கர்த்தர் வல்லவர்!

"நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்" (தானி. 3:17).

கர்த்தர் உங்களுக்கு நல்லவராகவும், வல்லவராகவும் இருக்கிறார். கர்த்தர் உங்கள் வாழ்க்கையிலே பல அனுபவங்களை, மீண்டும் மீண்டும் உங்களுக்குத் தந்து, தாம் வல்லவர் என்பதை உறுதிப்படுத்துகிறார். வேதம் முழுவதிலும் உள்ள பரிசுத்தவான்களுடைய வாழ்க்கையில், "கர்த்தர் வல்லவர்" என்பதை காணலாம்.

சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள், கர்த்தர் வல்லவர் என்பதை அறிந்திருந்தார்கள். அவர்கள் தங்கியிருந்த பெரிய பாபிலோன் சாம்ராஜ்யத்தைக் காட்டிலும், பரலோக சாம்ராஜ்யம் மிக வல்லமையுள்ளது என்பதையும், நேபுகாத்நேச்சாரைப் பார்க்கிலும் கர்த்தர் வல்லமையுள்ளவர் என்பதையும், அவன் நிறுத்தின பொற்சிலையைப் பார்க்கிலும் கர்த்தர் பெரியவர் என்பதையும் அறிந்திருந்தார்கள்.

எல்லா மனுஷரும் நேபுகாத்நேச்சாருக்கு பயந்தார்கள். ஏனென்றால், அவர் பல ராஜ்யங்களை ஜெயித்த, உக்கிரமும், கோபமுமான ராஜா. ஆனால் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற வாலிபர்கள் அவருக்குப் பயப்படாமல், "நேபுகாத்நேச்சாரே, இந்தக் காரியத்தைக் குறித்து உமக்கு உத்தரவு சொல்ல எங்களுக்கு அவசியமில்லை. நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்" என்றார்கள் (தானி. 3:16,17).

இதனால் நேபுகாத்நேச்சாரின் கோபம் அதிகமானது. சூளையும் ஏழு மடங்கு அதிகமாய் சூடாக்கப்பட்டது. ஆனால் கர்த்தரோ, அக்கினியின் உக்கிரத்தை அவித்து, தம்முடைய பிள்ளைகளோடு அக்கினிச்சூளையிலே உலாவி, அவர்களைத் தப்புவிக்க வல்லவராயிருந்தார்.

தேவனால் செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை. எப்படிப்பட்ட பிரச்சனைகளையும்விட, கர்த்தர் பெரியவராயிருந்து அவற்றிலிருந்து உங்களை விடுவிக்க வல்லமையுள்ளவர். எந்த டாக்டராலும் குணமாக்க முடியாத வியாதியையும், குணமாக்க வல்லவர். ஆயுசை நீட்டித்து தர அவர் வல்லமையுள்ளவர்.

யோவான்ஸ்நானன் இயேசுகிறிஸ்துவைக் குறித்து, "எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல" என்றார் (மத். 3:11). உங்கள் கரங்களைப் பிடித்திருக்கிறவர், உங்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயிருக்கிறார் (எபி. 7:25). சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார் (எபி. 2:18). நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கும், நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் உங்களுக்குள்ளே கிரியை செய்ய வல்லமையுள்ளவர் (எபே. 3:20).

தேவபிள்ளைகளே, கர்த்தர் வல்லவர் என்பதை உங்களுடைய வாழ்க்கையிலே ருசித்துப் பாருங்கள். தாவீது தன் வாழ்க்கையிலே, கர்த்தர் வல்லவர் என்பதை நிரூபித்தார். தேவனுடைய வல்லமையைக் கொண்டு, ஆட்டுக்குட்டியை கரடியின் வாய்க்குத் தப்புவித்தார். சிங்கத்தின் வாயைக் கிழித்து ஆட்டை பாதுகாத்தார். கோலியாத்தை எளிதாய் ஜெயித்தார். ஆம், கர்த்தர் வல்லவர். நீங்கள் ஆராதிக்கிற தேவன் உங்கள் வாழ்க்கையிலும் தமது வல்லமையை வெளிப்படுத்துவார்.

நினைவிற்கு:- "நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்" (2 தீமோ. 1:12).