பெலன் கொள்ளுங்கள்!

"உம்மிலே பெலன் கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்" (சங்.84:5).

கர்த்தரிலே பெலன் கொள்ளுங்கள். அவருடைய ஆவியின் சத்துவத்திலே வல்லமையாக பெலப்படுங்கள். பரிசுத்த ஆவியின் வல்லமையினால் எப்பொழுதும் நிரம்பியிருங்கள். இன்றைக்கு அநேகர் கிறிஸ்தவர்களாயிருந்தும், கிறிஸ்துவிலே ஸ்திரப்படாமல் தடுமாறுகிறார்கள். சிறு பிரச்சனைகள் அல்லது போராட்டங்கள் வந்தாலும் தடுமாறி, சாத்தானை எதிர்த்து நிற்கவோ, சோதனைகளை மேற் கொள்ளவோ முடியாமல் சோர்ந்துபோகிறார்கள். "சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தை பெருகப் பண்ணுகிறார்" (ஏசாயா 40:29).

அநேக கிறிஸ்தவர்கள், ஞாயிற்றுக்கிழமை காலையிலும், மாலையிலும் ஆராதனையில் கலந்து கொள்ள சபைக்குச் செல்லுகிறார்கள். புதன்கிழமைதோறும் வேதபாட வகுப்புக்கும். சனிக்கிழமைதோறும் காத்திருப்புக் கூட்டத்திற்கும், மற்ற நாட்களில் வீட்டு ஜெப கூட்டங்கள், எழுப்புதல் மற்றும் கன்வென்ஷன் கூட்டங்களுக்கும் போகிறார்கள். ஆனாலும், ஆவிக்குரிய ஜீவியத்திலே அவர்கள் பெலன டைய முடிவதில்லை. அவர்கள் தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து, அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும், எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிறார்கள் (2 தீமோ.3:5,7).

இந்திய தேசத்தில், கிறிஸ்துவைக் குறித்து கேள்விப்படாத கோடிக்கணக்கான மக்கள் உண்டு. அநேக கிராமங்கள் சுவிசேஷம் அறிவிக்கப்படாமல் காரிருளில் மூழ்கிக் கிடக்கின்றன. இப்படிப்பட்டச் சூழ்நிலையில் ஒரு சிலர், நான்கு சுவர் களுக்குள்ளேயே ஆராதித்தும், ஆழ்ந்த சத்தியங்களையும், சுவிசேஷங்களையும் கேட்டுக் கொண்டும், தினமும் பிரியாணி சாப்பிட்டும், ஜீரணமாகாத நிலையிலிருக்கிறார்கள். "நீ புசித்தும் திருப்தியடையாதிருப்பாய்" என்று மீகா 6:14-லே சொல்லப்பட்டிருப்பது எத்தனை உண்மையானது!

தேவபிள்ளைகளே, நீங்கள் ஆலயத்தில் கேட்கிறவைகளை உங்கள் வாழ்க்கையில் அப்பியாசப்படுத்துங்கள். ஜெப ஜீவியத்தில் பெலன் கொள்ளுங்கள். வாக்குத்தத்தங்களை உறுதியாய் பற்றிக்கொண்டு, அதை நடைமுறைக்குக் கொண்டு வாருங்கள். கிறிஸ்துவின் சாயலிலே நீங்கள் வளர்ந்து, பெலன் கொள்ள வேண்டுமல்லவா? கர்த்தர் சொல்லுகிறார்: "நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்" (ஏசாயா 41:10).

தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களோடுகூட இருக்கிறபடியினாலே, நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை. கர்த்தர் உங்களை நிச்சயமாகவே பெலப்படுத்துவார். தாவீதைப்போல, "கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் ரட்சகருமானவர், தேவன் நான் நம்பியிருக்கிற துருக்கமும், என் கேடகமும், என் ரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமும், என் புகலிடமும், என் ரட்சகருமானவர்; என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி ரட்சிக்கிறவர் அவரே" (2 சாமு. 22:2,3) என்று விசுவாச அறிக்கை செய்யுங்கள்.

நினைவிற்கு:- "நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவ தாக ஆமென்" (2 பேதுரு 3:18).