நோக்கிப் பாருங்கள்!

"அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை" (சங். 34:5).

தேவனை நீங்கள் எப்படி நோக்கிப்பார்க்கிறீர்களோ, அப்படியே அவர் உங்களை பிரகாசிக்கச் செய்வார். நீங்கள் அவரை ஒரு பரிசுத்தமுள்ள தேவனாக நோக்கிப் பார்த்து, "பரிசுத்தர், பரிசுத்தர்" என்று துதிப்பீர்களானால், பரிசுத்தமான வாழ்க்கையை உங்களுக்குத் தருவார். அவருடைய நாமம் "யெகோவா மெக்காதீஸ்."

ஆம்! நீங்கள் கர்த்தரை ஆலோசனைக் கர்த்தராய் நோக்கிப் பார்க்கும்போது, அவர் உங்கள் மேல் தன் கண்ணை வைத்து, ஆலோசனை சொல்லுவார். நீங்கள் நடக்க வேண்டிய வழியைப் போதிப்பார். அவரை சர்வவல்லவராய் நோக்கிப் பார்க்கும்போது, கர்த்தருடைய வல்லமையான கிரியைகளைக் காண்பீர்கள். வைத்தியராய் நோக்கிப் பார்க்கும்போது, குணமடைவீர்கள். இரட்சகராய் நோக்கிப் பார்க்கும் போது, உங்கள் குடும்பத்தினர் இரட்சிக்கப்படுவார்கள். கன்மலையாய் நோக்கிப் பார்க்கும்போது, அசைக்கப்படா திருப்பீர்கள். கர்த்தருடைய எந்த குணாதிசயத்தை, எந்த சுபாவத்தை நீங்கள் நோக்கிப்பார்க்கிறீர்களோ, அந்த குணாதிசயமும், சுபாவமும் உங்களில் காணப்படும்.

சந்திரன் ஒளியில்லாமலிருந்தாலும், சூரியனையே பார்த்துக்கொண்டிருப்பதினால், அது பிரகாசிக்க ஆரம்பிக்கிறது. ஆனால் சூரியனுக்கும், சந்திரனுக்கு மிடையே பூமியானது வந்துவிட்டால், பௌர்ணமியான சந்திரன் அமாவாசையாக மாறிவிடும். சாதாரணமாகப் பார்ப்பதற்கும், நோக்கிப் பார்ப்பதற்கும் வித்தியாசமுண்டு.

சகேயு, "இயேசு எப்படிப்பட்டவரோ" என்று, அவரைப் பார்க்க வகைதேடினான். அவரைப் பார்க்கும்படி, ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான் (லூக்கா 19:3,4). தமஸ்கு வீதியிலே, சவுல் (பவுல்) தன்னை சந்தித்த ஒளியினிடத்தில், "ஆண்டவரே, நீர் யார்" என்று கேட்டறிய விரும்பினார் (அப். 9:5). வைரத்திற்கு பல முகப்புகளுண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான ஒளியை வீசக்கூடியது. ஆண்டவருக்கு 272 நாமங்களுண்டு. அவ்வளவும் அவரது தன்மையை வெளிப்படுத்துகின்றன.

ஆபிரகாம் கர்த்தரை, சர்வவல்லவராக, எல்ஷடாய் தேவனாக, யெகோவாயீரேயாக நோக்கிப்பார்த்தார். அதைப்போலவே மோசே, கர்த்தரை ஆபிரகாமின் தேவனாகவும், ஈசாக்கின் தேவனாகவும், யாக்கோபின் தேவனாகவும், இருக்கிறவராக இருக்கிறேன் என்பவராகவும் நோக்கிப்பார்த்தார். மீன்பிடிக்கிற பேதுருவை, கர்த்தர் மனுஷரைப் பிடிக்கிறவராய் மாற்றினார். பேதுருவும் அப்படியே கர்த்தரை நோக்கிப் பார்த்ததால், மூவாயிரம், ஐயாயிரம் என்று ஆத்துமாக்களை ஆதாயம் செய்ய அவரால் முடிந்தது.

தாவீது, "தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்; புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிற வராகவும் தோன்றுவீர்" (சங். 18:25,26) என்று சொல்லுகிறார்.

தேவபிள்ளைகளே, நீங்கள் அவரை தயவுள்ளவராகவும், புனிதராகவும், மாறாதவராகவும் நோக்கிப்பாருங்கள். ஆண்டவரிடத்தில் ஒருபோதும் மாறுதலே கிடையாது. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். அவரிடத்தில் எந்த வேற்றுமையின் நிழலுமில்லை. அவர் நல்லவராகவே இருப்பார்.

நினைவிற்கு:- "என்னை நோக்கிக் கூப்பிடு. அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்" (எரே. 33:3).