ருசித்துப் பாருங்கள்!

"கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்" (சங். 34:8).

"கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்" என்று சவாலாக எழுதுகிறார் தாவீது. கர்த்தரோடு நெருங்கி ஜீவிக்கும்போது, அவருடைய அன்பையும், காருண்யங்களையும், கிருபைகளையும் எண்ணும் போது, நீங்கள் அந்த ருசியை உங்கள் ஆவியில் உணருவீர்கள். உங்கள் ஆத்துமாவில் களிகூருவீர்கள்.

பாட்டிலில் இருக்கும் இனிப்பு பாட்டிலுக்குள்ளேயே அடங்கி கிடந்தால், அதன் ருசியை அறிய முடிவதில்லை. ஆரஞ்சு பழமானது அதன் தோலுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தால் அது புளிப்பா, இனிப்பா, சுவையுள்ளதுதானா, என்பதையெல்லாம் அறிய முடியாது. அதே நேரத்தில், அதைப் புசிக்கும்போது, அதன் தன்மையை அறிந்து கொள்ளலாம்.

அதுபோல வேதத்தின் ஒவ்வொரு பகுதியும், கர்த்தருடைய இனிமையையும், மகிமையையும், கிருபையையும், உங்களுடைய ஆத்துமாவுக்கு உணர்த்துகிறது. அவருடைய இனிமையை நீங்கள் அறிய வேண்டுமென்றால், அவரை உங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள வேண்டும்; அவர் உங்களுடைய உள்ளத்தில் வாசம் பண்ணவேண்டும்; அவருடைய கரம்பிடித்து நீங்கள் நடக்கவேண்டும்; அவருடைய பொன் முகத்தையே நீங்கள் நோக்கிப் பார்த்து, அவருடைய தெய்வீக அன்பினால் நிரப்பப்படவேண்டும். அப்போதுதான், கர்த்தர் நல்லவர் என்பதை உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் ருசித்துக்கொண்டேயிருப்பீர்கள்.

கர்த்தர் நல்லவர் என்பதை ருசிக்கிறவர்களுக்கு, ஆலயத்திலுள்ள ஆராதனையில் ஏறெடுக்கப்படும் பாடல்கள், சாட்சிகள், பிரசங்கங்கள் எல்லாமே சுவையானதாகவும், இனிமையானதாகவும் காணப்படும். நீங்களும்கூட ஆலயத்திற்கு செல்லும்போது, ஜெபத் தோடும் எதிர்பார்ப்போடும் செல்லுவீர்களேயானால், அங்கே கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து மகிழுவீர்கள்.

பசி இல்லாதவனால் ஒன்றையும் ருசிக்க முடியாது. வியாதியஸ்தனால் சுவையான உணவின் இனிமையை அறிய முடியாது. பாவமாகிய வியாதியைக் களைந்துவிட்டு, நீதியின்மேல் பசிதாகத்தோடு நோக்கிப் பார்த்தால், நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள். பரலோக மன்னாவால் திருப்தியடைவீர்கள். ஆம், நீங்கள் பரலோகத்தின் சுவையை பூமியிலே அனுபவிக்கும்படி அழைக்கப் பட்டவர்கள்.

கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பார்க்கும்படி, கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களுக்கு வனாந்திரத்திலே மன்னாவைப் பொழிந்தருளினார். காடைகளைக் கொண்டு வந்து, பாளயத்தில் விழும்படி செய்தார். தண்ணீரை இனிமையான திராட்சரசமாக மாற்றினார். ஐந்து அப்பத்தைக் கொண்டு, ஐயாயிரம் பேரைப் போஷித்தார். கன்மலையைப் பிளந்து, இஸ்ரவேல் ஜனங்களின் தாகத்தைத் தீர்த்தார். மாத்திரமல்ல, இன்றைக்கும் உங்களுக்கு ஆவிக்குரிய மன்னாவாக அவர் விளங்குகிறார்.

தேவபிள்ளைகளே, கிறிஸ்துவை நீங்கள் ருசிக்கிற படியினாலே தேவபிள்ளைகளுடனான ஐக்கியம் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். கர்த்தரை ஆடிப்பாடி, துதிப்பது ருசிகரமானதாயிருக்கும். சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுவதும், கர்த்தரோடு நடப்பதும் ருசிகரமானதாயிருக்கும்.

நினைவிற்கு:- "கர்த்தர் தயையுள்ளவரென்பதை நீங்கள் ருசிபார்த்ததுண்டானால், நீங்கள் வளரும்படி, புதிதாப் பிறந்த குழந்தைகளைப் போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின் மேல் வாஞ்சையாயிருங்கள்" (1 பேது.2:1,3).