தெரிந்து கொள்ளுங்கள்!

"மார்த்தாளே, நீ அநேகக் காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்து கொண்டாள்" (லூக். 10:41,42).

இன்றைக்கு உலகம் முழுவதும், பலவிதமான கவலைகளினால் நிறைந்திருக்கிறது. ஒரு தனிப்பட்ட மனுஷனானாலும் சரி, தேசத்தின் உயர்பதவி வகிப்பவர் களானாலும் சரி, அரசியல்வாதிகளானாலும் சரி, தேசத்தலைவர்களானாலும் சரி, விஞ்ஞானிகளானாலும் சரி, எல்லோருமே பலவகையான கவலைகளினால் சோர்ந்து போய், பிரச்சனைகளுக்கு வழிதெரியாமல் கலங்கி தவிக்கிறார்கள்.

நீங்கள் கவலையோடு வாழ்வது, உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் குடும்பத்துக்கும் அது வேதனையானதாகும். கவலையானது, ஒரு மனிதனின் மன சமாதானத்தையும், அமைதியையும் கெடுத்து விடுகிறது. சாலொமோன் ஞானி சொல்லுகிறார்: "மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்" (நீதி. 12:25).

வேதத்தில், மார்த்தாள் பலவிதமான கவலைகளினால் சோர்ந்துபோனாள். கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்து நேரத்தை செலவழிக்கக்கூட முடியாமல், கவலைப்பட்டு, அவள் மிகவும் ஒடுங்கிப்போவதை இயேசு கவனித்துக் கொண்டே யிருந்தார். இயேசு அவளைப் பார்த்து, "மார்த்தாளே, நீ அநேகக் காரியங்களைக் குறித்து கவலைப்பட்டு கலங்குகிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கை தெரிந்துகொண்டாள்" (லூக்கா 10:41,42) என்றார்.

கர்த்தர் மார்த்தாளை ஆறுதல்படுத்தி, "மார்த்தாளே, உன்னை விட்டு எடுபடாத நல்ல பங்கை நீ தெரிந்துகொள்" என்று ஆலோசனை கூறினார். சற்று இந்த வசனத்தை சிந்தித்துப் பாருங்கள். நல்ல பங்கைத் தெரிந்துகொள். அதுவும், உன்னை விட்டு எடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொள் என்கிறார். அந்த நல்ல பங்கு, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே!

சிலர் கவலையை பெரிதுபடுத்தி, "கவலைக்கு தீர்வே இல்லை" என்று நினைப்பார்கள். முடிவிலே, சாத்தான் அவர்களுடைய கவலையையே பயன்படுத்தி, அவர் களை தற்கொலை செய்துகொள்ளும்படி தூண்டுவான். தற்கொலை என்பது கவலைக்கான தீர்வு அல்ல. அது, இன்னும் மிகப்பெரிய வேதனைகளுக்கு ஆரம்பமாக அமையும். தற்கொலை செய்தவர்களும் கூட நரகத்தில் பாடுகளையும், வேதனைகளையும் நித்திய நித்தியமாக அனுபவிக்க வேண்டியதிருக்கும்.

உங்கள் வாழ்க்கையின் பங்காக கிறிஸ்துவை நீங்கள் தெரிந்து கொள்வீர்களென்றால், கவலைகளும், பிரச்சனைகளும், போராட்டங்களும் உங்கள் வாழ்க்கையிலிருந்து அகற்றப்படுவது மட்டுமன்றி, உங்கள் வாழ்க்கை சமாதானத்தினாலும், சந்தோஷத்தினாலும், மகிழ்ச்சியினாலும் நிரம்பியிருக்கும். மேலும், உங்களுடைய குடும்பத்தின் பாரத்தை, பிள்ளைகளின் பாரத்தை, எதிர்காலத்தைப் பற்றிய பாரத்தையெல்லாம் நீங்கள் கர்த்தர்மேல் வைப்பீர்களாயின், அவர் உங்களை அக்காரியங்களிலெல்லாம் ஆசீர்வதிப்பது மாத்திரமல்ல, ஏற்ற காலத்திலும் உயர்த்துவார்.

தேவபிள்ளைகளே, கர்த்தரை உங்கள் பங்காக நீங்கள் ஏற்றுக்கொள்ளும்போது, உங்கள் கவலைகள், கண்ணீர் எல்லாம் மாறிப்போகும். அவரே உங்களுடைய பங்கானவர். என்றென்றும் உங்களை விட்டு நீங்காதவர்.

நினைவிற்கு:- "அவர் உங்களை விசாரிக்கிறவரான படியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்" (1 பேது. 5:7).