தாழ்வில் நினைத்த கிருபை!

"நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது" (சங். 136:23).

கர்த்தர், உங்களுடைய தாழ்விலே உங்களை நினைக்கிறவர். உங்களிடத்தில் செல்வம் பெருகும்போது, உங்களை நினைக்க ஏராளம்பேர் உண்டு. உங்களுக்கு புகழ்பாடி, நன்கொடை பெறுகிறவர்கள் அநேகர் உண்டு. ஆனால் நீங்கள் வறுமையிலே வாடும்போதும், பசியோடும் பட்டினியோடும் தவிக்கும்போதும், உங்களை ஒருவரும் தேடுவதுமில்லை, நினைப்பதுமில்லை.

ஆனால் கர்த்தரோ, உங்களுடைய தாழ்விலே உங்களை நினைக்கிறார். உலகமே உங்களை அற்பமாய் எண்ணிப் புறக்கணித்தாலும், கர்த்தர் உங்களை அன்போடு விசாரிக்கிறார். கிருபையின் உடன்படிக்கையை அவர் உங்களோடு செய்திருக்கிறார் அல்லவா? "மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலை பெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்" (ஏசா. 54:10).

"கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார், அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்" (சங். 115:12). தேவபிள்ளைகளே, உங்களுடைய பிரச்சனைகளையும், போராட்டங்களை யும், நீங்கள் கடந்து வருகிற வேதனையான பாதைகளையும், கர்த்தர் அறிவார். உங்களுடைய வேதனையின் நாட்களும், வறுமையின் நாட்களும், கண்ணீரின் நாட்களும், போராட்டத்தின் நாட்களும் நிச்சயமாகவே முடிந்து போகும். கர்த்தர் தமது கிருபையால், புதிய வாசலைத் திறந்து, உங்களை உயர்த்தி மேன்மைப்படுத்துவார்.

ஆகவே தான் மோசே, "தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும், சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும். நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்" (சங். 90:15,14) என்று ஜெபித்தார்.

தானியேலின் வாழ்க்கையிலே கர்த்தர், எவ்வளவு இரக்கம் செய்து, அவர்மேல் அன்புகூர்ந்து நினைத்தருளினார்! தானியேல் விலங்கிடப்பட்டு, ஏறத்தாழ நானூறு மைல்கள் பாபிலோனை நோக்கி அடிமையாய் நடக்கும்போது, எவ்வளவு வேதனை யாயிருந்திருக்கும்! வழிகளிலெல்லாம் பசியோடும், தாகத்தோடும், வேதனையோடும் நடந்து சென்றிருந்திருக்கக்கூடும்.

ஆனால், அந்தத் தாழ்மையில் கர்த்தர் தானியேலை நினைத்தருளி, முழு பாபிலோனுக்கும் அதிகாரியாய் உயர்த்தினார். தானியேலை கனத்தினாலும், மகிமை யினாலும் முடிசூட்டினார். ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் முகங்குப்புற விழுந்து, தானியேலை வணங்கினார் என்று தானி. 2:46-ல் வாசிக்கிறோம். ராஜாவாகிய பெல்ஷாத்சார் தானியேலுக்கு இரத்தாம்பரத்தையும், கழுத்தில் பொற்சரப்பணியையும் தரிப்பித்தார் என்று தானி. 5:29-ல் வாசிக்கிறோம்.

தேவபிள்ளைகளே, தானியேலை உயர்த்தின கர்த்தர், நிச்சயமாகவே உங்களையும் உயர்த்தி ஆசீர்வதிப்பார். உங்கள் இனத்தார், உறவினர்களின் மத்தியிலே, கர்த்தர் நிச்சயமாகவே தமது கிருபையால் உங்களைக் கனப்படுத்தி, மேன்மைப்படுத்துவார். நீங்கள் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பீர்கள்.

நினைவிற்கு:- "அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே" (2 கொரி. 8:9).