வார்த்தையில் உண்மையுள்ளவர்!

"பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?" (எண். 23:19).

கர்த்தர் வார்த்தையில் உண்மையுள்ளவர். அதை நிறைவேற்ற உண்மையுள்ளவர். சர்வவல்லருடைய வார்த்தை வெளிவந்தபோது, அது சிருஷ்டிப்பின் ஒரு கிரியையாக மாறினது. ஆதியிலே கர்த்தர், "வெளிச்சம் உண்டாகக்கடவது" என்றார்; வெளிச்சம் உண்டாயிற்று. "பகலும் இரவும் உண்டாகக்கடவது" என்றார்; அது அப்படியே ஆயிற்று.

அப். யோவான், தேவனுடைய வார்த்தைகள், பெருவெள்ளத்து இரைச்சலைப் போல ஒலித்ததாக எழுதுகிறார் (வெளி. 1:15, 19:6). கர்த்தருடைய வார்த்தைகள் வல்லமையுள்ளவைகள். அவர் தம்முடைய வார்த்தையினால் சகலவற்றையும் உண்டாக்கினார். சங்கீதக்காரன், "உமது சகல பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்" (சங். 138:2) என்று சொல்லுகிறார்.

கர்த்தர் தம்முடைய நாமத்தைவிட, தம்முடைய வார்த்தைகளை அதிகமாய் கனப்படுத்துகிறார். "வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை" (மாற். 13:31) என்ற அவருடைய வார்த்தைகள் மாறாதவைகள். வேத வசனங்கள் கிறிஸ்தவ வாழ்க்கைக்கு அஸ்திபாரமானவைகள்.

"தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே" (2 கொரி. 1:20). தேவபிள்ளைகளே, நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால், எல்லா வாக்குத்தத்தங்களையும் சுதந்தரித்துக்கொள்ளுவீர்கள். கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தங்களெல்லாம் நிறைவேற வில்லையே என்று, ஒருவேளை நீங்கள் வருத்தப்படக்கூடும். ஆனால் கர்த்தர் வாக்குபண்ணினாரென்றால், நிச்சயமாகவே அதை நிறைவேற்றுவார்.

ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். கர்த்தருடைய வாக்குத்தத்தங்களில் ஒரு சில நிபந்தனையற்றவை, வேறு சில நிபந்தனையுள்ளவை. கர்த்தர் எப்பொழுதும் உங்களோடுகூட இருப்பதாக வாக்குப்பண்ணியிருப்பது, நிபந்தனையற்ற வாக்குத் தத்தம். ஆனால், "என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள்" (மல். 3:10) என்ற நிபந்தனையுள்ள இந்த வாக்குத்தத்திற்கு கீழ்ப்படியும்போது, கர்த்தர் உங்கள் கைகளின் பிரயாசங்களை ஆசீர்வதிப்பார்.

கர்த்தர் உங்களுக்கு வாக்குப்பண்ணினதில், ஒன்றுகூட தவறிப்போவதில்லை. கர்த்தருடைய வார்த்தைகள் ஜீவனும், வல்லமையுள்ளதுமான வார்த்தைகள் (எபி. 4:12). "ஆகையால் நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்" (மத். 7:24) என்று கர்த்தர் சொல்லுகிறார். தேவபிள்ளைகளே, கர்த்தருடைய வார்த்தைகளின்படி உங்கள் வாழ்க்கையை கட்டியெழுப்புங்கள். அவர் வார்த்தையில் உண்மையுள்ள தேவன்.

நினைவிற்கு:- "அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்" (ஏசா. 55:11).