பிரயோஜனப்படுத்துங்கள்!

"நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்" (எபேசி. 5:16).

ஒரு நாள் என்பது 24 மணி நேரம் கொண்டது. அல்லது 1440 நிமிடங்களைக் கொண்டது. அல்லது 86,400 வினாடிகளைக் கொண்டது. அப்படியானால் ஒரு வருஷத்திற்கு எத்தனை வினாடிகள்? இதைக் குறித்து ஒரு வேடிக்கையான கதை உண்டு. ஒரு சுவர் மீது பொருத்தப்பட்டுள்ள கடிகாரத்தின் அசைவாட்டு (பெண்டூலம்) தொடர்ந்து அசைந்து கொண்டிருந்தது.

ஒருநாள், திடீரென்று அதற்கு தன் வருங்காலத்தைப் பற்றிய எண்ணம் வந்தது. "ஒரு வினாடிக்கு இரண்டு முறை அங்குமிங்குமாக டிக்-டிக் என்று அசைந்து ஒலித்தால், ஒரு நாளிலே 1,72,800 முறை ஒலிக்க வேண்டியிருக்குமே, ஓராண்டுக்குள் 6,30,72,000 முறை அல்லவா அசைய வேண்டியிருக்கும்" என்று பெருமூச்சு விட்டது. "அப்படியானால் 10 ஆண்டுகளில்..." என்று நினைக்கும்போதே, அதற்கு மயக்கமும், மாரடைப்பும் வரும் போல இருந்தது.

அந்த இளம் கடிகாரத்தின் இந்த எண்ணத்தைப் பார்த்து, அருகிலிருந்த வயதான கடிகாரம் கேலி செய்து, "அட முட்டாளே, ஒரு நேரத்தில் ஒருமுறை தானே டிக்-டிக் என்று அசைந்து ஒலிக்கிறாய்? அதைத் தொடர்ந்து செய்ய முடியாதா? ஏன் வருங்காலத்தைக் குறித்து கலங்குகிறாய்" என்றது.

நீங்களும்கூட, கடந்த காலத்தை எண்ணிக் கவலைப்படாதிருங்கள். வருங் காலத்தை எண்ணிச் சோர்ந்து போகாதிருங்கள். நிகழ்காலம் உங்களுடைய கைகளில் இருக்கிறது. தேவ பெலத்தோடு, ஒவ்வொரு வினாடி நேரத்தையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வேதம் சொல்லுகிறது: "நாளைக்காகக் கவலைப்படா திருங்கள். நாளைய தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்" (மத். 6:34).

அநேகர் வருங்காலத்தைக் குறித்து கவலைப்பட்டு, கலங்கி, நிகழ்காலத்தை கோட்டை விட்டுவிடுவார்கள்; கண்ணீரிலே கழித்துவிடுவார்கள். அன்றன்றுள்ள அப்பத்தை ஆண்டவர் ஒவ்வொருநாளும், உங்களுக்குத் தர வல்லமையுள்ளவராய் இருக்கிறார். ஆகவே, நாளைய தினத்தைக்குறித்து கவலைப்படாதிருங்கள். அநேகர் நேரங்களை ஆதாயப்படுத்த முனைகிறார்கள். ஆனால் ஆதாயம் பண்ணினபின், அந்த நேரத்தை எப்படி செலவிடுவது என்று தெரியாமல் தவிக்கிறார்கள்.

அமெரிக்க, ஐரோப்பிய தேசங்களில் ஜனங்கள் ஒவ்வொரு காரியத்திலேயும் மிகவும் துரிதமாக செயல்படுகிறார்கள். வேகவேகமாக பிரயாணம் செய்கிறார்கள். அப்படி ஓடி ஓடி மிச்சப்படுத்தின நேரத்தை அவர்கள் குடியிலும், வெறியிலும், உலகத் தின் சிற்றின்பங்களிலும் அசுத்தமான வாழ்க்கையிலும் தான் வீணாக்குகிறார்கள்.

தேவபிள்ளைகளே, இயேசு ஓடினதாக வேதத்தில் எங்கும் வாசிக்க முடியாது. அந்த நாட்களில் வேகமாக பயணிப்பதற்கு ஏற்றவாறு இரதங்களும், ஒட்டகங் களுமிருந்தன. ஆனாலும் இயேசு நடந்தே சென்று, தன்னுடைய ஊழியத்தை நிறைவேற்றினார். என்றாலும் கூட, அவருக்கு கொடுக்கப்பட்ட ஊழியத்தின் காலமாகிய மூன்றரை ஆண்டுகளையும், எத்தனை அருமையாய் பயன்படுத்திக் கொண்டார், பாருங்கள்! நீங்கள் பூமியில் வீணாக்கிய ஒவ்வொரு வினாடி நேரத்தைக் குறித்தும், கர்த்தரிடத்தில் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பதை, ஒருபோதும் மறந்து விடாதிருங்கள்.

நினைவிற்கு:- "நித்திரையை விட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்" (ரோம. 13:11).