உயர்த்துங்கள்!

"உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்து பார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்" (லூக்கா 21:28).

தலைகளை உயர்த்துங்கள். தலைநிமிர்ந்து வெற்றிகரமாக முன்னேறிச் செல்லுங்கள். ஏனென்றால், உங்களுக்கு ஒரு மேன்மையான, மகிமையான எதிர்பார்ப்பு உண்டு. அதுதான் இயேசுகிறிஸ்துவின் வருகை.

அநேகர் அவமானத்தால் தலைகுனிந்து நடக்கிறார்கள். காரணம், பாவமும், சாபமும் அவர்களை தலைகுனிந்து நடக்கச் செய்கிறது. குற்றமனச்சாட்சி அவர்களை வாதித்துக்கொண்டேயிருக்கிறது. ஆனால், உங்களை இயேசுகிறிஸ்துவின் இரத்தம் கழுவி, சுத்திகரித்திருக்கிறபடியினால், உங்களது பாவங்கள் மன்னிக்கப்பட்ட மகிழ்ச்சியால் நீங்கள் தலைநிமிர்ந்து நடப்பீர்கள். சாபத்தின் முதுகெலும்பு முறிந்ததென்று கெம்பீரத்தோடு முழங்குவீர்கள்.

கிறிஸ்துவின் வருகை, பாவத்தில் வாழும் மக்களுக்கு வேதனையாயிருந்தாலும், தேவபிள்ளைகளாகிய உங்களுக்கோ, மகிழ்ச்சியாயிருக்கும். உங்களுக்காக முள்முடி சூட்டப்பட்டவரை, உங்களுக்காக கைகளிலும், கால்களிலும் ஆணிகள் கடாவப்பட்டவரை, நீங்கள் மகிழ்ச்சியோடு எதிர்கொண்டு போவீர்கள். உலகத்தை ஒரு காரிருள் மூடிக்கொள்ளும்; அந்திக்கிறிஸ்து வினுடைய ஆட்சி சூழ்ந்துகொள்ளும். ஆனாலும், உங்கள்மேல் தேவனுடைய மகிமை உதிக்கும். நீங்கள் கிறிஸ்துவோடு என்றென்றும் மகிழ்ந்திருப் பீர்கள்.

தலைகுனிந்து நடக்கிறவர்கள், பூமியைப் பார்த்து நடக்கிறார்கள். பூமியின் மேன்மையே அவர்களுக்குச் சிறந்ததாகத் தெரிகிறது. ஆனால், பூமியின் மேன்மை களெல்லாம் ஒருநாள் அக்கினிக்கு இரையாக்கப்படும். காணப்படுகிற யாவும் அழிந்து, வெந்து உருகிப் போகும் என்பதை அவர்கள் அறியாதிருக்கிறார்கள். ஆனால் நீங்களோ, அழிவில்லாத நித்திய ராஜ்யத்தை நோக்கி தலைநிமிர்ந்து செல்லுகிறீர்கள். அங்கே, உங்களுடைய ஆத்தும நேசர் உங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். பரிசுத்தவான்களோடும், தேவதூதர்களோடும்கூட நீங்கள் மகிழ்ந்து களிகூருவீர்கள்.

பூமியிலே பிறந்த ஒவ்வொருவரும், ஒருநாள் வெள்ளைச் சிங்காசனத்திற்கு முன்பாக, நியாயத்தீர்ப்பை எதிர்நோக்கி நிற்கவேண்டியது வரும். அங்கே, ஆட்டுக் குட்டியானவருடைய ஜீவப் புஸ்தகம் திறக்கப்படும். ஞாபகப் புத்தகங்கள் விரிக்கப் பட்டிருக்கும். அந்த நாளில், பாவமுள்ள இந்த உலகம் தலைகுனிந்து நிற்கும். அவனவன் செய்த கிரியைகளின்படி அவனவன் நியாயந்தீர்க்கப்படுவான்.

ஆனால் இயேசு கிறிஸ்து கல்வாரியில் இரத்தம் சிந்தி, உங்களை மீட்டுக்கொண்டபடியினால், "கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை" (ரோமர் 8:1) என்னும் வேதவாக்கின்படி, நீங்கள் அன்றைக்கு நியாயந்தீர்க்கப்படாமல் தலைநிமிர்ந்து நிற்பீர்கள்.

தேவபிள்ளைகளே, கிறிஸ்து தம்முடைய இரத்தத்தினாலே உங்களை சுத்திகரிக்கிறார். இதன் காரணமாக உங்கள் உள்ளத்தில் இரட்சிப்பின் கெம்பீரசத்தம் தொனிக்கிறது. உலகம் கொடுக்கக் கூடாத சமாதானத்தினாலும், சந்தோஷத்தினாலும் இயேசுகிறிஸ்து உங்களை நிரப்பியிருக்கிறார். ஆகவே நீங்கள் தலைநிமிர்ந்து நடப்பீர்கள்.

நினைவிற்கு:- "நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்தது போல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்சேவேன்" (வெளி. 3:21).