கிருபையுள்ள வார்த்தைகள்!

"எல்லாரும் அவருக்கு நற்சாட்சி கொடுத்து, அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள்" (லூக்கா 4:22).

நம் கர்த்தர் சகல கிருபையும் பொருந்தினவர். உங்களைக் கிருபையின்மேல் கிருபையடையச் செய்கிறவர். அவருடைய கிருபையுள்ள வார்த்தைகளெல்லாம், மன துருக்கத்தினாலும், அன்பினாலும், அளவற்ற கிருபையினாலும் நிரம்பியிருக்கின்றன. அவர் எப்பொழுதும் கிருபையுள்ள வார்த்தைகளையே பேசினார்.

இயேசு திமிர்வாதக்காரனைக் கண்டபோது, மனதுருகி, அவனை நோக்கி: "மகனே, திடன்கொள். உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது" என்றார் (மத். 9:2). அது ஒரு ஆறுதலின் வார்த்தையாய் மட்டுமல்ல, வல்லமையுள்ள வார்த்தையாகவும், கிருபையுள்ள வார்த்தையாகவுமிருந்தது. உடனே அவன் சொஸ்தமானான். கர்த்தருடைய வார்த்தைகளைக் கேட்க, திரளான ஜனங்கள் இரவும் பகலுமாய், மூன்று நாட்கள் கூடி வந்திருந்தார்கள். கர்த்தருடைய கிருபையுள்ள வார்த்தைகள், அவர்களுக்கு பலமான ஆன்மீக உணவாய் விளங்கியது.

அதோடு அவர்களை அனுப்பப் பிரியப்படாமல், "இயேசு தம்முடைய சீஷர்களை அழைத்து: ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் என்னிடத்தில் மூன்றுநாள் தங்கியிருந்து சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிட எனக்கு மனதில்லை, வழியில் சோர்ந்துபோவார்களே என்றார்" (மத். 15:32). அப்படியே மனதுருகி, அவர்களுக்கு வேண்டிய மட்டும் திருப்தியாய் போஷித்தார். ஏழு அப்பங்களையும், சில சிறு மீன்களையும் எடுத்து பகிர்ந்தளித்தார். எல்லாரும் சாப்பிட்டு திருப்தியடைந்தார்கள் (மத். 15:34-37).

தேவபிள்ளைகளே, நீங்கள் ஒவ்வொருநாளும் தேவ சமுகத்திற்கு சென்று ஜெபிக்கும்போது, கர்த்தருடைய வார்த்தைக்காகக் காத்திருங்கள். அவருடைய மெல்லிய சத்தம் உங்களை உயிர்ப்பிக்கட்டும், போதிக்கட்டும், வழிநடத்தட்டும். அவர் உங்களோடு பேச விரும்புகிறார். அவருடைய வார்த்தை உங்களுக்கு ஆறுதல் தருகிறது மட்டுமல்ல, அற்புதத்தையும் செய்யும். "உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே, அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது" (எரே. 15:16).

இயேசுவுக்கு முன்பாக குஷ்டரோகி ஒருவன் வந்து, முழங்கால்படியிட்டு, "ஆண்டவரே, உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும்" என்று வேண்டிக்கொண்டான். இயேசு மனதுருகி, கையை நீட்டி அவனைத் தொட்டு, "எனக்குச் சித்தமுண்டு சுத்தமாகு" (மத். 8:2,3; மாற்கு 1:40,41) என்று சொல்லி, சொஸ்தமாக்கினார். தேவபிள்ளைகளே, ஆண்டவருடைய அன்பின் வார்த்தைகள் உங்களுக்கும் ஒரு அற்புதத்தைச் செய்யும். ஆகவே, விசுவாசத்தோடு அவருடைய சமுகத்திற்கு வந்து, அவருடைய கிருபையுள்ள வார்த்தைகளுக்காக காத்திருந்து ஜெபியுங்கள்.

இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர். அன்றைக்கு எருசலேமிலும், யூதேயாவிலும், கப்பர்நகூமிலும் செய்த அற்புதங்கள் எல்லாவற்றையும், இன்றைக்கும் உங்களுடைய வாழ்க்கையிலும், குடும்பத்திலும் செய்ய அவர் வல்லமையுள்ளவர். உங்களோடுகூட பேச அவர் வல்லமையுள்ளவர். அவருடைய கிருபையுள்ள வார்த்தைகளை நீங்கள் நம்பும்போது, அவருடைய கிருபை உங்களை சூழ்ந்து கொள்ளும்.

நினைவிற்கு:- "அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம்" (யோவான் 1:16).