பிரயோஜனப்படுத்திக் கொள்!

"காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்" (எபே. 5:16).

ஒவ்வொரு வினாடி நேரமும், கர்த்தர் உங்களுக்குக் கிருபையாக கொடுத்திருக்கிற ஈவு ஆகும். இழந்து போன காலத்தை நீங்கள் திரும்பப் பெற முடியாது. அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது. ஆகவே, காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்.

பணம் நஷ்டமானால், அதிகமான பணத்தை மீண்டும் சம்பாதித்துக் கொள்ளலாம். வீடு இடிந்து போனால், மீண்டும் அதை எடுப்பித்துக் கட்டி விடலாம். ஆனால் உங்களை விட்டு கடந்து போன நாட்களும், காலமும் ஒருபோதும் திரும்ப வருவதில்லை. ஆகவே, கிருபையின் வாசல்கள் திறந்திருக்கும் போதே, காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்.

சிறு எறும்பைப் பாருங்கள்! அது கோடைக்காலத்தைப் பிரயோஜனப்படுத்தி, தனக்கு வேண்டிய ஆகாரத்தை சேகரித்து வைக்கிறது. ஆகவே, மழைக்காலம் வரும் போது சேமித்து வைத்திருக்கும் உணவைப் பயன்படுத்திக்கொள்ளுகிறது. நீங்கள் ஆவியின் வல்லமை, கிருபை, அபிஷேக எண்ணைய் ஆகியவற்றை சேகரித்து வருவீர்களென்றால், மணவாளன் வரும்போது, வெட்கப்பட்டுப்போவதில்லை.

காலத்தைப் பிரயோஜனப்படுத்தி, உபவாசித்து, ஜெபித்து பரிசுத்தத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். பரிசுத்த வாழ்க்கைக்காக உங்களைச் சீர்ப்படுத்தி, திடப்படுத்தி, யார் யாரிடத்தில் ஒப்புரவாக வேண்டுமோ ஒப்புரவாகிக் கொள்ளுங்கள். கர்த்தருடைய வருகை சமீபமாயிருக்கிறதே. நீங்கள் இரட்சிக்கப்படாமலிருந்தால், இனி ஒருநாள்கூட அதை தள்ளிப் போடாதிருங்கள். "இதோ, இப்பொழுதே அநுக்கிரக காலம், இப்பொழுதே இரட்சணியநாள்" (2 கொரி. 6:2). "இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், உங்கள் இருதயங்களை கடினப்படுத்தாதிருங்கள்" (எபி. 3:7,8).

தாவீது தேவசித்தம் செய்வதற்காகவே, தன் வாழ்க்கையை அர்ப்பணித்திருந்தார். அவர் ஆடுகளை மேய்க்கும் நேரமானாலும் சரி, வனாந்திரத்தில் ஒளிந்து திரிய வேண்டிய நேரமாயிருந்தாலும் சரி, ராஜ்யபாரம் செலுத்தும்போதானாலும் சரி, தேவசித்தம் செய்து தன் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொண்டார். வேதம் சொல்லுகிறது: "தாவீது தன் காலத்திலே தேவனுடைய சித்தத்தின்படி அவருக்கு ஊழியஞ்செய்தபின்பு நித்திரையடைந்தான்" (அப். 13:36).

இந்த காலம் மவுனமாயிருக்கிற காலம் அல்ல. "நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே" (எஸ்தர் 4:14) என்று எஸ்தருக்கு, மொர்தெகாய் சொல்லி அனுப்பினார்.

தேவபிள்ளைகளே, காலத்தைப் பிரயோஜனப்படுத்தி ஜெபிக்க ஆரம்பித்து விடுங்கள். காலத்தைப் பிரயோஜனப்படுத்தி, அறுவடை செய்யுங்கள். அறுவடைக்குத் தயாராக வயல்நிலங்களெல்லாம் விளைந்திருக்கிறது. அறுவடை செய்யாமல் போனால், தானியங்கள் வீணாய் போவிடும். கீழே கொட்டி, சிதைந்து போய் விடும். தேசத்தின் குறுக்கும், நெடுக்கும் கடந்து சென்று, கர்த்தர் கொடுத்திருக்கிற அறுவடையை உற்சாகமாக செய்யுங்கள்.

நினைவிற்கு:- "நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்" (சங். 90:12).