நிலைநிறுத்த வல்லவர்!

"மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்திரவாதி; அவன் நிலைநிறுத்தப்படுவான்; தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே" (ரோமர் 14:4).

உங்களை உருவாக்கின கர்த்தர், உங்களுக்காக ஜீவனைக் கொடுத்த கர்த்தர், உங்களை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறார். ஓரல் ராபர்ட்ஸ் அடிக்கடி "நம்முடைய தேவன் நல்ல தேவன். ஆனால் பிசாசோ, கெட்ட பிசாசு" என்று சொல்லுவதுண்டு. தேவனை, "நல்ல தேவன்" என்று நிறுத்திவிடாமல், அதோடு கூட சாத்தானை சுட்டிக்காட்டி, அவனை "கெட்டவன்" என்றும் எச்சரிக்கிறார்.

சாத்தான், யோபுவைக் குறித்து தேவ சமுகத்தில் குற்றஞ்சாட்டினான். "தேவனே, யோபுவைச் சுற்றிலும் நீர் வேலியடைத்திருக்கிறீர். அவனுக்கு உண்டானவைகளையும், எலும்பையும் சரீரத்தையும் உம்முடைய கரத்தை நீட்டி தொடுவீரானால், அப்பொழுது அவன் உம்மை சபிக்கிறானா, இல்லையா பாரும்" என்றெல்லாம் சொன்னான். அதைப்போலவே, பிரதான ஆசாரியனாகிய யோசுவாவுக்கு விரோதமாகவும், தேவ சமூகத்திலே அவன் குற்றம் சாட்டினான்.

சாத்தானுடைய நோக்கமே உங்களை அதைரியப்படுத்தி, வழி விலகிப் போகச் செய்வதுதான். அவன் உங்களுடைய காதுகளிலே வந்து, "உன்னால் பரிசுத்த ஜீவியம் செய்யமுடியாது; ஏன் மாய்மாலமாக வாழ வேண்டும்? பாவ ஜீவியத்திற்கு வந்துவிடு" என்பான். "நீ ஒழுங்காக ஆலயத்திற்கு போய் என்ன கண்டாய்? நீ ஆலயத்திற்கு போன நாளிலிருந்து உனக்குத் தோல்வியும், குடும்பத்தில் கஷ்டமும் தான் வந்துக் கொண்டிருக்கிறது" என்று சொல்லி, அதைரியப்படுத்துவான். மனம் சோர்ந்துபோகாதிருங்கள். கல்வாரி நாயகனை நோக்கிப்பாருங்கள். உங்களுக்காக ஜீவனைக் கொடுத்தவர், உங்களை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறார்.

மட்டுமல்ல, உங்களை சூழ உள்ள மக்கள், அண்டைவீட்டார், உடன் வேலை செய்பவர்கள் மூலமாகவும் சோதனைகள் வரும். அவர்கள் உங்கள்மேல் கரிசனை உள்ளவர்களாக, அன்புகூருகிறவர்களாக, உங்களுடைய வாழ்க்கையில் அக்கறை கொண்டவர்களாக தோன்றினாலும், அவர்கள் உங்கள்மேல் குறை கண்டுபிடிக்கிறவர் களாகவும், உங்களைப் பற்றி தூற்றித்திரிகிறவர்களாகவும் இருப்பார்கள். இதனால் உங்கள் உள்ளம் அதைரியப்படும். ஆகவே தான் அப். பவுல், "உங்கள் நன்மை தூஷிக்கப்பட இடங்கொடாதிருங்கள்" (ரோமர் 14:16) என்று எழுதுகிறார்.

அடுத்தது, உங்களுடைய சுயமானது சோதனையைக் கொண்டு வந்து, உங்களை அதைரியப்படுத்துகிறது. பல வேளைகளில், உங்களை நீங்களே குற்றஞ்சாட்டி அதைரியமடைந்து விடுகிறீர்கள். "இந்த சோதனையையும், சூழ்நிலையையும், பரீட்சையையும் மேற்கொள்ளுவதற்கு எனக்கு பெலனில்லை" என்று கலங்குகிறீர்கள். உங்களைக் குறித்ததான நம்பிக்கை, உங்களுக்கு அற்றுப்போகிறது.

சிலர் எதற்கெடுத்தாலும் நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் என்பார்கள். இது ஒரு பாவச் செயல் என்பதையோ, இது சரியான தீர்வு அல்ல என்பதையோ இவர்கள் உணர்வதில்லை. தேவபிள்ளைகளே, எந்த சோதனையானாலும், எந்த சூழ்நிலையானாலும் விசுவாசத்தை அறிக்கை செய்து, கர்த்தரில் நிலைத்திருப்பதன் மூலமாகத்தான் அவற்றை நீங்கள் எதிர்கொண்டு வெல்ல முடியும்!

நினைவிற்கு:-"நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்" (ஏசா. 41:10).