ஏன் அழுகிறாய்!

"ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய்?" (யோவான் 20:15).

அன்பு வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் உயிர்த்தெழுந்த இயேசுவின் நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். "ஏன் அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?" என்பதுதான், உயிர்த்தெழுந்த இயேசுவின் முதல் வார்த்தைகளாயிருந்தன.

இந்த வார்த்தைகளை இயேசு, மகதலேனா மரியாளைப் பார்த்துதான் கேட்டார். இவளுக்கு ஏழு பிசாசுகள் பிடித்திருந்ததையும், கர்த்தர் அதை நீங்கச் செய்ததையும் லூக். 8:2-லே நீங்கள் வாசிக்கலாம். அந்த நாள் முதற்கொண்டு, அவள் கர்த்தர் மேல் அளவில்லாத அன்பு வைத்திருந்தாள்.

இயேசு சிலுவையில் அறையப்படும்போது, சிலுவையின் அருகிலே கண்ணீரோடு அழுது கொண்டேயிருந்தாள். மகதலேனா மரியாள் என்றாலே, ‘கண்ணீர்’ என்று தான் அர்த்தம். அவளுடைய வாழ்க்கையெல்லாம் கண்ணீர்தான்.

சிலுவையின் பாடு மரணங்கள், அவளுடைய உள்ளத்தில் ஆறாத காயங்களை ஏற்படுத்தியிருந்திருக்கும். "இனி யார் எனக்கு உண்டு? பிசாசின் கையிலே சிக்கியிருந்த என்னை விடுவித்த இயேசு, இப்போது மரித்துவிட்டாரே? என்னைத் தேற்றுவார் ஒருவரும் இல்லையே" என்று தவித்திருந்திருப்பாள்.

"தன் மீட்பர் உயிரோடிருக்கிறார்" என்பதை அறியாத மகதலேனா மரியாள், கிறிஸ்துவைத் தேடி கல்லறைக்கு ஓடி வந்தாள். அங்கே, அவளுக்கு ஒரு அதிசயம் காத்திருந்தது. கல்லறை திறந்திருந்தது. இயேசுவின் சடலத்தை யாரோ எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள் என்று எண்ணி, அழுதபடி நின்றாள். அவளுடைய கண்ணீர், இயேசுவை அவளுடைய அருகிலே கொண்டு வந்து சேர்த்தது. கண்ணீரோடு தேடின அவள், உயிர்த்தெழுந்த இயேசுவை முதல்முதல் தரிசிக்கும் பாக்கியத்தைப் பெற்றாள்.

காரணம், மகதலேனா மரியாள் ஆவியோடும், உண்மையோடும் கர்த்தரைத் தேடினாள். கண்ணீருடன் கர்த்தரைக் காண வந்தாள். இன்றைக்கு நீங்களும்கூட, மரியாளைப்போல ஆதரவற்ற ஒரு சூழ்நிலையில் காணப்படுகிறீர்களா? எனக்கு ஆறுதல் சொல்ல ஒருவரும் இல்லையே, ஏன் நான் இந்த உலகத்தில் வாழ வேண்டும், என்று அங்கலாக்கிறீர்களா?

மரியாளைப் போல, உயிர்த்தெழுந்த இயேசுவின் பாதத்தில் உங்களுடைய கண்ணீரை ஊற்றுங்கள். மரியாளின் கண்ணீரைப் புறக்கணியாமல் அவளிடமாய் வந்து, "மரியாளே" என்று பெயர் சொல்லி அழைத்து, தாயைப் போல ஆற்றித் தேற்றின தேவன், நிச்சயமாகவே உங்களுடைய கண்ணீரையும் துடைப்பார். உயிர்த்தெழுந்த இயேசுவின் வார்த்தைகள் மரியாளுடைய உள்ளத்தில் எவ்வளவு ஆறுதலையும், சந்தோஷத்தையும், சமாதானத்தையும், நம்பிக்கையையும் கொண்டு வந்திருக்கும்.

தேவபிள்ளைகளே, நிச்சயமாகவே உங்களையும் அந்த உயிர்த்தெழுதலின் வல்லமையினால் கர்த்தர் நிரப்ப ஆவலோடிருக்கிறார். "அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்" (ரோமர் 8:11).

நினைவிற்கு:- "மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்" (வெளி. 1:18).