்கப்பட்டவர்களல்ல. நீங்கள் சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமைகளையும் மேற்கொள்ளவும் அழைக்கப்பட்டவர்கள்.

உங்களுக்குள் எழுப்புதல் வரும்போது, சாத்தானுக்கு அழிவுநாள் வரும். ஆகவே, எழுப்புதலை தடுக்கும்படி, எப்படியாவது உங்களைப் பயமுறுத்த பார்ப்பான். வேதம் சொல்லுகிறது: "தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?" (ரோமர் 8:31). ஆகவே தைரியமாயிருங்கள். உங்களை தைரியப்படுத்துகிறவர் கர்த்தர். தாவீது சொல்லுகிறார்: "என் ஆத்துமாவிலே பெலன் தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்" (சங். 138:3).

கர்த்தர் உங்களோடிருக்கிறார். ஆயிரம் ஆயிரமான பரிசுத்தவான்கள், கேருபீன்கள், சேராபீன்கள் உங்களோடிருக்கிறார்கள். உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். அவர்களோடிருக் கிறவர்களைப் பார்க்கிலும் உங்களோடிருக்கிறவர்கள் அதிகமான பேர்கள். "யாக்கோபு என்னும் சிறுபூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணை நிற்கிறேன்" என்று, அவர் உங்களைத் தேற்றுகிறார். ஆகவே, நீங்கள் பயப்படாமல் தைரியமாயிருங்கள்.

ஒரு காலத்தில் வேலைக்காரிக்குக் கூட பயந்த பேதுருவைக் கொண்டுதான், யூதர்கள் மத்தியிலே, தைரியமாய் முழங்கி பிரசங்கிக்க ஆவியானவர் உதவி செய்தார். "நீங்கள்... ஜீவாதிபதியைக் கொலை செய்தீர்கள்; தேவன் அவரை மரித்தோரிலிருந் தெழுப்பினார். அதற்கு நாங்கள் சாட்சிகளாக இருக்கிறோம்" (அப். 3:14,15) என்று மார்தட்டி முழங்கினார். முரட்டாட்டமான யூதர்களை, ஆயிரம் ஆயிரமாக கர்த்தரண்டை திருப்புகிற தைரியம், பேதுருவுக்கு பரிசுத்த ஆவியானவரால் வந்தது.

தேவபிள்ளைகளே, இது நீங்கள் எழும்பிப் பிரகாசிக்க வேண்டிய நேரம். கர்த்தருக்காக அரிய பெரிய காரியங்களைச் செய்ய வேண்டிய நேரம். தூசியை உதறி விட்டு எழும்புங்கள். அதைரியத்தை யும், சோர்வையும் உதறித் தள்ளிவிட்டு எழும்புங்கள்.

நினைவிற்கு:- "உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும் கூட்டி வழங்குங்கள்" (2 பேதுரு 1:5).