அருமையான கிருபை!

"தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்" (சங். 36:7).

வேதத்திலே, "கிருபை" என்ற வார்த்தை, இருதயத்தை பரவசமடையச் செய்கிறது. அது இனிமையானது, மேன்மையானது. "கிருபை" என்ற வார்த்தையை, ஒவ்வொருவருடைய ஜெபத்திலும் கேட்கலாம். பிரசங்கங்களின் மத்தியிலும், முடிவிலும் கேட்கலாம். "கிருபை" உங்களை சூழ்ந்திருப்பது, தேவனுடைய மகிமையான வல்லமையாயிருக்கிறது. தேவகிருபை உங்களை சூழ்ந்து பாதுகாக்கிறது, அடைக்கலம் தருகிறது மற்றும் உங்களைத் தாங்குகிறது.

தேவபிள்ளைகளே, கிருபையிலே வளருங்கள். கிருபையிலே பெலன் கொள்ளுங்கள். கிருபையிலே ஸ்திரப்படுங்கள். இந்தக் கிருபையை அளவில்லாமல் பெற்றுக் கொள்வது எப்படி? முதலாவதாக, கிருபையை பெற்றுக் கொள்வதற்கு அருமையான நேரம் அதிகாலை நேரம்தான். வேதம் சோல்லுகிறது: "காலைதோறும் கர்த்தருடைய கிருபைகள் புதியவைகளா இருக்கிறது" (புலம். 3:23).

இரண்டாவதாக, "இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்" (நீதி. 3:34). ஆம், கர்த்தர் உங்களிடத்தில் தாழ்மையான இருதயத்தை எதிர்பார்க்கிறார். நீங்கள் உங்களை தேவ சமுகத்திலே தாழ்த்தும் போது, கர்த்தர் நிச்சயமாகவே உங்களை உயர்த்துவார்.

மூன்றாவதாக, நீங்கள் கர்த்தருக்குக் காத்திருக்கும் போது, தேவனை துதித்து மகிமைப்படுத்தும்போது, கிருபை உங்களை சூழ்ந்து கொள்ளும். புதிய பெலனைப் பெற்றுக்கொள்வீர்கள். தேவபிள்ளைகளே, ஜெபத்திலே காத்திருந்து, "தேவனே, கிருபையின் ஆவியையும், விண்ணப்பத்தின் ஆவியையும் என்மேல் ஊற்றும் ஆண்டவரே" என்று மன்றாடுவீர்களா? கிருபையின் ஆவி உங்கள்மேல் ஊற்றப்படும்போது, நீங்கள் அநேகம் பேருக்கு ஒரு ஆறுதலின் பாத்திரமாக விளங்குவீர்கள். தாவீது சொல்லுகிறார்: "என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களா நிலைத்திருப்பேன்" (சங். 23:6).

நான்காவதாக, கர்த்தரை நம்புகிறவர்களுக்கு அவர் கிருபையளிக்கிறார். "கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்து கொள்ளும்" (சங். 32:10). "கர்த்தாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக" (சங். 33:22) என்று தாவீது சொல்லுகிறார்.

ஐந்தாவதாக, "கிருபையானது அநேகருடைய ஸ்தோத்திரத்தினாலே பெருகும்" (2 கொரி. 4:15). நீங்கள் குடும்பமாய் கர்த்தரைத் துதிக்கத் துதிக்க, உங்களுடைய உள்ளத்தை தேவன் தம்முடைய கிருபையினால் நிரப்புவார். தேவன் துதிகளின் மத்தியில் வாசம்பண்ணும்படி கடந்து வருவார். அவர் வரும்போது வெறுமையாய் வருவதில்லை. கிருபையோடு வருவார். கிருபையின் பாத்திரமாய் உங்கள் வாழ்க்கையை வனைவார். கிருபையின் ஆவிகளை உங்கள்மேல் ஊற்றுவார். அப்பொழுது கிருபையின் வரங்கள், வல்லமையாய் உங்களில் கிரியை சேது கொண்டேயிருக்கும்.

தேவபிள்ளைகளே, கர்த்தருடைய அருமையான கிருபை உங்களில் பெருகும்படி கர்த்தரை எப்போதும் ஸ்தோத்திரிப்பீர்களா?

நினைவிற்கு:- "கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்" (சங். 34:1).