மறுபடியும் வருவார்!

"இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப் போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார்" (அப்.1:11).

"இயேசுகிறிஸ்து மறுபடியும் வருவார்" என்ற வாக்கு, எப்பொழுதும் உங்களுடைய இருதயத்தைப் பரவசப்படுத்தட்டும். அதுதான் உங்களுடைய வாழ்க்கையிலுள்ள மேன்மையான, மகிமையான நம்பிக்கை. இனிமையான எதிர்பார்ப்பு.

முதலாவது இயேசுகிறிஸ்து இந்த பூமியிலே வந்தபோது, அவர் உங்களுக்காக மரிக்கும்படி வந்தார். கல்வாரி சிலுவையிலே தன்னுடைய ஜீவனைக் கொடுத்து, உங்களுக்காக விலைக்கிரயம் செலுத்தினார். பாவ மன்னிப்பையும், இரட்சிப்பையும் கொடுத்தார்.

ஆனால் அவர் மீண்டும் வரும்போது, பலியான ஆடாக அல்ல, ராஜாதி ராஜாவாக, கர்த்தாதி கர்த்தாவாக வருவார். கிறிஸ்து, தெரிந்து கொள்ளப்பட்ட தம்முடைய பிள்ளைகளுக்காகவே வருவார். தம்முடையவர்களை தம்மிடம் சேர்த்துக் கொண்டிருக்கும் பணியை செய்து கொண்டிருப்பவர்களுக்கு, அவர் தரிசனமாவார். நீங்கள் அந்த நாளுக்காக ஏங்கி, எதிர்ப்பார்த்திருக்க வேண்டும். ஆவியானவரும் அந்த நாளுக்காக உங்களை ஆயத்தப்படுத்துகிறார். வேதம் சொல்லுகிறது: "இதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறவர் தேவனே; ஆவியென்னும் அச்சாரத்தை நமக்குத் தந்தவரும் அவரே" (2 கொரி. 5:5).

கர்த்தருடைய வருகையில், அவருடைய பிள்ளைகள் களிகூருவார்கள். கர்த்தருடைய ஊழியர்களுக்கு அது மிகுந்த கொண்டாட்டமாக இருக்கும். பாடுகள் மற்றும் வேதனைகளின் மத்தியில், தமக்கு ஊழியம் செய்தவர்களை, அவர் தன் வருகையின்போது, எவ்வளவாய் கனம் பண்ணுவார்! இயேசு சொன்னார்: "எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரரே பாக்கியவான்கள். அவர் அரைகட்டிக்கொண்டு, அவர்களைப் பந்தியிருக்கச் செய்து சமீபமாய் வந்து, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்" (லூக். 12:37).

இன்றைக்கு நம்முடைய தேசத்தில் அநேக தேவ ஊழியக்காரர்கள், வறுமைக் கோட்டின் கீழ் வாழுகிறார்கள். கிராமப்புறங்களில் மிகக் குறைந்த வருமானத்தைக் கொண்டவர்களாய் ஊழியம் செய்கிறார்கள். அநேக சுவிசேஷகர்களுக்கு நிரந்தரமான வருமானமோ, அல்லது மக்களின் ஒத்துழைப்போ இருப்பதில்லை. கிறிஸ்துவினுடைய வருகைதான், அவர்களுடைய எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஒரு நிவாரணமாயிருக்கும்.

இயேசுகிறிஸ்து தன் வருகையிலே, தம்முடைய பிள்ளைகளை தம்மோடு கூட அணைத்துக் கொள்ளுவார். "நான் எங்கே இருக்கிறேனோ என்னுடைய ஊழியக்காரனும் அங்கே இருப்பான்" (யோவான் 12:26) என்று இயேசு சொன்னார். மட்டுமல்ல, அவர் பிதாவை நோக்கி: " என்னுடைய பிள்ளைகள் எப்பொழுதும் என்னோடு கூட இருக்க வேண்டும்" என்று வேண்டிக்கொண்டார் (யோவான் 14:16).

தேவபிள்ளைகளே, உலகத்தில் பாடுகளும், உபத்திரவங்களும் இருந்தாலும், உங்களை அழைத்த தேவனுக்காக உண்மையும், உத்தமமுமாக அவற்றின் மத்தியில் நில்லுங்கள். அவருடைய வருகையின்போது, அவர் தாமே தம்முடைய பொற்கரத்தினால் உங்கள் கண்ணீர் யாவையும் தொட்டுத் துடைப்பார். ஆம், அந்த நாள் மிகவும் சமீபமாயிருக்கிறபடியால் மகிழ்ந்து களிகூருங்கள்!

நினைவிற்கு:- "இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல" (ரோமர் 8:18).