பின்வைத்துப் போனார்!

"நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்" (1 பேதுரு 2:21).

கிறிஸ்து உங்களுக்கு ஒரு முன்மாதிரியானவர். ஆவிக்குரிய வாழ்க்கை வாழுவதற்கு அவரே உங்களுக்கு வழிகாட்டி. வேதத்தை வாசிக்கும்போது, கிறிஸ்து உங்களுக்கு எல்லாவற்றுக்கும் மாதிரியான வாழ்க்கை வாழ்ந்தார் என்பதை, அநேக சந்தர்ப்பங்களில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

இன்றைக்கு அநேகர் கர்த்தரைப் பின்பற்றாமல், ஊழியர்களையும், சுவிசேஷகர்களையும் மட்டுமே பின்பற்ற நினைக்கிறதினாலே இடறலடைகிறார்கள். நீங்கள் எவ்வளவு தான் பரிசுத்தமாய் ஜீவிக்க வேண்டுமென்று விரும்பினாலும், சில குறைகள் உங்களுடைய வாழ்க்கையில் வந்து விடக்கூடும். ஆகவே, உங்கள் முன்மாதிரியாக எப்போதும் கிறிஸ்துவையே பின்பற்ற வேண்டும்.

ஒருமுறை காந்தியடிகளிடம் ஒரு பெற்றோர் வந்து, "ஐயா, எங்களுடைய மகன் (சிறுவன்) அதிகமாய் இனிப்பு வகைகளைச் சாப்பிடுகிறான். ஆகவே, நீங்கள் எங்கள் மகனுக்கு இது குறித்து அறிவுரை கூற வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்கள். அதற்கு காந்தியடிகள்: "உங்களுடைய மகனை இரண்டு வாரம் கழித்து, அழைத்து வாருங்கள். அதன்பின்பு ஆலோசனை கூறுகிறேன்" என்று சொல்லி, அனுப்பி விட்டார். அவர்களும் இரண்டு வாரத்திற்குப் பிறகு, மகனை அழைத்துக் கொண்டு வந்தார்கள். அவர் அந்த சிறுவனைப் பார்த்து: "தம்பி நீ இனிப்பு சாப்பிடாதே" என்று மாத்திரம் சொல்லி அனுப்பி விட்டார்.

சிறுவனுடைய பெற்றோரோ, "இதைச் சொல்லுவதற்காகவா இரண்டு வாரம் கழித்து வரச் சொன்னார்? இதை, இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே சொல்லி இருந்திருக்கலாமே" என்று எண்ணி, துக்கத்துடன் வீட்டுக்குப் போனார்கள். அன்றிலிருந்து, அந்த சிறுவன் இனிப்பு சாப்பிடுவதை நிறுத்திவிட்டான். சில நாட்களுக்குப் பின்பு, மகிழ்ச்சியுடன் வந்த அந்த பெற்றோரிடம் காந்தியடிகள்: "உங்கள் மகனை முதலில் என்னிடத்தில் கொண்டு வரும்போது, எனக்கும் இனிப்பு சாப்பிடுகிற பழக்கமிருந்தது. நான் அதிகமாய், உணவுக்கு பின்பு சுவீட் வகைகளை சாப்பிட்டு வந்தேன். அப்படியிருக்கும்போது, சிறுவனிடம் "சுவீட் சாப்பிடாதே" என்று சொல்ல, என் மனம் ஒப்புக்கொள்ளவில்லை.

ஆகவே, அன்று முதல் சுவீட் சாப்பிடுவதை நான் நிறுத்தினேன். இரண்டு வாரங்களில், சுவீட் சாப்பிடுவதை முழுவதுமாக நிறுத்திய பின்பு, உங்கள் மகனுக்கு அந்த அறிவுரையை மனதார வழங்கினேன். என்னால் பின்பற்ற முடிந்ததைத்தான், மற்றவர்களுக்கு ஆலோசனையாகக் கூற முடியும்" கூறினார்.

தேவபிள்ளைகளே, இயேசு கிறிஸ்துவினுடைய போதனைகள் அனைத்தும் மிகச் சிறந்ததாக இருக்கக் காரணம், அந்த போதனைகளை முற்றிலுமாய் அவர் தம் வாழ்க்கையிலே கடைபிடித்தார் என்பதே! அன்புக்கு அவர் முன்மாதிரி. ஆகவே தான், "நீங்கள் அன்பாயிருங்கள்" என்கிறார். பரிசுத்தத்திற்கு அவர் முன்மாதிரி. ஆகவேதான் அவர், "நான் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் பரிசுத்தராயிருங்கள்" என்கிறார். ஜெப ஜீவியத்திற்கு அவர்தான் முன்மாதிரி. ஆகவேதான், "என்னோடு கூட சேர்ந்து ஒரு மணி நேரமாவது ஜெபிக்கக்கூடாதா?" என்று அவர் அழைக்கிறார்.

நினைவிற்கு:- "உன் இளமையைக் குறித்து ஒருவனும் உன்னை அசட்டை பண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு" (1 தீமோ. 4:12).