சுதந்தரித்துக் கொள்!

"நீ போய் அதைச் சுதந்தரித்துக்கொள்; பயப்படாமலும் கலங்காமலும் இரு" (உபா. 1:21).

"சுதந்தரித்துக்கொள்ளுங்கள்" என்பதே, கர்த்தருடைய ஆலோசனை. கர்த்தர் உங்களை எந்த இடத்தில் வைத்திருக்கிறாரோ, அந்த இடத்தை உங்களுக்கு சுதந்தரமாகக் கொடுப்பார். "நீங்கள் கால்மிதிக்கும் இடத்தையெல்லாம், உங்களுக்கு சுதந்தரமாகக் கொடுப்பேன்" என்று கர்த்தர் வாக்களித்திருக்கிறார்.

ஒரு சகோதரன் சாட்சியாக, "என்னுடைய அலுவலகத்தில் மிகவும் சாதாரணமான ஒரு வேலை எனக்குக் கொடுக்கப்பட்டது; சம்பளமும் மிகவும் குறைவாகவே யிருந்தது. ஆனால் கர்த்தர் என்னோடு இருந்ததினாலே, எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ள வேண்டும்; எல்லாருக்கும் மேலாக உயர்த்தப்பட வேண்டும் என்ற திடமான தீர்மானம் எனக்குள் வந்தது. ஆகவே, ஜெபத்தோடு முயற்சித்தேன். எந்த கம்பெனியில் சாதாரண பணியாளனாக சேர்ந்தேனோ, அதே கம்பெனியில் கர்த்தர் என்னை மேலாளராக உயர்த்தினார்" என்று சொன்னார். கர்த்தர் ஆபிரகாமுக்கு கானான் தேசத்தை வாக்குப்பண்ணி, அதை அவருக்கும் அவரது சந்ததிக்கும் சுதந்தரமாகக் கொடுக்க சித்தமானார். "நீ பரதேசியாய்த் தங்கியிருக்கிற இந்த கானான் தேசம் முழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்தரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்கு தேவனாயிருப்பேன் என்றார்" (ஆதி. 17:8).

கானான், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசம். முற்பிதாக்களுக்கு ஆணையிடப்பட்ட தேசம் (யாத். 6:8). அது பாலும் தேனும் ஓடுகிற தேசம் (லேவி. 20:24). நீர்ப்பாச்சலான வயல்களுள்ள தேசம் (எண். 16:14). எகிப்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் ஜனங்கள், கானானின் அருகே வந்தார்கள். ஆனால், அந்த கானானுக்குள்ளே ஏழு ஜாதிகளும், முப்பத்தொரு ராஜாக்களும் இருந்து இஸ்ரவேலை முழுவதுமாய் எதிர்த்தார்கள். போரிட ஆயத்தமானார்கள்.

கர்த்தர் சுதந்தரமாய் உங்களுக்குக் கொடுக்க விரும்புகிறவைகளை, சுதந்தரித்துக் கொள்ளுங்கள். நீங்கள் சோர்ந்துபோவீர்களானால், உங்கள் பெலன் குறுகிப்போகும். நீங்கள் அவிசுவாசியாயிருப்பீர்களானால், அதுவே உங்களுக்குத் தோல்வியைக் கொண்டுவந்துவிடும். ஆகவே, திடன்கொள்ளுங்கள். தேசத்தைச் சுதந்தரிக்க வேண்டியது உங்கள் கடமை. கர்த்தர் உங்களை இம்மையில் மட்டுமின்றி, நித்தியத்திலும் சுதந்தரவாளிகளாக வைத்திருக்கிறார்.

அன்றைக்கு, இஸ்ரவேல் ஜனங்களுக்கு பூமியிலுள்ள கானான் தேசம் சுதந்தரமாகக் கொடுக்கப்பட்டது. உங்களுக்கோ கர்த்தர் பரம கானானை சுதந்தரமாக வைத்து, பரலோக ராஜ்யத்தை மாத்திரமல்ல, அனைத்து ஆவிக்குரிய வரங்களையும், வல்லமைகளையும்கூட சுதந்தரமாகக் கொடுத்திருக்கிறார்.

தேவபிள்ளைகளே, பரலோகப்பாதையிலே பரம கானானை நோக்கி முன்செல்லும்போது, எத்தனையோ விதமான எதிர்ப்புகளும், சத்துருவின் போராட்டங்களும் வரக்கூடும். இயேசுவின் நாமத்தினாலும், கல்வாரியின் இரத்தத்தினாலும், சாட்சியின் வசனத்தினாலும் அவற்றின்மீது ஜெயங்கொண்டவர்களாய், தைரியமாய் முன்னேறி செல்லுங்கள். வாக்குத்தத்தம் பண்ணின தேவன் உண்மையுள்ளவர். நிச்சயமாகவே, தாம் வாக்குப்பண்ணின பரம கானானை உங்களுக்கு சுதந்தரமாகக் கொடுப்பார்.

நினைவிற்கு:- "விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான்" (எபி. 11:8,10).