அண்டிக்கொள்!

"அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்" (சங். 2:12).

கிறிஸ்துவின் வருகை, உலகத்தாரை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கும். அவரை அண்டிக் கொள்ளுகிறவர்கள், பாக்கியவான்களாய் அவருக்கு எதிர்கொண்டு போவார்கள். அவரைப் புறக்கணிக்கிறவர்கள், கைவிடப்பட்டு பரிதாபமாய் அந்தி கிறிஸ்துவின் கரத்திலே சிக்குண்டு போவார்கள்.

ஒரு குழந்தை, தெருவிலே போய்க் கொண்டிருக்கிற யாரையாவது பார்த்து பயந்து விட்டால், அது ஓடிவந்து தன் தாயை கட்டி அணைத்து, முகத்தை மடியிலே புதைத்துக் கொள்ளும். இதுதான், அண்டிக்கொள்ளுவது என்பதன் சரியான உதாரணமாகும். அதுபோலவே, சோதனைகளும், போராட்டங்களும், பிரச்சனைகளும் வரும்போது, நீங்கள் கர்த்தருடைய சமூகத்தை நோக்கி ஓடி அவரையே அண்டிக் கொள்ளுங்கள். அவரிலேயே முழு நம்பிக்கையையும் வையுங்கள். அவரிலேயே அடைக்கலம் தேடுங்கள்.

வேதத்திலே, யவீரு என்ற மனிதனுடைய வாழ்க்கையில் பெரும்புயல் வீசியது. அவருடைய குமாரத்தி, வியாதிப்பட்டு மரணத்தருவாக்கு வந்துவிட்டாள். யாரிடம் ஓடுவது என்று அவருக்குத் தெரியவில்லை. முடிவில், இயேசுவையே அண்டிக்கொள்ளுவது என்று அவர் தீர்மானித்தார்.

வேதம் சொல்லுகிறது: "ஜெபஆலயத்தலைவரில் ஒருவனாகிய யவீரு என்பவன் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்திலே விழுந்து: என் குமாரத்தி மரண அவஸ்தைப்படுகிறாள், அவள் ஆரோக்கியமடையும்படிக்கு நீர் வந்து, அவள் மேல் உமது கையை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்று அவரை மிகவும் வேண்டிக்கொண்டான்" (மாற்கு 5:22-23). "அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்" என்று எழுதியிருக்கிறபடி, இயேசு யவீருவின் மகளை உயிரோடு எழுப்பிக் கொடுத்தார்.

பெத்தானியாவிலே மார்த்தாள், மரியாள் என்ற இரண்டு சகோதரிகள் இருந்தார்கள். மார்த்தாள், குடும்ப வேலைகளினாலே பாரம் நிறைந்தவளாய்க் காணப்பட்டாள். ஆனால், மரியாளோ இயேசுவின் பாதத்தினருகே வந்து அமர்ந்து விட்டாள். தன்னைவிட்டு எடுபடாத நல்ல பங்கை தெரிந்துகொண்டாள் (லூக். 10:42).

பாவியாகிய ஒரு ஸ்திரீ, அவரை அண்டிக்கொண்டு அவர் பாதங்களைப் பற்றிக் கொண்டு, பரிமளதைலத்தை ஊற்றினாள். அவளுக்குக் கிடைத்த பாக்கியம், அவள் செய்த திரளான பாவங்கள் அவளுக்கு மன்னிக்கப்பட்டன (லூக். 7:38-48). "தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர்" (நீதி. 30:5).

தீமைகளும், கலக்கங்களும் சூழும்போது, ஓடிப்போய் அரசியல்வாதிகளையோ, அதிகாரிகளையோ அண்டிக் கொள்ளாதேயுங்கள். அது தோல்வியைத்தான் கொண்டு வரும். ஜூலியஸ் சீசரை பல பேர் கத்தியால் குத்தியபோது, தன்னுடைய நண்பன் தனக்கு அடைக்கலம் தருவான் என்று நம்பி, அவனை நோக்கி ஓடினார். அவனை அண்டிப்பிடித்தார். ஆனால் அவனும் மற்றவர்களைப்போலவே, தன்னுடைய கூரியவாளை அவருடைய நெஞ்சிலே பாய்ச்ச, அவர் பரிதாபமாக மரித்தார்.

தேவபிள்ளைகளே, மனுஷனை அண்டிப்பிடிப்பதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாய் இருப்பதே நலம். இதோ அவர், "வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" (மத். 11:28) என்று சொல்லி, அன்போடு உங்களை அழைக்கிறார்.

நினைவிற்கு:- "நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்" (சங் 91:2).