விழித்துக்கொள்!

"தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பார்" (எபே. 5:14).

ஒன்று நீங்கள் தூக்கத்தை தெரிந்து கொள்ளவேண்டும்; அல்லது கிறிஸ்துவோடு உறவாடுவதைத் தெரிந்து கொள்ளவேண்டும். சுகபோகத்தை தெரிந்து கொள்ள வேண்டும்; அல்லது தேவனுடைய பிரசன்னத்தைத் தெரிந்து கொள்ளவேண்டும். கர்த்தருடைய கிருபையைப் பெற்றுக்கொள்ளுவதைத் தெரிந்து கொள்ளவேண்டும்.அல்லது கையை முடக்கி நித்திரை செய்வதை தெரிந்து கொள்ளவேண்டும்.

அதிகாலை வேளையின் ஆசீர்வாதங்கள் மிக மேன்மையானவை. "அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்" (நீதி. 8:17) என்று கர்த்தர் சொல்லுகிறார். காலைதோறும் கர்த்தருடைய கிருபைகள் புதியவைகளாயிருக்கிறது (புல. 3:23). காலை நேரத்தில் கர்த்தரை துதித்துப் பாடி ஜெபிக்கும்போது, தேவ பிரசன்னம் மிக மேன்மையாய் இருக்கும்.

"தூங்குகிற நீ, மரித்தோரை விட்டு எழுந்திரு" என்று வேதம் எச்சரிக்கிறது. தூங்குகிறவன் மரித்தோரோடு கட்டப்பட்டிருக்கிறான். பெருந்தூக்கம் பாவ மரணத்திற்குள் கொண்டு செல்லுகிறது. சிலர் தூங்குவதைப் பார்த்தால், செத்த பிரேதம் போல கிடப்பார்கள். இன்னும் சிலர் படுத்தால், ஆயிரம்பேர் சேர்ந்தாலும் எழுப்பக் கூடாதபடி மரக்கட்டையாகி விடுவார்கள்.

இந்தக் கடைசி நேரம் தூங்குவதற்குரிய நேரமல்ல. கர்த்தருக்காக எழும்பிப் பிரகாசிக்க வேண்டிய ஒரு நேரம். தூங்குகிற நீங்கள் விழித்து மரித்தோரைவிட்டு எழுந்திருங்கள். அப்போது கிறிஸ்து உங்களைப் பிரகாசிக்கச் செய்வார். ஏசாயா தீர்க்கதரிசி, "எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன் மேல் உதித்தது" (ஏசா. 60:1) என்று சொல்லுகிறார். பாவ இருளுக்கும், இருளின் ஆதிக்கத்திற்கும் விரோதமாய் நீங்கள் எழும்பவும், பிரகாசிக்கவும் வேண்டியதிருக்கிறது. தேவபிள்ளைகளே, காலத்தின் அருமையை அறிந்து எழும்புவீர்களா?

பழைய ஏற்பாட்டில், யோனா ஆமணக்குச் செடியின் கீழ் படுத்துத்தூங்கினான். அந்தச் செடி பூச்சியினால் அரிக்கப்படும் வரையிலும், வெயில் "சுள்" என்று முகத்தை சுடும் வரையிலும் தூங்கிக் கொண்டேயிருந்தான். வெயிலினால் தூக்கம் கெட்டபோது, தீர்க்கதரிசியாகிய யோனா சோர்ந்து போய் தனக்குள்ளே சாவை விரும்பி: "நான் உயிரோடிருக்கிறதைப் பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான்" (யோனா 4:8).

புதிய ஏற்பாட்டிலே, தூங்கிவழிந்த இன்னொரு வாலிபன் பெயர் ஐத்திகு. அப். பவுல் வல்லமையாய் பிரசங்கித்துக் கொண்டிருந்தார். விளக்குகள் எரிந்து கொண்டு இருந்தன. மாடியில் அநேகர் கர்த்தருடைய வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு இருந்தார்கள். ஆனால் ஐத்திகுவோ, ஜன்னலில் அமர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தான். அவனுக்கு வேதத்தின் மேல் விருப்பமில்லை. ஆழமான சத்தியங்களை கேட்கவும் உள்ளத்தை ஒப்புக்கொடுக்கவில்லை. தேவபிள்ளைகளே, வேதத்தின் மகத்துவங்களை அந்நிய காரியமாக எண்ணி (ஓசியா 8:12) தூங்கிக் கொண்டிராதேயுங்கள். வசனம் கிடைக்கக்கூடாத பஞ்சகாலம் வரப்போகிறதே!

நினைவிற்கு:- "நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்க வேண்டும்; இரவு சென்று போயிற்று, பகல் சமீபமாயிற்று; ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம்" (ரோம. 13:11,12).