மேல் வீட்டறை!

"மேல்வீட்டிலுள்ள ஒரு பெரிய அறையை உங்களுக்கு காண்பிப்பான்; அங்கே ஆயத்தம்பண்ணுங்கள்" (லூக். 22:12).

பஸ்கா பண்டிகையை ஆசரிப்பதற்காக, ஒரு மேல்வீட்டறையை ஆயத்தம் பண்ணுங்கள் என்று இயேசுகிறிஸ்து சீஷர்களிடம் சொன்னார். "அதை எங்கே ஆயத்தப்படுத்துவது?" என்று சீஷர்கள் கேட்டபோது, "நீங்கள் நகரத்தில் பிரவேசிக்கும்போது, தண்ணீர்க்குடம் சுமந்துவருகிற ஒரு மனுஷன் உங்களுக்கு எதிர்ப்படுவான்; நீங்கள் அவனுக்குப் பின்சென்று, அவன் போகும் வீட்டிற்குள் நீங்களும்போய், அந்த வீட்டெஜமானை நோக்கி: நான் என் சீஷரோடுகூடப் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கே என்று, போதகர் உம்மிடத்தில் கேட்கச் சொன்னார் என்று சொல்லுங்கள். அவன், கம்பளம் முதலானவைகள் விரித்திருக்கிற மேல் வீட்டிலுள்ள ஒரு பெரிய அறையை உங்களுக்குக் காண்பிப்பான்; அங்கே ஆயத்தம் பண்ணுங்கள்" (லூக். 22:10-13) என்று சொன்னார்.

ஊழியத்திலே இரவென்றும், பகலென்றும் பாராமல் நடந்து திரிந்த கிறிஸ்துவுக்கு, சீஷரோடு தனித்திருப்பதற்கு ஒரு மேலறை தேவைப்பட்டது. ஆம், அதுவே இயேசு கிறிஸ்து தமது சீஷர்களோடு பந்தியிருந்த, கடைசி இராப்போஜனம். அங்கே, "ஆயத்தம்" என்ற கம்பளங்கள் விரிக்கப்பட்டிருந்தன. இயேசு, மனம்திறந்து தம்முடைய சீஷர்களிடத்தில் பேசினார்.

சீஷர்கள், தேவனுடைய அன்பினால் நிரப்பப்பட்டார்கள். அவர் அப்பத்தை பிட்டபோது, "இது உங்களுக்காக பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது" என்றார். திராட்சரசத்தை கைகளில் எடுத்தபோது, "இது உங்களுக்காக சிந்தப்படுகிற என்னுடைய புதிய உடன்படிக்கையின் இரத்தமாயிருக்கிறது" என்று சொன்னார். அந்த மேல்வீட்டறை அனுபவம், சீஷர்களால் என்றென்றைக்கும் மறக்க முடியாத ஒரு அனுபவமாயிருந்தது. சீஷர்கள் இயேசுவோடுகூட தனித்திருந்த கடைசி சந்தர்ப்பமாக இது அமைந்தது.

இயேசுவோடு உறவாடுவதற்கு, மேல் வீட்டறையின் அனுபவம் உங்களுக்கு மிகவும் அவசியம். கீழ் வீட்டில் உங்களுடைய குடும்ப பிரச்சனைகள், போராட்டங்கள், கவலைகளெல்வாம் இருக்கக்கூடும். என்றாலும், மேல் வீட்டறையிலே இயேசுவோடு தனித்திருப்பதற்கு, சற்று நேரத்தை ஒதுக்குங்கள்.

ஒருவேளை நீங்கள், "இயேசுவுக்கு ஏன் மேல் வீட்டறை? சத்திரத்தை தெரிந்து கொண்ட கிறிஸ்துவுக்கு, ஏன் மாடி வீட்டின்மேல் ஆசை? ஏழை தச்சனின் குடிசைவீட்டை அடைக்கலமாய் கொண்ட மனுஷ குமாரனுக்கு, ஏன் உயர்ந்த வீடு?" என்று கேட்கலாம். கிறிஸ்துவுக்கு குடிசை வீடும் வேண்டும்; மாளிகை வீடும் வேண்டும். ஏழையும் வேண்டும்; செல்வந்தரும் வேண்டும். குடிசையில் குடியிருக்கிறவர்களும் வேண்டும்; மாட மாளிகைகளில் வீற்றிருக்கிறவர்களும் வேண்டும்.

தேவபிள்ளைகளே, மேல் வீட்டறையின் ஆவிக்குரிய அனுபவம் உங்களுக்கு மிகவும் தேவை என்பதை மறந்துபோகாதிருங்கள். கவலையும், கண்ணீரும் நிறைந்த இந்த உலகத்தில், இயேசுவோடு தனித்திருக்கிற மேல் வீட்டறையின் அனுபவத்தை வாஞ்சியுங்கள். துயரமும், துக்கமும் உங்களை சூழ்ந்துகொள்ளும்போது, உங்கள் இருதயத்தில் தெய்வீக சமாதானத்தை கொண்டு வரக்கூடியது, மேல் வீட்டறையின் ஆவிக்குரிய அனுபவமே!

நினைவிற்கு:- வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" (மத். 11:28).