தப்பிக்கொள்ளும்படி!

"உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள்சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்" (1 கொரி. 10:13).

சோதனையிலிருந்து தப்பிக்கொள்ளும்படியான ஒரு போக்கை, கர்த்தர் உண்டாக்குவார். ஆங்கில வேதாகமத்தை வாசிக்கும் போது, "தப்பிக்கொள்ளும்படியான ஒரு போக்கை சிருஷ்டிப்பார்" என்று எழுதியிருக்கிறது. எந்த வழியிலும் நீங்கள் தப்பிக்கொள்ளவே முடியாது என்று நினைக்கும்போது, கர்த்தர் நீங்கள் நினைத்திராத ஒரு புதிய வழியை சிருஷ்டித்தாகிலும் உங்களைப் பாதுகாப்பார்.

சாத்தான், இரண்டு விதங்களில் உங்களை சோதிக்க முயற்சிப்பான். ஒன்று, உங்களுடைய உள்ளத்தை உலக ஆசைகளால் கவர்ச்சித்து, உங்களுக்கு நன்மையையும் சந்தோஷத்தையும் உண்டாக்குகிறதைப்போலக் காட்டி, பாவத்தில் விழும்படி சோதிப்பான். அல்லது உபத்திரவங்களையும், நோய்களையும், விபத்துக்களையும் கொண்டுவந்து துக்கப்படுத்தி, மனமடிவை உண்டாக்கி சோதிப்பான். நீங்கள் அடிக்கடி விழுந்து போகிற பலவீனமான பகுதியை அறிந்து, அதிலே அவன் உங்களைத் தாக்க வழிகளை வகுப்பான்.

"மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்" (1 கொரி 10:13). சோதிக் கப்படும்போது, சோதனைகளைத் தாங்குவதற்கு கர்த்தர் உங்களுக்குப் பெலனைத் தருவார். அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.

உங்களுடைய பிள்ளைகள் பரீட்சைகளை எழுதும்போது, அவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெறும்படி அவர்களுடைய உள்ளத்தில் ஆலோசனையை கொடுப்பார். நீங்கள் உங்களால் விடுவித்துக் கொள்ள முடியாத சிக்கல்களில் சிக்கிக்கொள்ளும்போது, அவற்றிலிருந்து விடுபடக்கூடிய தெய்வீக ஞானத்தையும் தந்தருளுவார்.

ஒருமுறை சவுலும், அவனது மனுஷரும் தன்னைத் தேடிவருகிறார்கள் என்று தாவீது அறிந்து, மாகோன் வனாந்தரத்திலே தங்கியிருந்தார். அதை அறிந்து கொண்ட சவுல், அவனுடைய பெரிய சேனையோடுபோய் தாவீதையும், அவனோடுகூட இருந்த வீரர்களையும் வளைந்து கொண்டான். ஆனால் கர்த்தர் தாவீதுக்கு, அவர் தப்பிக்கொள்ளும்படியான ஒரு புதிய வழியை உருவாக்கிக் கொடுத்தார். பாருங்கள்!

திடீரென்று ஒரு ஆள் சவுலிடம் வந்து, "நீர் சீக்கிரமாய் வாரும். பெலிஸ்தர் நமது தேசத்தின் மேல் படையெடுத்து வந்திருக்கிறார்கள்" என்று சொன்னான். அப்பொழுது சவுல், "தாவீதை எப்பொழுது வேண்டுமென்றாலும் பிடித்துக் கொள்ளலாம். ஆனால், பெலிஸ்தியருடைய கையிலிருந்து நாட்டை தப்புவித்தேயாக வேண்டும்" என்று சொல்லி, அதற்கு முதல் முக்கியத்துவம் கொடுத்து, தாவீதை விட்டுவிட்டு பெலிஸ்தியரைச் சந்திக்கப் புறப்பட்டுப்போனான். கர்த்தர் தாவீதுக்கு மனமிரங்கி, சவுலின் உள்ளத்தை திசை திருப்புகிற ஒரு புதிய போக்கை உருவாக்கினார் (1 சாமு. 23:24-28).

தேவபிள்ளைகளே, விரோதிகள் உங்களுக்கு விரோதமாய் எழும்புகிறார்களா? பில்லி சூனியங்கள் உங்கள் குடும்பத்தை தாக்குகின்றனவா? பயப்படாதிருங்கள். கர்த்தர் உங்களுக்காக வழக்காடி யுத்தம் செய்வார். உங்கள் சத்துருக்களை நீங்கள் ஒருபோதும் இனி காண்பதில்லை. உங்களோடுகூட இருக்கிறவர் பெரியவர்.

நினைவிற்கு:- "நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள்" (சங். 95:6).