யுத்தம் பண்ணுபவர்!

"கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்" (யாத். 14:14).

மோசே இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து, "நீங்கள் பயப்படவும், கலங்கவும் வேண்டாம். கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்வார். நீங்கள் எதுவும் செய்யாமலிருந்தால் போதும்" என்று சொன்னார்.

எகிப்திலிருந்து வெளியே வந்த இஸ்ரவேலரின் கைகளிலே, எந்த ஆயுதமும் இல்லை. பார்வோனுடைய பெரிய சேனைகளையும், இரதங்களையும், குதிரைகளையும், யுத்த வீரர்களையும் எதிர்த்து நிற்க, அவர்களால் முடியவில்லை. கர்த்தர் அவர்களுக்காக யுத்தம் செய்திருக்காவிட்டால், அவர்களுடைய நிலைமை பரிதாப மாயிருந்திருக்கும். ஆனால், மோசே இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து, "கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்" (யாத். 14:14) என்றார் விசுவாசத்தோடு!

உங்களுக்கு விரோதமாய் சத்துருக்கள் எழும்பும்போது, பயப்படாதிருங்கள். அவர்களுடைய மூர்க்கத்தையும், கோபத்தையும், எரிச்சலையும் எண்ணிக் கலங்காதிருங்கள். எப்போதும் உங்களை நேசித்து, கண்மணிபோல பாதுகாக்கிற கர்த்தரையே நோக்கிப் பாருங்கள். உங்களுடைய பலவீனத்தை அறிந்துதான், கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ண எழும்பியிருக்கிறார். உங்கள் சத்துருக்களின் வலிமையைப் பார்த்துதான், உங்களுக்கு அவர் ஜெயம் தர சித்தங்கொண்டிருக்கிறார்.

ஒருமுறை எலியாவை கைதுசெய்து வருவதற்காக, சமாரியா ராஜா ஐம்பது வீரர்களை அனுப்பினான். ஐம்பது போர்வீரர்களுக்கு முன்பு, எலியா என்ன செய்ய முடியும்? கர்த்தர் யுத்தம் செய்தார். வானத்திலிருந்து அக்கினியை இறக்கி, ஐம்பது பேரையும் பட்சித்து போட்டார் (2 இராஜா. 1:10).

இன்னொருமுறை, இஸ்ரவேலருக்கு விரோதமாக சமாரியர் வந்தபோது, கர்த்தர் அவர்களை விரட்ட இரைச்சலைக் கட்டளையிட்டார். எங்கிருந்தோ இரதங்களின் இரைச்சலும், குதிரைகளின் இரைச்சலும், மகா இராணுவத்தின் இரைச்சலும் கேட்க ஆரம்பித்தது. அதைக் கேட்டதும் அவர்கள் பயந்து, தங்கள் குதிரைகளையும், கழுதைகளையும், யுத்த ஆயுதங்களையும் விட்டுவிட்டு இருட்டோடே எழுந்திருந்து உயிர்தப்ப ஓடிப்போனார்கள் (2 இராஜா. 7:7).

அசீரியா ராஜா சனகெரிப்பை எதிர்த்து, கர்த்தர் யுத்தம் செய்ய எழும்பியபோது ஒரே ஒரு தேவ தூதனை அனுப்பினார். அவன் அசீரியரின் பாளையத்திற்குள் இறங்கி, லட்சத்து எண்பதினாயிரம் பேரை சங்கரித்தான் (2 இராஜா. 19:35). சேனைகளின் அதிபதியான கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்வார். கர்த்தர் மற்றொரு ஆச்சரியமான வழியிலே, தன் ஜனங்களுக்காக யுத்தம் செய்ததை 2 நாளா. 20-ம் அதிகாரத்தில் காணலாம். அங்கே, எதிரிகளே ஒருவருக்கொருவர் அழிக்கத்தக்கவிதமாய்த் தாக்கி, ஒருவரையொருவர் வெட்டி மடிந்தார்கள். எத்தனை ஆச்சரியம்!

இப்படிப் பகைவர்களை கர்த்தர் பல்வேறு வழிகளில் முறியடித்து, துரத்தி, தம் ஜனங்களுக்காக யுத்தம் செய்தார். தேவபிள்ளைகளே, நீங்கள் செய்ய வேண்டியது என்ன? கர்த்தரையே சார்ந்து, அவர் மேல் பாரத்தை வைத்துவிட்டு அமைதியாய் இருந்தால் போதும். கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்வார் என்பதை நீங்கள் விசுவாசிக்க வேண்டும். கர்த்தரைத் துதித்து, அவரைப் போற்றிப் புகழ வேண்டும். எப்போதும் கர்த்தரை ஆராதித்து, அவரை மகிமைப்படுத்த வேண்டும்.

நினைவிற்கு:- "நமக்குத் துணை நின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே" (2 நாளா. 32:8).