களிகூரப் பண்ணுபவர்!

"காலையையும் மாலையையும் களிகூரப் பண்ணுகிறீர். தேவரீர் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப்பாச்சுகிறீர்" (சங்.65:8,9).

தேவ ஜனங்களின் சுதந்தரங்களில், முக்கியமான ஒன்று "களிகூருதலாகும்." கர்த்தருக்குள் களிகூருவதே மேன்மையான காரியம். சகல நன்மைகளையும் சம்பூரணமாய் கொடுக்கிற தேவன்தாமே, எப்போதும் உங்களை களிகூரப் பண்ணுகிறார்.

கர்த்தர் உங்களை களிகூரப்பண்ணுவதற்காகவே, ஒரு புதிய அபிஷேகத்தை வாக்குப்பண்ணியிருக்கிறார். அதுதான், "ஆனந்ததைல அபிஷேகம்." இது பரிசுத்த ஆவியினால் கிடைக்கிற "களிகூருதலின் அபிஷேகம்." ஏசாயா சொல்லுகிறார், "துயரத்திற்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும் அவர் என்னை அனுப்பினார்" (ஏசாயா 61:3).

நீங்கள் துயரத்தோடும், கலக்கத்தோடும், கவலையோடும் இருக்கிறீர்களா? ஆனந்த தைலத்தினால் நிரப்பப்படுங்கள். கர்த்தருக்குள் மனமகிழ்ந்து, அவரைத் துதியுங்கள். இயேசுவின் தாயாகிய மரியாளை, கர்த்தர் தமது ஆவியினால் நிரப்பினபோது, மரியாளின் உள்ளம் ஆனந்த களிப்படைந்தது. ஆகவே மரியாள், "என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது. என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களி கூருகிறது" (லூக். 1:46,47) என்று கர்த்தரைத் துதித்து ஆனந்தப் பரவசமடைந்தாள்.

உங்கள் உள்ளான மனுஷன் எப்போதும் ஆவியிலே களிகூர்ந்து கொண்டிருக்க வேண்டும். உங்கள் ஆத்துமா கர்த்தருடைய ஆத்துமாவோடு இசைந்திருக்கும்போது, பரலோக சந்தோஷத்தை அனுபவிப்பீர்கள். தெய்வீக மகிழ்ச்சியினால் உங்கள் உள்ளம் பொங்கும். உலக பிரச்சனைகளுக்கும், போராட்டங்களுக்கும் அப்பாற்பட்ட பரலோக தேவனுடைய இனிய பிரசன்னத்தை உணர்ந்து, அவருடைய அன்பினால் நிரப்பப்படுவீர்கள்.

அந்நிய பாஷையை கத்தோலிக்க மொழிபெயர்ப்புகள், "பரவசப் பேச்சு" என்று குறிப்பிடுகின்றன. சிலர் அந்நிய பாஷையிலே பேசி, ஆவியிலே சிரித்து மகிழுவார்கள்; நடனமாடித் துதிப்பார்கள். உங்களை உள்ளன்போடு நேசிக்கிற ஆண்டவரோடு நீங்கள் ஒன்றாய் இணைந்து விடும்போது, அந்த களிகூருதலுக்கு ஈடு இணையானதில்லை. "அந்நிய பாஷையிலே பேசுகிறவன், அவன் மனுஷரிடத்தில் பேசாமல் தேவனிடத்தில் பேசுகிறான்" (1 கொரி. 14:2). ஆவியில் களிகூருதலின் இரகசியம் இதுவே!

கர்த்தர், உங்களுக்கு சிறு வயதிலிருந்து செய்த எண்ணற்ற நன்மைகளுக்காக அவரைத் துதியுங்கள். அப்போது, "கர்த்தர் எனக்கு செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன். இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்" (சங். 116:12,13) என்று உங்களுடைய ஆத்துமாவிலும் ஒரு களிகூருதல் உண்டாகும்.

ஒருநாள், தேவன் தனக்குச் செய்த நன்மைகளை அன்னாள் நினைவுகூர்ந்தாள். குழந்தை இல்லாத மலடி என்ற நிலைமையை மாற்றி, ஆசீர்வாதமான சாமுவேலை மகனாகக் கொடுத்த நன்றியை மறந்துவிடாமல், கர்த்தரைத் துதிக்க ஆரம்பித்தாள். "என் இருதயம் கர்த்தருக்குள் களிகூருகிறது; என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந் திருக்கிறது" (1 சாமு. 2:1) என்று சொல்லி, கர்த்தரைத் துதித்தாள். தேவபிள்ளைகளே, நீங்களும் கர்த்தர் செய்த நன்மைகளை எண்ணிக் களிகூர்ந்து கர்த்தரைத் துதியுங்கள்.

நினைவிற்கு:- "கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்" (சங். 14:7).