தீமையினின்று காப்பதில் உண்மையுள்ளவர்!

"கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்" (2 தெச. 3:3).

இந்த உலகத்தில் எத்தனையோ விதமான தீமைகள் போராடுகின்றன. பகலிலும், இரவிலும், எந்தத் தீங்கு எப்படி, எப்போது வரும் என்று உங்களுக்குத் தெரியாது. எதிர்பாராதவிதமாக கண்ணிகளையும், உங்கள் கால்களுக்கு வலைகளையும் சந்திக்க வேண்டியதிருக்கிறது. ஆனாலும், "கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்" (2 தீமோ. 4:18).

ஒரு பழங்குடியின தலைவனுக்கு ஒரு மகன் இருந்தான். அவருக்குப் பிறகு அவருடைய ஒரே மகன் தான், சிங்காசனத்தில் அமரக்கூடியவன். ஆனால், அதற்கு அவன் தகுதியுள்ளவன் தானா என்பதை நிருபிக்கும்பொருட்டு, "தனியாகவே போய், பயங்கரமான காட்டு மிருகங்களும், திருடர்களும் நிறைந்த காட்டை கடந்து வர வேண்டும்" என்பது நிபந்தனை. பயத்தோடும், நடுக்கத்தோடும் காட்டிற்குள் சென்ற அவனுக்கு, காட்டு மிருகங்கள் ஒன்றும் தீமை செய்யவில்லை. அவன் காட்டை எந்த சேதமுமின்றி கடந்தான். இளவரசனாய் முடிசூட்டப்பட்டான்.

முடிசூட்டு விழா முடிந்தவுடன், அந்த பயணத்தைப் பற்றிய விபரங்களை தகப்பன் மகனுக்குத் தெரிவித்தார். மகனை எந்த சேதமும் அணுகாதபடிக்கு, பாதுகாக்க தகப்பன் பின்தொடர்ந்து வந்ததை அறிந்ததும், மகன் மிகுந்த ஆச்சரியமடைந்தான். உலகப்பிரகாரமான தகப்பனின் உள்ளத்தில் இவ்வளவு அன்பை வைத்த ஆண்டவர், உங்களை தீமையினின்று பாதுகாக்கும்படி எவ்வளவு அன்புடையவராயிருப்பார்!

பல நேரங்களில், தீங்கு உங்களைத் தொடர்ந்து வருவதை நீங்கள் அறியாமலிருக்கலாம். அப்படித்தான் அன்றைக்கு, லாபான் தீங்கு செய்யப்போகிறான் என்று யாக்கோபுக்கு தெரியாமலிருந்தது. ஆனால், கர்த்தர் அதைக் கவனிப்பதற்கு உண்மையுள்ளவராயிருந்தார். அன்று இரவு, தேவன் லாபானுக்குச் சொப்பனத்தில் தோன்றி, "நீ யாக்கோபோடே நன்மையே அன்றித் தீமை ஒன்றும் போசாதபடிக்கு எச்சரிக்கையாயிரு" (ஆதி. 31:24,29) என்று எச்சரித்தார். தீமை செய்ய வந்த கரங்களை, உடன்படிக்கை செய்யும் கரங்களாக கர்த்தர் மாற்றினார். ஆம், அவர் தீமை யினின்று உங்களைக் காக்க உண்மையுள்ளவர்.

தானியேலுக்கு தீங்கு செய்ய, ராஜ்ய பிரதிநிதிகள் எல்லாரும் சதி ஆலோசனை செய்தார்கள். ராஜாவும், அவரைத் தூக்கி சிங்கக்கெபியில் போடும்படி கட்டளையிட்டான். ஆனாலும் கர்த்தரோ, தானியேலை தீமையினின்று பாதுகாத்துக் கொள்ள உண்மையுள்ளவராக இருந்தார். கிழக்கு வெளுக்குமுன்னே, சிங்கக்கெபிக்கு தீவிரமாய்ப் போன ராஜா, "தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னை சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா? என்று கேட்டான்" (தானி. 6:20).

அதற்கு தானியேல், "ராஜாவே, நீர் என்றும் வாழ்க. சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்குத் தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை என்றான்" (தானி. 6:21-22). தேவபிள்ளைகளே, தானியேலின் தேவன்தாமே, உங்களை எல்லா தீங்குக்கும் விலக்கிப் பாதுகாக்க உண்மையுள்ளவராயிருக்கிறார்.

நினைவிற்கு:- "கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்" (சங். 121:7).