வாக்குத்தத்தங்களில் உண்மையுள்ளவர்!

"உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை உங்கள் முழு இருதயத்தாலும் உங்கள் முழு ஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள்" (யோசு. 23:14).

வேதம் முழுவதும் கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள் நிரம்பியிருக்கின்றன. கர்த்தருடைய வாக்குத்தத்தங்களும், தீர்க்கதரிசனங்களும் அன்றும் நிறைவேறி, இன்றைக்கும் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. யோசுவா, இஸ்ரவேல் மக்களை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுவதற்கு முன்பாக, மோசேக்கு எல்லா விதத்திலும் உதவியாக இருந்தார். கர்த்தர் மோசேயிடம் பேசின வார்த்தைகளுக்கும், மோசே மூலமாக நடப்பித்த அற்புதங்களுக்கும் யோசுவா சாட்சியாக விளங்கினார்.

கர்த்தர் மோசேயிடம், நீ "இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நானே கர்த்தர்; உங்கள் மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி நான் உங்களை விடுவித்து, உங்களை அவர்கள் அடிமைத்தனத்திற்கு நீங்கலாக்கி, ஓங்கிய கையினாலும், மகா தண்டனைகளினாலும் உங்களை மீட்டு, உங்களை எனக்கு ஜனங்களாகச் சேர்த்துக் கொண்டு, உங்களுக்கு தேவனாயிருப்பேன்; உங்கள்மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி உங்களை விடுவிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தர் நான் என்று அறிவீர்கள். ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்ட தேசத்தில் உங்களைக் கொண்டுபோய், அதை உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுப்பேன்; நான் கர்த்தர் என்று அவர்களுக்குச் சொல் என்றார்" (யாத். 6:6-8).

கர்த்தர் தம்முடைய வாக்குத்தத்தத்தில் எவ்வளவு உண்மையுள்ளவர் என்பதையும், ஒவ்வொன்றையும் எப்படி நிறைவேற்றினார் என்பதையும், யோசுவா இஸ்ரவேலருடைய கவனத்திற்கு கொண்டு வந்தார். தேவன் அவர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கி, நாற்பது ஆண்டுகள் வனாந்தரத்திலே அவர்களோடு நடந்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானான் தேசத்தையும் அவர்களுக்கு சுதந்தரமாகக் கொடுத்தார்.

உங்களைக் குறித்தும், உங்களுடைய குடும்பத்தைக் குறித்தும் கர்த்தர் கொடுத்திருக்கும் வாக்குத்தத்தங்களில் சில நிறைவேறியிருக்கலாம். சில நிறைவேறாமலிருக்கலாம். உங்களுடைய வாழ்க்கை ஒரு வனாந்தரம்போல காணப்படலாம். கர்த்தர் என்னை மறந்துவிட்டார் என்று உங்கள் இருதயம் சோர்ந்துபோயிருக்கலாம். திடமனதாயிருந்து, விசுவாசத்துடன் கர்த்தருக்குக் காத்திருங்கள். கர்த்தர் தாமே, தாம் வாக்குப்பண்ணினதை நிச்சயமாய், ஏற்ற நேரத்தில் உங்களுக்கு நிறைவேற்றுவார்.

சங்கீதக்காரனைப்போல, "என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு" (சங். 42:5) என்று சொல்லுங்கள். கர்த்தர் கடந்த நாட்களில் உங்களுக்கு செய்த நன்மைகளை நினைத்து, அவரைத் துதியுங்கள். தற்போதுள்ள வனாந்தர வாழ்க்கையிலும், அவர் உங்களோடுகூட இருந்து, உங்களை பாதுகாப்பார் என்று விசுவாசித்து அவரில் களிகூருங்கள்.

"அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே" (எபி. 10:23). தேவபிள்ளைகளே, அவர் கைவிடாத உண்மையுள்ள தேவன். அவர் சொன்னதை நிச்சயமாகவே நிறைவேற்றுவார்.

நினைவிற்கு:- "உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரை வயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்" (ஏசா. 46:4).