வாழ்நாளெல்லாம் கிருபை!

"நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்" (சங்.90:14).

காலைதோறும், கர்த்தருடைய கிருபைகள் புதியவைகளாய் இருக்கின்றன. காலைதோறும் உங்களை தேவசமுகத்திலே தாழ்த்தி, தேவ கிருபைக்காக் காத்திருக்கும்போது, கர்த்தர் தமது கிருபையை அளவில்லாமல் உங்கள்மேல் ஊற்றியருளுவார். அவர் கிருபையில் ஐசுவரியமுள்ள தேவன் அல்லவா? "நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்" (சங். 90:14) என்பதுதான், மோசேயின் ஜெபம்.

நோவாவின் காலத்திலிருந்த உலகம் பாவத்திலும், அக்கிரமத்திலும் நிறைந்து, கர்த்தருடைய கோபாக்கினையை தன்மேல் வரவழைத்துக் கொண்டது. அது சீர்கெட்ட முறையில் போய்க் கொண்டிருந்தது. எனவே மனுஷனை உண்டாக்கின தற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார், விசனப்பட்டார். ஆனால், அந்நாட்களில் நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது.

அந்தக் கிருபை, எத்தனை பாக்கியம் பாருங்கள்! அந்தக் கிருபையினால்தான், கர்த்தர் நோவாவிடம், பேழையைக் கட்டும்படி சொன்னார். அந்த கிருபையினால் தான், நோவாவையும், அவருடைய முழுக்குடும்பத்தையும், அந்தப் பேழைக்குள் ஏற்றினார். முழு உலகமும் அழிக்கப்பட்டபோதும், கிருபையினால், நோவாவின் குடும்பம் மட்டும் பாதுகாக்கப்பட்டது.

தேவபிள்ளைகளே, இன்றைக்கு கர்த்தருடைய கண்களில், உங்களுக்கும் கிருபை கிடைத்திருக் கிறது. இரட்சிப்பின் பேழையாகிய கிறிஸ்துவுக்குள் பிரவேசிக்கிற பாக்கியத்தையும், கிருபையையும் கர்த்தர் உங்களுக்குத் தந்திருக்கிறார். இந்த உலகம் பாவங்களினாலும், அக்கிரமங்களினாலும் நிரம்பி, நியாயத்தீர்ப்புக்குள்ளாய் சென்று கொண்டிருக்கும் போது, உலகம் தரக் கூடாத சமாதானத்தினாலும், சந்தோஷத்தினாலும் உங்களை நிரப்பியிருக்கிறார். இது தேவனுடைய பெரிதான கிருபை அல்லவா?

நோவாவுக்கு கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்ததைப் போலவே, லோத்துக்கும் அவர் கண்களில் கிருபை கிடைத்தது. "உமது கண்களில் உமது அடியேனுக்குக் கிருபை கிடைத்ததே; என் பிராணனைக் காக்கத் தேவரீர் எனக்குச் செய்த கிருபையைப் பெரிதாக விளங்கப்பண்ணினீர்" (ஆதி.19:19) என்றார்.

சோதோமை அழிக்கும்படி முன்குறித்த கர்த்தர், லோத்தின் மேல் கிருபை வைத்ததினாலே, லோத்தை மாத்திரமல்ல, அவரது மொத்தக் குடும்பத்தையும் காப்பாற்ற சித்தமானார். அந்தக் கிருபை லோத்தின் மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் கிடைத்தது. மருமக்கள்மாரோடே பேசி, அவர்களையும் அந்தக் கிருபைக்குள் கொண்டு வர லோத்து முயற்சித்தார். ஆனால், அந்தோ! அவர்கள் அந்தக் கிருபையை உதறித் தள்ளிவிட்டார்கள். லோத்தும், அவருடைய பிள்ளைகளும் மட்டுமே சோதோமில் அழிக்கப்படாமல் தப்பியது, கர்த்தருடைய கிருபையல்லவா!

தேவபிள்ளைகளே, உங்கள் வாழ்நாளெல்லாம் கர்த்தருடைய கிருபை உங்களைப் பின்தொடரும் படிக்கு, "நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்" என்று தீர்மானம் செய்து, கர்த்தருடைய கரத்தில் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஒப்புக்கொடுத்து விடுங்கள்.

நினைவிற்கு:- "நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாக் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்" (எபி. 4:16).