நன்மை செய்பவர்!

"தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித் திரிந்தார்" (அப். 10:38).

இயேசு கிறிஸ்து நன்மை செய்கிறவராய் சுற்றித் திரிந்தார். அவர் யாருக்கும் தீமை செய்ததில்லை. அவர் நன்றியறியாதவர்களுக்கும், துரோகிகளுக்கும் நன்மை செய்கிறவர் (லூக்கா 6:35). அவர் நல்லோர்மேலும், தீயோர் மேலும் மழையை வருஷிக்கப் பண்ணுகிறவர். பல வேளைகளில் உங்கள் வாழ்க்கையில் நடக்கிற பிரச்சனைகளும், போராட்டங்களும் கர்த்தர் உங்களுக்கு நன்மைதான் செய்கிறாரா என்று எண்ணத் தோன்றும். ஆனால் வேதம் சொல்லுகிறது, "தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது" (ரோமர் 8:28).

ஒரு நிலக்கரி சுரங்கத்தில், பக்தியுள்ள ஒரு ஏழை விசுவாசி வேலை செய்தார். அவர் இயேசுவைப் பற்றி பேசினதினால், மற்ற தொழிலாளர்கள் அவரைக் கேலியும், பரியாசமும் செய்தார்கள். அவரை அளவுக்கு அதிகமாக வேலைவாங்கி கொடுமைப்படுத்தினார்கள். இந்த ஏழை விசுவாசி மனம் சோர்ந்துபோய், "கர்த்தர் தான், என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்தாரா? நான் நிந்தையும், பரியாசத்தையும் அனுபவிக்கிறேனே" என்று சொல்லி வேதனைப்பட்டார்.

ஒருநாள் அவர் அங்குள்ள மற்ற தொழிலாளர்களோடு அமர்ந்து சாப்பிட அமர்ந்தபோது, திடீரென்று எங்கிருந்தோ ஒரு நாய் ஓடி வந்து, அவருடைய சாப்பாட்டுப் பையைத் தூக்கிக் கொண்டு வெளியே ஓடினது. அதைப் பார்த்ததும் மற்ற தொழிலாளர்களெல்லாரும் கேலி செய்து சிரித்தனர். "உன் சாப்பாட்டை காப்பாற்ற இயேசு வருவாரா?" என்று சொல்லி பரியாசம் செய்தார்கள்.

அந்த விசுவாசி பையை பரிப்பதற்காக, நாயை துரத்திக்கொண்டு ஒடினார். சுரங்கத்திலிருந்து அவர் வெளியே வந்ததும், திடீரென்று பெரிய சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தார். அந்த சுரங்கம் இடிந்து விழுந்து கிடந்தது. அவரைக் கேலி செய்த மற்ற தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி, குற்றுயிராய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். அப்பொழுதுதான், கர்த்தர் தம்மிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாகவே செய்கிறார் என்பதை, அந்த விசுவாசி கண்டு தேவனை ஸ்தோத்தரித்தார்.

யோசேப்பின் வாழ்க்கையைப் பாருங்கள்! சகோதரர்களால் எத்தனை பாடுகளையும், துக்கங்களையும் அனுபவிக்க வேண்டியதாயிருந்தது. ஆனாலும் அவர் எல்லாவற்றையும் பொறுமையோடு சகித்ததினாலே, முழு எகிப்திற்கும் பெரிய அதிபதியாய் கர்த்தர் அவரை உயர்த்தினார். யோசேப்பு தன் சகோதரர்களிடத்தில், "நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்து வருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்" (ஆதி. 50:20) என்றார்.

தேவபிள்ளைகளே, இன்றைக்கு இருக்கிற பிரச்சனைகள் யாவும் முற்றிலும் நீங்கிப்போகும். உங்களுக்குத் தீமை செய்ய நினைத்தவர்கள், உங்கள் பட்சத்தில் வருவார்கள். கர்த்தர் எல்லாவற்றையும் நன்மையாக, ஆசீர்வாதமாக முடியப்பண்ணுவார். திடன்கொள்ளுங்கள்.

நினைவிற்கு:- "நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே" (நீதி.3:27).