விலகாத கிருபை!

"மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னை விட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்" (ஏசா. 54:10).

மலைகள், பல நூற்றாண்டுகள் நிலைத்து நிற்கக்கூடியவை. பனி படர்ந்த பர்வதங்களும், நிலைபெயராமல் நீண்ட காலம் நிற்கக்கூடியவை. ஆனாலும் அவைகள்கூட காலத்தின் சுழற்சியால் அல்லது பூகம்பங்களினால் பெயர்ந்து விலகிப் போகக்கூடும். ஆனால், கர்த்தர் அன்போடு உங்களைப் பார்த்து: "என் கிருபை உன்னை விட்டு விலகாமல், என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்" என்று சொல்லுகிறார். ஆம், தேவகிருபை எவ்வளவு அருமையானது! மாறும் இந்த உலகத்தில், மாறாத கிருபையுடன், அவர் உங்களுக்கு இரங்குவது எத்தனை மேன்மையானது!

தேவனுடைய கிருபையை ருசித்த தாவீது, "பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்து போனாலும், அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம்" (சங். 46:2,3) என்று முழங்குகிறார்.

ஒருவேளை நீங்கள், "ஏன் எனக்கு இந்த நோய் வந்தது?" "எதிர்பாராத பிரச்சனைகள் ஏன் என்னை தாக்கியது?" "ஏன் நான் பாடுகளின் பாதையிலே நடந்து கொண்டிருக்கிறேன்?" என்றெல்லாம் கலங்கலாம். பிரச்சனைகள், பாடுகள் மத்தியிலும் கர்த்தருடைய கிருபை மாறாததாய், உங்களை விட்டு விலகாததாய் என்றென்றும் இருக்கும். கிருபையினாலே, அவற்றிற்குத் தப்பிக்கொள்ளும் போக்கையும் கர்த்தர் உங்களுக்கு உண்டாக்குவார்.

ஒரு அருமையான தேவனுடைய ஊழியக்காரர், தன் மனைவி பிள்ளைகளோடு வசித்து வந்தார். அவரை குடும்பத்தோடு அழிப்பதற்கு ஒரு ரவுடிக் கும்பல் கம்புகளோடும், அரிவாள்களோடும், தடிகளோடும் ஒருநாள் புறப்பட்டு வந்தார்கள். "நீ கிறிஸ்துவை அறிவித்து, அநேகரை மதம் மாறச் செய்கிறாயா? உன்னை நாங்கள் விடுவதில்லை. உன்னோடு, உன் குடும்பத்தாரையும் கொலை செய்யப்போகிறோம்" என்று, வீட்டிற்கு வெளியே கத்தி பயமுறுத்தினார்கள்.

ஊழியருக்கு எந்த விதத்திலும் உதவி கிடைக்கவில்லை. போலீசுக்கும் அறிவிக்க முடியவில்லை. தெருவிலுள்ள ஜனங்களும் உதவி செய்ய முன்வரவில்லை. இக்கட்டான பரிதாபமான சூழ்நிலையில், அவர்கள் எல்லா கதவுகளையும் மூடி விட்டு, வீட்டுக்குள்ளேயே இருந்தார்கள். பிறகு குடும்பமாய், "ஆண்டவரே, எங்கள் ஜீவனைப் பார்க்கிலும் நீர் எங்கள் மேல் இதுவரை பாராட்டின கிருபை பெரியது. இனிமேலும் நீர் எங்களுக்குக் கிருபை பாராட்டுவீர். மலைகள் விலகினாலும் உமது கிருபை விலகாது என்று சொன்னீரே" என்று சொல்லி, அவர்கள் கர்த்தரை ஸ்தோத்தரித்தார்கள்.

அடுத்த நிமிடமே, அந்தத் தெருவிலுள்ள நாகளெல்லாம் கூடி வந்து, ரவுடிக் கும்பலின் மேல் பாந்தன. அவர்கள் தாங்கள் கொண்டு வந்த ஆயுதங்களையெல்லாம் போட்டுவிட்டு, ஓட ஆரம்பித்தார்கள். நாய்கள் அவர்களை துரத்திச் சென்று, சிதறடித்துப் போட்டன. தேவபிள்ளைகளே, "தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்" (சங். 84:11).

நினைவிற்கு:- "என் ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக" (சங். 66:20).