திடன் கொள்!

"மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்நேரம் முதல் அந்த ஸ்திரீ சொஸ்தமானாள்" (மத்.9:22).

வியாதிகள், ஒரு மனுஷனுடைய வாழ்க்கையை திடனற்றுப் போகச் செய்கிறது. குடும்ப அமைதியைக் கெடுக்கிறது. சரீர ஆரோக்கியத்தைப் பாழாக்குகிறது. உள்ளத்தை சோர்ந்து போகப்பண்ணுகிறது. பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீயை குறித்து வேதம் சொல்லுகிறது, அவள் பன்னிரெண்டு ஆண்டுகள் உதிரப்போக்கினால் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாள்.

இதனால் அவளுடைய சரீரம் மெலிந்து, உருகி, திடனற்றுப் போய் எலும்பும் தோலுமாக காட்சியளித்திருக்கக்கூடும். ஒருவேளை, அவளுடைய கணவன் அவளைப் பார்த்து: "தீராத வியாதியுள்ளவளா இருக்கிறாயே? உன்னைத் திருமணம் செய்து, எனக்கு என்ன பிரயோஜனம்? நான் உன்னை விட்டு விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப்போகிறேன்" என்றுகூட சொல்லியிருப்பான். அவளுடைய உள்ளம் எவ்வளவு கலங்கியிருந்திருக்கும்!

அவள் தன்னுடைய வியாதி சொஸ்தமாகும்படி, தன்னுடைய ஆஸ்திகளையெல்லாம் வைத்தியருக்கு செலவழித்தாள் (மாற்கு 5:26). ஆனால், வைத்தியர்களாலும் அவளுக்கு உதவி செய்ய முடியவில்லை. எல்லாரும் கைவிட்டபடியினால் அவளுடைய உள்ளம் கலக்கமடைந்தது. இயேசுவின் அருகிலே செல்லுவதற்கும் அவளுக்கு கலக்கம். உதிரப்போக்குடைய ஸ்திரீகள், மற்றவர்களைத் தொட்டால் அவர்கள் தீட்டுப்பட்டவர்களாக எண்ணப்படுவார்கள். எனவே அவள், இயேசுவை நான் எப்படி தொடுவது என்று எண்ணி கலங்கியிருந்திருப்பாள்.

ஆனாலும், திடனற்றுப் போயிருக்கிற தன்னைக் கர்த்தர் எப்படியும் திடப்படுத்துவார் என்ற நம்பிக்கையில், அவரைத் தொட்டுவிட வேண்டுமென்று வாஞ்சித்தாள். தன் வியாதி, எப்படியாவது சுகமாகிவிடாதா என்று தவித்தாள். கிறிஸ்துவைத் தொட்டு, அவரை தீட்டுப்படுத்த விரும்பாத அவள், அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள். என்ன ஆச்சரியம்! அந்த வஸ்திரத்தின் ஓரம்கூட, அற்புதத்தைச் செய்ய வல்லமையுள்ளதாயிருந்தது. கிறிஸ்துவின் வல்லமை அவள்மேல் மின்சாரம் போல பாய்ந்து அவளை நிரப்ப, இமைப்பொழுதிலே அவள் குணமானாள்.

மனதுருகுகிற இயேசு, அன்போடு அவளைத் திரும்பிப் பார்த்து: ‘மகளே’ என்று அழைத்து, "திடன்கொள்" என்று சொன்னார். திடனற்றுப் போயிருந்த அவளுடைய சரீரத்தை, அந்த வார்த்தைகள் திடப்படுத்தினது. பாருங்கள்! எத்தனை அருமையான, ஆறுதலான வார்த்தைகள். அவர், "தீட்டுள்ள ஸ்திரீயே" என்று கடிந்து கொள்ளவில்லை. ஆம், நமது பரம தகப்பன் உச்சிதமான அன்பினால், நேசிக்கிறவர். தம்மண்டை வருகிற ஒருவரையும், அவர் புறம்பே தள்ளுவதில்லை.

தேவபிள்ளைகளே, கலக்கத்தின் மத்தியிலும், பாடுகளின் மத்தியிலேயும் திடனற்றுப்போய் இருக்கிறீர்களா? உங்களை திடப்படுத்துகிற கர்த்தரண்டை ஓடி வாருங்கள். அன்னாள் கர்த்தரை நாடி, தேவாலயத்திற்கு வந்து தன் இருதயத்தை ஊற்றிவிடவில்லையா? மரியாள் தன்னைவிட்டு எடுபடாத நல்ல பங்காக, கிறிஸ்துவின் பாதங்களையே தெரிந்துகொள்ளவில்லையா? நீங்கள் கர்த்தரை நோக்கிப் பார்க்கும்போது, அவர் "திடன்கொள்" என்று சொல்லி, உங்கள் கலக்கங்களையெல்லாம் மாற்றி, உங்களுக்கு சமாதானத்தைக் கட்டளையிடுவார்.

நினைவிற்கு:- "ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்" (ஏசா. 66:13).