புசித்து பெலன் கொள்!

"பின்பு அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ காண்கிறதைப் புசி; இந்தச் சுருளை நீ புசித்து, இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் போய் அவர்களோடே பேசு என்றார்" (எசே. 3:1).

நீங்கள் வேத வசனங்களை வாசிக்கும்போது, அது உங்கள் ஆத்துமாவிற்குள் திடமான உணவாக செல்லுகிறது. கர்த்தர், எசேக்கியேல் தீர்க்கதரிசியினிடத்தில்: "நீ இந்த சுருளை புசித்து, இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் போய் அவர்களோடே பேசு" என்றார். ஜனங்களிடத்தில் போய் கர்த்தரைக் குறித்து பேசுவதற்கு முன்பாக, அவருடைய வசனங்களை, நீங்கள் உணவைப் போல உட்கொள்ள வேண்டியது அவசியம். அதுவே உங்களுக்கு சத்துவத்தையும், பெலனையும் தருகிறது.

கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற உணவு மிக விசேஷமானது. அது பரலோக மன்னாவைப் போன்று விசேஷமானது. தம்முடைய பிள்ளைகளுக்கு அவர் பிரயோ ஜனமில்லாத, போஷாக்கு இல்லாத, மட்டமான உணவை ஒருநாளும் கொடுக்கவே மாட்டார். உலக தத்துவ ஞானங்களாகிய காய்ந்த சருகுகளை அவர் தருவதில்லை. தேனிலும், தெளிந்த தேனாகிய மதுரமான உணவையே உங்களுக்குத் தந்தருளுவார். "நான் அந்தச் சிறு புத்தகத்தைத் தூதனுடைய கையிலிருந்து வாங்கி, அதைப் புசித்தேன்; என் வாய்க்கு அது தேனைப்போல மதுரமாயிருந்தது" (வெளி. 10:10).

இஸ்ரவேல் ஜனங்களை, கர்த்தர் வனாந்தரத்தில் வழி நடத்திக் கொண்டு வந்த போது, அவர்களுக்கு மன்னாவைக் கொடுத்தார். அதனுடைய சுவை தேனிட்ட பனியாரம்போல இருந்தது. அது தேவதூதர்களுடைய உணவாக விளங்கியது. அந்த உணவானது, எகிப்தில் உண்டதுபோல கொம்மட்டிக்காகளாக, சாதாரண வெள்ளைப் பூண்டுகளாக, மச்சங்களாக இருக்கவில்லை. அடிமைவேலை செய்வதற்குத்தான் அந்த உணவு சரியாக இருக்கும். ஆனால் கர்த்தரோ, தம்முடைய ஜனங்களுக்கு உன்னதமான பரலோக உணவைக் கொடுத்து, பெலப்படுத்த விரும்பினார்.

ஏனென்றால், அவர்களுக்கு காண்டாமிருகத்திற்கொத்த பெலன் தேவையாய் இருந்தது. முன்னால் நின்ற கானான் தேசத்து ராஜாக்கள் முப்பத்தியொரு பேரோடும் போரிட வேண்டியதிருந்தது. ஏழு ஜாதிகளை துரத்த வேண்டியதிருந்தது. சாதாரண உணவினால், பெலன்கொண்டு போரிட முடியாது. ஆகவேதான், கர்த்தர் தேவ தூதர்களின் உணவாகிய, பரலோக மன்னாவைக் கொடுக்க சித்தமானார்.

இன்றைக்கு நீங்கள், வான மண்டலத்திலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும், துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும் யுத்தம் செய்ய வேண்டியதிருக்கிறது. அதற்கு உங்களுக்கு ஆன்மீக பெலன் தேவை. ஆகவே, பரலோக உணவாகிய வேத வசனத்தை நீங்கள் உட்கொண்டேயாக வேண்டும். பரலோக மன்னாவாகிய வேத வசனத்தை ஆவலோடு புசிக்கிறவர்கள், ஒருநாளும் தங்கள் ஆத்துமாவில் சோர்ந்து போக மாட்டார்கள். அவர்கள் கால்கள் தள்ளாடுவதில்லை.

தேவபிள்ளைகளே, அனுதினமும் வேதத்தை வாசியுங்கள். பசு புல்லை மேய்ந்த பின்பு, அமைதியான இடம் தேடி அமர்ந்திருந்து அசைபோடுவதைப் போல, நீங்களும்கூட வாசித்த வேத வசனங்களை தியானித்து, உங்களுக்கு உரிமையாக்கிக் கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் உலக மனுஷனைப் பார்க்கிலும் ஞானமுள்ளவர்களாக மாத்திரமல்ல, ஆத்துமாவிலே பெலனுள்ளவர்களாய் விளங்குவீர்கள்.

நினைவிற்கு:- "உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது" (எரே. 15:16).