ஜெயம் தருவார்!

"நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்தில் அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள் செய்வேன்" (வெளி. 3:21).

இயேசுகிறிஸ்து இஸ்ரவேலின் ஜெய கெம்பீரமானவர், இஸ்ரவேலின் சேனைகளுக்கு முன்பாக, சேனைகளின் அதிபதியாய் வெற்றி பவனி சென்றவர். அவர் உங்களையும் வெற்றி சிறக்கப் பண்ணுகிறவர். இயேசுகிறிஸ்து ஒருபோதும் தோல்வியுற்றவரல்ல. ஒருபோதும் யுத்தங்களில் பின்னடைந்தவருமல்ல. உலகம், மாமிசம், பிசாசை அவர் சிலுவையிலே ஜெயித்தார்.

அவர் மகிழ்ச்சியோடு, அந்த ஜெயத்தை தம்முடைய பிள்ளைகளாகிய உங்களுக்குத் தந்தருளுகிறார். ஆகவே, நீங்கள் தோல்வியோடு வாழ வேண்டியதில்லை. "ஜெய கிறிஸ்துவுக்கு மகிமை" என்று வெற்றி முழக்கமிட்டுக் கொண்டே, சத்துருவினுடைய எல்லாக் கோட்டைகளையும் தகர்ப்பீர்கள். எல்லா எரிகோ கோட்டைகளையும் நொறுங்கி விழச் செய்வீர்கள்.

வேதம் சொல்லுகிறது, "உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்கு முன்பாக முறிய அடிக்கும்படி ஒப்புக்கொடுப்பார், ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்" (உபா. 28:7).

ஜெயத்தின் மேல் ஜெயத்தைக் கர்த்தர் உங்களுக்குக் கட்டளையிட்டு, உங்களை மேன்மையாக வைப்பார். இன்றைக்கு உங்களுக்கு விரோதமாய் எழும்பியிருக்கிற சத்துருக்களை, இனி நீங்கள் ஒருபோதும் காண்பதில்லை. ஏனென்றால், கர்த்தர் தாமே, உங்களுடைய சத்துருக்களுக்கு சத்துருவாய் மாறுகிறார். "இன்று கண்ட எகிப்தியனை, இனி நீங்கள் ஒருபோதும் காண்பதில்லை" என்று, இஸ்ரவேலுக்கு வாக்களித்த ஆண்டவர், பார்வோனையும், அவனுடைய சேனைகளையும் சிவந்த சமுத்திரத்திலே தள்ளிப்போட்டார்.

இன்று கர்த்தர் உங்களுக்கும் அந்த வாக்குத்தத்தத்தைக் கொடுக்கிறார். உங்களுக்கு விரோதமாய் செய்வினை செய்தவர்களும், மந்திரவாதியினிடத்தில் சென்றவர்களும், பில்லிசூனியங்களை ஏவினவர்களும், கர்த்தருடைய வல்லமையினால் நொறுங்கிப் போவார்கள். வேதம் சொல்லுகிறது, "உன் கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கருக்கு வரும் பலனைக் காண்பாய்" (சங். 91:8).

நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு கர்த்தரைத் துதிக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு ஜெயத்தை நீங்கள் சுதந்தரித்துக் கொள்ளுவீர்கள். அப். பவுல், "நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங் கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்" (1 கொரி. 15:57) என்றும், "கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்" (2 கொரி. 2:14) என்றும் சொல்லி, கர்த்தரைத் துதித்தார்.

தேவபிள்ளைகளே, இன்றைக்கு இருக்கிற உபத்திரவங்கள், பாடுகள், நிந்தனைகள், அவமானங்கள் எல்லாம் சீக்கிரமே மாறிப்போகும். கர்த்தர் உங்கள் தலையை உயர்த்தி உங்களை மேன்மைப்படுத்துவார்.

நினைவிற்கு: "என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர், என் பாத்திரம் நிரம்பி வழிகிறது" (சங். 23:5).