வேண்டிக் கொள்ளுங்கள்!

"சகோதரரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்" (1 தெச. 5:25).

நீங்கள் ஊழியர்களை சந்திக்கும்போதெல்லாம், "எங்களுக்காக ஜெபியுங்கள்" என்று சொல்லுகிறீர்கள். உங்களுடைய பாரங்களையெல்லாம் கர்த்தருடைய ஊழியக்காரர்களிடத்தில் இறக்கி வைத்து, "ஐயா, உங்களுடைய ஜெபம்தான் எங்களை விடுவிக்க வேண்டும். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது என்று வேதம் சொல்லுகிறது அல்லவா?" என்று கூறுகிறீர்கள். உங்கள் வாழ்க்கையின் துயரங்களையும், போராட்டங்களையு மெல்லாம் மனந்திறந்து கர்த்தருடைய ஊழியக்காரர் களிடத்தில் பகிர்ந்து கொள்ளுகிறீர்கள்.

அதே நேரத்தில், ஒன்றை நீங்கள் மறந்துபோவிடக் கூடாது. நீங்களும் ஊழியக்காரர்களுக்காய் ஜெபிக்க வேண்டும். ஊழியக்காரர்களும் உங்களைப்போல மனுஷர்கள்தானே. அவர்களுக்கு உங்களுடைய ஜெபம் அவசியம் தேவை. உங்களுடைய ஜெபத்தினாலே, அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள்.

பேதுரு ஒரு வல்லமையான பிரசங்கிதான். ஒரே பிரசங்கத்தில், மூவாயிரம் பேரை கர்த்தருக்குள் வழி நடத்தினவர்தான். பிறவி சப்பாணியின் கைகளைப் பிடித்து தூக்கிவிட்டு, தெய்வீக சுகத்தை அவனுக்குள் கொண்டு வந்தவர்தான். ஆனால் ஒரு சந்தர்ப்பத்தில், அவருக்கும் ஜெபம் தேவைப்பட்டது. ஏரோது ராஜா பேதுருவைப் பிடித்து சிறைச்சாலையில் போட்டுவிட்டு, புளிப்பில்லாத அப்பப்பண்டிகை முடிந்தவுடன் அவரைக் கொல்லுவதற்காக காத்துக்கொண்டிருந்தான்.

வேதம் சொல்லுகிறது, "பேதுரு சிறைச்சாலையிலே காக்கப்பட்டிருக்கையில் சபையார் அவனுக்காகத் தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம் பண்ணினார் கள்" (அப். 12:5). அந்த ஜெபம் எவ்வளவு வல்லமையுள்ளதாயிருந்தது! அந்த ஜெபம் தேவதூதனை அங்கே கொண்டுவந்து நிறுத்தியது. பேதுருவின் கைகளிலிருந்த சங்கிலி, அறுந்து கீழே விழும்படி செய்தது. அதுமாத்திரமல்ல, ஜெபித்துக் கொண்டிருந்த சபையாரின் வீட்டுக்கு அவரைக் கொண்டுவந்தது. அந்த ஜெபத்தினால் பேதுரு பாதுகாக்கப்பட்டார். எழுப்புதல் தொடர்ந்து நடக்க ஏதுவானது.

ஆகவேதான் எல்லா ஊழியக்காரர்களின் சார்பிலும் அப். பவுல், மிகப் பணிவன்போடு, விசுவாசிகளைப் பார்த்து, "சகோதரரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்" என்று சொல்லுகிறார் (1 தெச. 5:25). "திருவசனம் செல்லும்படியான வாசலை தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள்" என்றும் குறிப்பிடுகிறார் (கொலோ. 4:4).

திருவசனத்தை எதிர்த்து சாத்தானும், திருவசன ஊழியத்தை எதிர்த்து வான மண்டலத்திலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளும் போராடுகின்றன. கிருபையின் வாசல்களை அடைக்கும்படி துரைத் தனங்களும், அதிகாரங்களும் போராடுகின்றன. ஜெபத்தின் மூலமாகவே இவற்றை வெல்ல முடியும்.

ஊழியக்காரர்கள், சுவிசேஷ பணியை வல்லமையாச் செய்வதற்கு அவர்களுடைய வார்த்தைகளில் வல்லமை தேவை. ஆவியின் வரங்கள் தேவை. விடுதலையோடு சுவிசேஷம் அறிவிக்கப்படுவதற்கு கர்த்தருடைய ஞானம் தேவை. மாத்திரமல்ல, அந்நிய மொழி பேசுகிற மக்கள் மத்தியில் பேசுவதற்கு அந்த பாஷையைப் பற்றிய அறிவும் தேவை. தேவபிள்ளைகளே, அதற்காக நீங்கள் ஜெபிக்க வேண்டியது அவசியமல்லவா?

நினைவிற்கு:- "எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்; நாங்கள் நல்மனச்சாட்சியுள்ளவர் களாய் எல்லாவற்றிலும் யோக்கியமாய் நடக்க விரும்புகிறோமென்று நிச்சயித்திருக்கிறோம்" (எபி. 13:18).