பாடுகளும், துக்கங்களும்!

"மெயாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங் களைச் சுமந்தார்" (ஏசா. 53:4).

வாழ்க்கையின் மகிழ்ச்சியைப் பங்கு போடவும், செல்வங்களை பங்கு போடவும், அநேகர் வருவார்கள். நீங்கள் புகழும், அந்தஸ்தும் பெற்று புகழின் உச்சத்தில் உயரும்போது, உங்களைச் சார்ந்துகொள்ள விரும்புகிறவர்கள் ஏராளமுண்டு. ஆனால் பாடுகளையும், துக்கங்களையும், தரித்திரத்தையும் பகிர்ந்துகொள்ள யாரும் வருவதில்லை.

எந்த சூழ்நிலையிலும் உங்களோடுகூட வருகிறவர், இயேசு கிறிஸ்து ஒருவர் தான். அவரே உங்களுக்காக பரலோக மேன்மையைத் துறந்து, பூமிக்கு இறங்கி வந்தவர். அடிமையின் ரூபமெடுத்தவர். உங்களுடைய பாடுகளிலும், துக்கங்களிலும் பங்குபெறும்படி, மகிமையின் ராஜாவான அவர் மனுஷகுமாரனாக இந்த உலகத்திற்கு வந்தார்.

நீங்கள் இந்த பூமியிலே எந்த பாடுகளின் வழியாக கடந்து போகிறீர்களோ, அவற்றையெல்லாம் அவர் ருசி பார்த்தார். உங்களைப் போல பாடுள்ள மனுஷனானார். மட்டுமல்ல, உங்களுக்காக முள்முடி சூட்டப்பட்டு சிலுவையை சுமந்தார். உங்களுடைய கவலைகள் இன்னதென்று அவர் அறிவார்.

வேதம் சொல்லுகிறது, "மனுஷருடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும். நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்" (நீதி. 12:25). பட்டய குத்துக்களைப் போல பேசப்படுகிற வார்த்தைகள், உங்களுடைய இருதயத்தில் இரத்தம் வழியச் செய்யும். பாடுகளின் நடுவே, துக்கங்களினூடே நீங்கள் கடந்து செல்ல வேண்டியதிருக்கும் என்பதை முன்னறிந்த இயேசு, உங்களுக்காக தம் இருதயத்திலும், உடலிலும் காரணமற்ற காயங்களைச் சுமந்தார், அதை பொறுமையோடு சகித்தார்.

நீங்கள் பாடுகளின் வழியாகக் கடந்து செல்லுகிறீர்களோ? துக்கத்தின் வழியாக கடந்து செல்லுகிறீர்களோ? அந்நேரங்களில் ஆத்தும நேசரின் ஐந்து காயங்களையும் தியானித்துப் பாருங்கள். உங்களுடைய எல்லா நெருக்கத்திலும், அவரும் உங்களோடேகூட நெருக்கப்படுகிறார் என்பதையும், அவர் உங்கள் அனைத்து துயரங்களிலும் பங்கேற்கிறார் என்பதையும், மறந்து போகாதேயுங்கள்.

முள்முடி சூட்டப்பட்ட இயேசு, வழியும் தனது இரத்தத்தினாலே உங்களுடைய சகல சாபங்களையும் முறிக்கிறார். கையில் ஆணிகளால் கடாவுண்ட அவர், பாவங்களறக் உங்களைக் கழுவுகிறார். கால்களிலே இரத்தம் பீறிடும்படி சிதைக்கப்பட்ட அவர், சாத்தானின் சகல வல்லமைகளையும் அழித்து, உங்களுக்கு ஜெயத்தைத் தருகிறார். விலாவிலே குத்துண்டு, இரத்தமும், தண்ணீரும் பீறிட்டு வர ஒப்புக் கொடுத்த அவர், உங்களைத் தன் மணவாட்டியாக ஏற்றுக்கொள்ளுகிறார்.

தேவபிள்ளைகளே, நீங்கள் அந்த தியாகத்தின் ஆழத்தை சிந்திப்பீர்களா? அந்த கல்வாரி அன்புக்கும் தியாகத்திற்கும் தகுதியுள்ளதான வாழ்க்கை வாழும்படி, உங்களை ஒப்புக்கொடுப்பீர்களா? அந்த நேசத்தை உங்கள் தேசத்தவர்களும், இனத்தவர்களும் ருசிக்கும்படி, உங்கள் முழு பெலத்தோடும், முழு இருதயத்தோடும் அவருக்கு ஊழியஞ்செய்வீர்களா?

நினைவிற்கு:- "என்னிடத்தில் உங்களுக்கு சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்கு சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்" (யோவான் 16:33).