காக்கும் கிருபை!

"நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது" (ரோமர் 6:14).

நீங்கள் வழுவாதபடி, கர்த்தர் உங்களைக் காக்கிறவர். எத்தகைய பெரிய வீழ்ச்சியானாலும், அதிலிருந்து உங்களைக் காத்து, நிலைநிறுத்த அவருடைய பலத்த கரம் வல்லமையுள்ளதாக இருக்கிறது. நீங்கள் வழுவாதபடி நிலைத்து நிற்கவேண்டுமென்றால், உங்களுடைய கண்கள் கர்த்தரையே நோக்கிக் கொண்டிருக்கட்டும். ஜெபிக்கிற தேவனுடைய பிள்ளைகளின் ஐக்கியம், உங்களுக்கு அவசியம் தேவை.

மட்டுமல்ல, நீங்கள் உங்களை எப்போதும் தேவ சமுகத்திலே தாழ்த்தி, கிருபைக்காக ஒப்புக்கொடுக்க வேண்டும். வேதம் சொல்லுகிறது, "நீங்கள் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது" (ரோமர் 6:14). உங்களை உளையான சேற்றிலிருந்து, அவரது அளவற்ற கிருபையால் தூக்கி எடுத்த கர்த்தர், கிருபையாய் பாவங்களறக் கழுவின உங்களுடைய இரட்சகர், கிருபையாய் நீதியின் வஸ்திரங்களை தரிப்பித்த நீதிபரர், உங்களை அருமையாய் தமது கிருபையின் செட்டைகளுக்குள்ளே மறைத்து, முடிவு பரியந்தமும் நிலை நிறுத்துவார். கர்த்தருடைய கிருபைக்குள்ளே நீங்கள் இருக்கிறதினாலே, பாவமோ, சாபமோ ஒருபோதும் உங்களை மேற்கொள்ளவே முடியாது.

தூய அகஸ்டின் என்ற பக்தனைக் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் ஒவ்வொருநாளும், அதிகாலை வேளையில் தேவ சமுகத்திலே தன்னைத் தாழ்த்தி, "கிருபை தாரும், கிருபை தாரும்" என்று கிருபைக்காக நீண்ட நேரம் ஜெபிப்பார். அந்தந்த நாளுக்குரிய கிருபை அவர்மேல் பூரணமாய் இறங்கும் வரையில், ஸ்தோத்திரத்துடன் காத்திருப்பார்.

அந்தக் கிருபையைப் பெற்றுக்கொண்ட பிறகுதான், அவர் ஊழியத்தை ஆரம்பிப்பார். ஆகவேதான், எத்தனையோ நூற்றாண்டுகள் ஓடி மறைந்த போதிலும், அவருடைய பெயர் இன்றைக்கும் சரித்திரத்தில் நிலைத்திருக்கிறது. தேவபிள்ளைகளே, நீங்கள் கிருபையில் இருக்கும்போது, உங்களுக்கு வீழ்ச்சியில்லை. அந்தக் கிருபையில் நீங்கள் நிலைத்திருக்கும்போது, ஒருபோதும் வழுவி விழுவதுமில்லை.

தாவீது சொல்லுகிறார், "என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது" (சங். 94:18). எந்த நிலைமையிலும் நீங்கள் பெருமைக்கு இடங்கொடாமல், கிருபையிலே உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். பெருமை உள்ளவர்களுக்கும், மேட்டிமையுள்ளவர் களுக்கும் கர்த்தர் எதிர்த்து நிற்கிறார்.

ஆகவே, நீங்கள் மனத்தாழ்மையோடு நடந்து கொள்ளுங்கள். வேதத்தில் மூன்று இடங்களில், "தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்" என்பது திரும்பத் திரும்ப வருகிறது (நீதி. 3:34, யாக். 4:6, 1 பேதுரு 5:5). அப்படியானால், நீங்கள் உங்களைத் தாழ்த்தி, கிருபையைப் பெற்றுக்கொள்ள வேண்டியது எத்தனை அவசியமாக இருக்கிறது!

நீங்கள் பழைய ஏற்பாட்டிலுள்ள பக்தர்களைப் போல நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல், கிறிஸ்துவின் மேல் ஸ்தாபிக்கப்பட்ட கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறீர்கள். தேவபிள்ளைகளே, கிருபையைப் பெற்றுக்கொள்ளுங்கள். கிருபையில் நிலைத்திருங்கள். கிருபையில் பெருகுங்கள்.

நினைவிற்கு:- "அந்தக் கிருபையை அவர் சகல ஞானத்தோடும், புத்தியோடும் எங்களிடத்தில் பெருகப்பண்ணினார்" (எபே.1:8).