செய்து முடிப்பார்!

"கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் " (சங். 138:8).

"எனக்காக பூமியிலே ஒருவரும் இல்லாவிட்டாலும், கர்த்தர் என்னோடிருக்கிறார்; அவர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்; நான் கலங்க வேண்டிய அவசியமில்லை" என்று தாவீது, தன் விசுவாசத்தை இந்த வேதப் பகுதியிலே அறிக்கையிடுகிறார். நீங்கள் அனாதைகளல்ல, திக்கற்றவர்களல்ல. கர்த்தர் உங்களோடிருக்கிறார். உங்கள் எதிர்காலத்தைக் குறித்து, அவர் அக்கறையுள்ளவராயிருக்கிறார். "மகனே, மகளே, நான் உனக்காக யாவையும் செய்து முடிக்கிற தேவன்" என்று, அன்போடு சொல்லுகிறார்.

ஒருமுறை ஒரு வாலிப சகோதரி ஒரு ஊழியக்காரரிடத்தில் வந்து, "என்னுடைய திருமணத்திற்காக யாரும் முயற்சியெடுக்கவில்லை. என் பெற்றோர்கள் அதைக் குறித்து அக்கறைக் கொள்ளவில்லை. எனக்கு வயதாகிக் கொண்டே போகிறது. நான் என்ன செய்வது?" என்று கலங்கினாள். அந்த ஊழியக்காரர் அவளைப் பார்த்து: "சரி மகளே, நீ ஒவ்வொருநாளும் காலை எழுந்ததும், நூறுமுறை மிகுந்த விசுவாத்தோடு வானத்தை அண்ணாந்து பார்த்து, கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் என்று திரும்பத் திரும்பச் சொல்" என்றார். அவள் அப்படியே அதை ஏற்றுக் கொண்டு சென்றாள்.

சில மாதங்கள் கழித்து, அந்தப் பெண் தனது திருமண அழைப்பிதழோடு அந்த ஊழியக்காரரிடத்தில் வந்தாள். ஊழியரைப் பார்த்து: " ஐயா, நீங்கள் சொன்னபடியே கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடித்தார். எனக்குத் திருமணம் ஒழுங்காகி விட்டது. ஆனால் இது எப்படி நடக்குமோ என்று பயமாக இருக்கிறது" என்று சொன்னாள். ஊழியக்காரர், "திருமணத்தை ஒழுங்கு செய்ய கிருபை செய்த ஆண்டவர் அதை நடத்தித் தரவும் வல்லமையுள்ளவராயிருக்கிறார்" என்று கூறி, அவளது பயத்தைப் போக்கினார்.

ஏதேனில் மனுஷனை சிருஷ்டிப்பதற்கு முன்பாகவே, அவனுக்காக அவர் யாவையும் செய்து முடித்தார். மனுஷனுக்கு என்னென்ன தேவை என்பதையெல்லாம் அவர் அறிந்து, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், அருமையான பழ வகைகள், சோலைகள், மரங்கள், பாடும் பறவைகள் என அனைத்தையும் உருவாக்கி விட்டார். மனுஷன் அதையெல்லாம் நோக்கிப் பார்த்து: "கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடித்தார்" என்று சொல்லி, தேவனை ஸ்தோத்தரித்திருந்திருப்பான்.

பாருங்கள்! சிலுவையிலே அவர், உங்களுக்காக யாவையும் செய்து முடித்தார். உங்களுக்காக முள்முடி சூட்டப்பட்டு, சாபத்தின் வல்லமையைத் தகர்த்தார். உங்களுக்காக கைகளிலே ஆணிகள் கடாவப்பட்டு, உங்களைத் தம்முடைய உள்ளங்கைகளிலே வரைந்தார். உங்களுக்காக, தம் பாதங்கள் பிளக்கப்பட ஒப்புக்கொடுத்து சாத்தானின் தலையை நசுக்கினார். சரீரமெல்லாம் சவுக்குகளினால் அடிக்கப்பட்டு, உங்களுடைய நோய்களை குணமாக்கும் தழும்புகளை ஏற்றார்.

தேவபிள்ளைகளே, நீங்கள் நித்தியத்திற்கு போகும்போது, அங்கேயும் அவர் உங்களுக்காக யாவையும் செய்து முடித்திருக்கிறதைக் காண்பீர்கள். உங்களுக்காக ஆயத்தம் பண்ணின வாசஸ்தலங்கள், கிரீடங்கள், சிங்காசனங்கள் எல்லாவற்றையும் பார்க்கும்போது, உங்கள் உள்ளம் மகிழ்ந்து களிகூரும். "எனக்காக யாவையும் செய்து முடித்தீரே" என்று சொல்லி, அவரை போற்றிப் புகழுவீர்கள்.

நினைவிற்கு: "உன் வழிகளிளெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்" (நீதி. 3:6).