என்றுமுள்ள கிருபை!

"கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது" (சங். 136:1).

சங்கீதங்களிலே, 136-வது சங்கீதம், ஒரு விசேஷமான சங்கீதமாகும். இதில், இருபத்தாறு வசனங்கள் உள்ளன. ஒவ்வொரு வசனத்தின் முடிவிலும், "அவர் கிருபை என்றுமுள்ளது" என்று வருகிறது. தாவீது ராஜா, கர்த்தர் செய்த எண்ணற்ற அற்புதங்களையும், அதிசயங்களையும் மாத்திரமல்ல மகத்துவங்களையும் விவரித்து விட்டு, கூடவே அவருடைய கிருபையையும் சேர்த்து, "அவர் கிருபை என்றுமுள்ளது" என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்துகிறார்.

"கிருபை" என்ற வார்த்தை எபிரெய மொழியில், "ஹெயின்" என்றும், கிரேக்க மொழியில் "கேரிஸ்" என்றும் குறிப்பிடப்படுகிறது. அதன் அர்த்தம், "மேன்மை யான நிலைமையிலுள்ள ஒருவர், தன்னுடைய மேன்மையைப் பொருட்படுத்தாமல், மற்றவர்களுக்கு செய்யக்கூடிய தயவு" என்பதாகும். மகா உன்னதமான தேவன், களிமண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட மனுஷன்மேல் பாராட்டுகிற அளவில்லாத அன்புதான், "கிருபை." அந்தக் கிருபையை தாவீது தியானித்துவிட்டு, "அந்தக் கிருபை என்றுமுள்ளது" என்று சொல்லுகிறார். "என்றுமுள்ளது" என்ற வார்த்தையை, சற்று தியானித்துப் பாருங்கள். "என்றும்" என்ற வார்த்தையானது, கடந்த காலத்தையும் குறிக்கும்; நிகழ்காலத்தையும் குறிக்கும்; வருங்காலத்தையும் குறிக்கும். நேற்றும், இன்றும், என்றும் அவர் கிருபையுள்ளவர்.

தேவபிள்ளைகளே, உங்களுடைய "நேற்று" என்பது, குறுகிய காலம்தான். ஆனால் கர்த்தருடைய "நேற்று" என்பது, கடந்து வந்த பல கோடி வருஷங்களைக் குறிக்கிறது. ஆம், கர்த்தர் உலகத்தோற்றத்திற்கு முன்பாகவே, உங்கள் மேல் கிருபை உள்ளவராயிருந்தார். உலகத்தோற்றத்திற்கு முன்பாகவே, உங்களைத் தெரிந்து கொண்டார். உலகத்தோற்றத்திற்கு முன்பாகவே, உங்களுக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானார். அது தேவனுடைய கிருபை.

இன்றைக்கும் தேவன் கிருபையுள்ளவராயிருக்கிறார். மாத்திரமல்ல, கிருபையின் வாசலைத் திறந்து வைத்து, கிருபையின் ஆவியை ஊற்றிக்கொண்டுமிருக்கிறார். வருங்காலத்திலும் அவர் கிருபையுள்ளவராயிருப்பார். அவர் கிருபையோடு ஆயிரமாயிரம் வருஷம் அரசாளுவார். நித்திய நித்தியமான கிருபையை பாராட்டி, உங்களுக்காக மனமிரங்குவார்.

வேதம் சோல்லுகிறது: "கிருபையினாலே சிங்காசனம் ஸ்தாபிக்கப்படும்; நியாயம் விசாரித்துத் துரிதமாய் நீதிசெய்கிற ஒருவர் அதின்மேல் தாவீதின் கூடாரத்திலே நியாயாதிபதியாய் உண்மையோடே வீற்றிருப்பார்" (ஏசாயா 16:5). ஆம், தேவன் உங்கள்மேல் கிருபை பாராட்டினபடியால், நீங்கள் என்றென்றும் தேவனோடு இருக்கும்படி, கிருபையினாலே சிங்காசனத்தையும் ஸ்தாபித்தார்.

தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களை நித்திய நரகத்திற்காக, பாதாளத்திற்காக நியமிக்காமல், உங்களை இரட்சித்து விடுவிப்பார். ஜெயங்கொள்ளுகிறவன் எவனோ அவனும் அவருடைய சிங்காசனத்தில் அவரோடேகூட உட்காரும்படி அருள் செய்வார் (வெளி. 3:21). அந்த தேவனை நன்றியோடு ஸ்தோத்திரிப்பீர்களா? அவருடைய கிருபையில் நிலைத்திருப்பீர்களா?

நினைவிற்கு:- "நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்" (ஓசியா 2:19).