பாதுகாக்க உண்மையுள்ளவர்!

"சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக. உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார்" (1 தெச. 5:23,24).

கர்த்தர் உண்மையுள்ளவர். உங்களை கடைசி வரையிலும் பாதுகாத்து நிலை நிறுத்த உண்மையுள்ளவர். ஒரு சகோதரி, சிறுவயதிலிருந்தே கம்யூனிச ஆட்சியின் கீழிருந்த, போலந்து தேசத்தில் வளர்ந்தார்கள். அவர்கள் சொன்னார்கள்: "கம்யூனிச அரசாங்கம், தமது குடிமக்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் கட்டுப்படுத்தி வந்தது. அவர்கள் என்ன சாப்பிட வேண்டும், எத்தனை பிள்ளைகளை பெற்றுக்கொள்ள வேண்டும், எப்படி பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்பதெற்கெல்லாம் கூட நிபந்தனைகள் விதித்தனர்."

"உதாரணமாக ஒரு குழந்தை, மருத்துவராக வேண்டுமென்று அரசாங்கம் விரும்பினால் அந்த குழந்தையின் பள்ளிப்படிப்பிற்கும், உணவு மற்றும் உடைகளுக்கும், கூடுதலான போதனை வகுப்பிற்கும், தொழிற்பயிற்சிக்கும் அரசாங்கமே கட்டணம் செலுத்தும். மேற்படிப்பு படிக்கும்படி, இதர கம்யூனிச நாடுகளுக்கு அவர்களை அனுப்பி, மருத்துவக் கல்லூரியில் சேர்த்து, வாழ்நாள் முழுவதற்குமான வேலைவாய்ப்பையும் தந்து, அதற்குப் பிறகு அந்த உதவிகளை அரசாங்கம் நிறுத்தி விடும்" என்றார்கள்.

ஆனால், பரலோக அரசாங்கம் பூமிக்குரிய அரசாங்கத்தை விட மிக உயர்ந்தது. நீங்கள், கர்த்தருடைய இரட்சிப்பின் கிருபையை அனுபவிக்கும்படியாக அழைக்கப்பட்டிருக்கிறீர்கள் (எபே. 2:8,9). அவர், இருளின் அதிகாரத்திலிருந்து உங்களை விடுதலையாக்கி, தம்முடைய அன்பின் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் ராஜ்யத்திற்கு உங்களை உட்படுத்தினார் (கொலோ. 1:13).

அதன்பின்பு, அவர் உங்களை புத்திர சுவிகாரமெடுத்தார் (எபே. 1:6); பரிசுத்த ஆவியினால் முத்திரையிட்டார் (எபே. 1:13); உடன் சுதந்தரராக்கினார் (ரோம. 8:17); ஆவிக்குரிய வரங்களைத் தந்தார் (1 கொரி. 12). முடிவாக, பரலோகத்தில் உங்களுக்காக ஒரு இடத்தை ஆயத்தம் பண்ணிக்கொண்டிருக்கிறார் (யோவா. 14:3).

கர்த்தர் உங்களுடைய வாழ்க்கையிலே வைத்திருக்கிற திட்டங்கள், நோக்கங்கள் யாவும் நன்மைக்கேதுவானவைகளே. நீங்கள் நித்தியத்திலே அவரோடுகூட வாசம் பண்ணுவதற்கேதுவாக, நீங்கள் பூமியிலே வெற்றியுள்ள ஆவிக்குரிய ஜீவியம் செய்ய அவர் உங்களுக்கு உதவி செய்வார். உங்களுக்கு விரோதமாய் எழும்புகிற புயல்களைக் குறித்தோ, தோல்விகளைக்குறித்தோ ஒருபோதும் கவலைப்படாதிருங்கள். "பேதுரு தன்னை மறுதலிப்பான்" என்று இயேசுவுக்கு தெரிந்திருந்த போதும், அவன் பாதுகாக்கப்படும்படியாகவே அவர் ஜெபித்தார்.

இன்றைக்கும், கர்த்தருடைய கண்கள் உங்கள்மீது நோக்கமாயிருக்கின்றன. நீங்கள் வசனங்களைப் பற்றிக்கொண்டு ஜெபிக்கும்போது, கர்த்தர் எல்லா தீமைகளினின்றும், நரகத்தினின்றும், அழிவினின்றும் உங்களைப் பாதுகாத்து, உங்களுடைய ஆவி, ஆத்துமா, சரீரத்தை குற்றமற்றதாய் காக்க அவர் உண்மையுள்ளவர். முடிவு பரியந்தமும் நீங்கள் வழுவாதபடி, அவர் உங்களைப் பாதுகாப்பார் (யூதா 24,25).

நினைவிற்கு:- "கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்; அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார்" (சங். 97:10).